ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை
கோவை, ராமகிருஷ்ணாபுரத்தில் இயங்கும் இந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு 65 வயது. 12 ஆண்டுகளுக்கு முன் 104 மாணவ மாணவியருடன் செயல்பட்ட இப்பள்ளியின் தற்போதைய மாணவர் எண்ணிக்கை 441. பள்ளி: அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறை சார்ந்து மாணவர்களை சிந்திக்கத் துாண்டும், 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஸ்டெம்' ஆய்வகம் அமையப்பெற்ற கோவையின் முதல் நடுநிலைப்பள்ளி இது. கடந்த 2025ல் இந்த ஆய்வகம் மூலம் 'தீயணைக்கும் ரோபோ'வை உருவாக்கி தேசிய அறிவியல் கண்காட்சியில் சாதித்தது இப்பள்ளி. இங்கு, முப்பரிமாண சூழலில் பாடங்களை கற்க உதவும் 'மெய்நிகர் ஆய்வகம்' உள்ளது! பெருமை: 'நான் இரண்டாம் வகுப்பு மாணவியாக இப்பள்ளிக்கு வந்தேன். செவித்திறன் கருவி உதவியுடன் செயல்படும் எனக்கு, இப்பள்ளியின் ஆய்வகங்கள் சுலபமாக பாடங்களை புரிந்துகொள்ள உதவுகின்றன. என் ஓவிய ஆர்வத்திற்கு இப்பள்ளி தந்த ஊக்கமும் பயிற்சியுமே, கடந்த குடியரசு தினத்தில் மாவட்ட அளவில் நான் முதல் பரிசு பெற காரணம்!' செ.தாரணி, 7 ம் வகுப்பு கோரிக்கை: 'விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையால் பாராட்டப் பெற்றிருக்கும் எங்கள் பள்ளியின் கணினி ஆய்வகத்தில் ஒன்பது கணினிகள் மட்டுமே இருப்பதால், ஒரு வகுப்பு மாணவர்களை இரண்டு பிரிவாக்கி கற்பிக்க வேண்டியிருக்கிறது. கூடுதலாக 21 கணினிகள் கிடைத்தால் எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்!' ஜி.கே.ஆனந்த்குமார், தலைமை ஆசிரியர்