செய்தி சுருக்கம் | 08 AM | 26-09-2024 | Short News Round Up | Dinamalar
ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் பிரதமரை சந்தித்து நிதி கோருகிறார் டெல்லிக்கி இன்று மாலை புறப்படும் முதல்வர் ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நிதி நிலுவைகள் குறித்த கோரிக்கை மனு அளிக்கிறார். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படியும், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான மத்திய அரசு பங்கு நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது குறித்தும் பிரதமரிடம் விவாதிக்க உள்ளார். தமிழகத்துக்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பாதிப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இன்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் அவரை தமிழக எம்.பிக்கள் வரவேற்க உள்ளனர். தொடர்ந்து நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசும் முதக்வர் ஸ்டாலின், நாளை இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம், நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்கும். அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.க்கு பதிலாக, 2.25 டி.எம்.சி. மட்டுமே, தமிழகத்துக்கு கிடைத்தது. ஜூலை முதல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஜூலையில் 31.5 டி.எம்.சி.க்கு பதிலாக 96.5 டி.எம்.சி.யும், ஆகஸ்ட்டில் 45.9 டி.எம்.சி.க்கு பதிலாக, 78.3 டி.எம்.சி.யும் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவ மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்துக்கான நீர் திறப்பையும், கர்நாடகா குறைத்துள்ளது. நடப்பு செப்டம்பர் மாதம் 36.7 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதில் 23ம் தேதி வரை, 28.1 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், 24.2 டி.எம்.சி. மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 3.9 டி.எம்.சி. நீர் நிலுவை வைக்கப்பட்டு உள்ளது. மாதவாரியாக நீர் திறப்பை பின்பற்றாமல், வெள்ள காலங்களில் நீர் திறப்பை அதிகரிப்பதை, கர்நாடகா வழக்கமாகக் கொண்டு உள்ளது. ஆனால், கர்நாடகா அரசின் நடவடிக்கையை, தமிழக அரசும், நீர்வளத் துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.