அன்பில் அவன்
காதல் பாதி... மோதல் மீதிமலைவாசஸ்தலத்தில் 'ஹோம் ஸ்டே' துவக்க விரும்பும் காதல் மனைவியின் கனவை நிறைவேற்ற முயல்கிறான் கணவன். ஏற்ற வீடு அமைந்தாலும் தொழிலை துவக்கவிடாது குடைச்சல் தருகின்றனர் உள்ளூர் ஆட்கள். காதலில் ஜெயித்த தம்பதியர் வாழ்க்கையிலும் ஜெயிக்க எந்த எல்லை வரை செல்கின்றனர்? கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடியை எதிர்க்கும் நாயகனின் சாகசமாக மட்டுமே இக்கதை இருந்திருந்தால், 'இந்த வாரம் என் காசு கரியாகணும்னு இருந்திருக்கு' என்று தலையில் அடித்துக் கொண்டு கிளம்பியிருக்கலாம். ஆனால், 'இக்காதல் தம்பதி ஜெயிக்க வேண்டும்' என்கிற உணர்வை துவக்கத்திலேயே ஏற்படுத்தி விடுகிறது ப்ரீத்தி முகுந்தன் - அசோக் செல்வன் ஜோடி. ' அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா லெவல் காதல் போல' என்று கருதும் அளவிற்கு 'பில்டப்' ஏற்றி இருப்பதால், அவர்களின் கனவு கோட்டை சிதறும்போது நமக்கும் வலிக்கிறது. இதற்கேற்ப வழக்கறிஞர், போலீஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட வில்லன்களும் வறட்டுத்தனமான உருட்டல், மிரட்டல் களை செய்யாமல் லேசாக தொடை நடுங்கவும் வைக்கின்றனர்! தம்பதிக்கு இடை யிலான குட்டி சண்டைகளை, பரஸ்பரம் மன்னிப்பு கேட்பதில் இருக்கும் காதலை, 'ஆக் ஷன்'களுக்கு மத்தியில் பரிமாறிக் கொண்டே இருப்பதால், திரைக்கதையில் காதலின் மணம் குறையவில்லை. 24 மணிநேரமும் தன்னை 'கெத்தாக' மட்டுமே கருதும் துருப்பிடித்த மனோ பாவத்தில் இருந்து, தன் கதையின் நாயகனை விலக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன்! 'தாமரை இலையாக காதல், அதன்மீதான நீர்த்துளியாக அடிதடி களம்' என்கிற அணுகுமுறையில் சாதித்திருக்கிறது கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை. 'நுாறு அரிவாள் வெட்டுக்கள் விழுந்தாலும் மீண்டெழும் நாயகன், முதல் வெட்டுக்கே வாய் பிளந்து சரியும் அடியாட்கள்' என்கிற சினிமா பாரம் பரியம், இதிலும் தொட்டுத் தொடர்வது மட்டும் ஏமாற்றம்! ப்ரீத்தி முகுந்தனின் முகம், அசோக் செல்வனின் வசன பாவம், இயக்குனரின் 'காதல் - மோதல் மிக்ஸிங்' இவற்றால் அன்பில் அவன் 'நம்மவன்' ஆகிறான். ஆக...ஏழு கடல் ஏழு மலை தாண்டாமலே ஒரு நல்ல காதல் அனுபவம்