அன்புள்ள ரசிகன்
அழகை பருக அலைகிறேன்பார்சுவநாதரே... சவுக்கியமா; என்ன... என்னை மறந்தாச்சா; நான்தான் உசிலம்பட்டி ராஜவேல். என்ன... 'ஏன்டா திரும்பத் திரும்ப வர்றே'ன்னு கேட்குற மாதிரி இருக்கு; என் 'ப்ளாஷ்பேக்'கை மறந்தாச்சா... ஞாபகப்படுத்தவா? இடம்: நாகமலை புதுக்கோட்டை சமணர்மலை, மதுரை. அரபுதேசத்துல அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியா 14 ஆண்டுகள் வேலைபார்த்து சலிச்சுப்போய் இங்கே வந்து கிடந்தேன். அது 2018ம் ஆண்டுன்னு ஞாபகம்; ஒரு நாள், தொல்லியல் ஆர்வலர் பராந்தக தமிழ்செல்வன் நடத்தின 'கல்வெட்டு வாசிப்பு' வகுப்புல கலந்துக்கிட்டேன். அந்த வகுப்பு தந்த பரவசம்தான் இப்போ நான் உங்க முன்னாடி நிற்க காரணம்! பயணம் தந்த பரிசு என் பயணங்களுக்கு ஒரே நோக்கம்தான்... கோவில்களை, சிலைகளை ரசிக்கணும். இதைத் தவிர்த்து என் பயணங்களுக்கான காரணம்னு அழுத்தமா ஒரு உண்மையை சொல்லணும்னா... அரபு நாட்டுல 'வணக்கம்' வைச்சே பழகின மனசுக்கு, இந்த மக்களோட அன்பை அள்ளி பருகணும்னு பேராசை! ஒருதடவை மும்பை அகல்யா நகர் பகுதியில, 4,672 அடி உயர ஹரிஷ்சந்திரஹட் மலை குடைவரையைப் பார்த்துட்டு வர்றப்போ, என்னை தன் வண்டியில ஏறிக்கச் சொன்ன லாரி ஓட்டுநர்... 'சிலைகளைப் பார்க்கவா தமிழ்நாட்டுல இருந்து தனியா வந்தே; இப்படி பாதுகாப்பு இல்லாம நீ வரலாமா'ன்னு உரிமையோட கண்டிச்சார். இந்த அக்கறை அரபு தேசத்துல எனக்கு அறிமுகமே ஆகலை! இதோ, இப்போ கூட இந்த உயரம் பார்த்து மலைச்சுப் போய் ஆறு வயசு சிறுமியோட ஒரு குடும்பம் அடிவாரத்துல இருந்து கிளம்பினப்போ, 'மலையேறலேன்னா என்ன... இந்தா இந்த செட்டிபுடவு குகையில இருக்குற மகாவீரர் அழகை பார்த்துட்டுப் போங்க; அவரோட அருள் பாப்பாவுக்கு கிடைக்கட்டும்'ன்னு சொல்லிட்டு தான் வந்தேன். இந்த மனசு என் பயணம் எனக்கு தந்த பரிசு! பயணம் தந்த அறிவு பார்சுவநாதரே... இப்போ நான் சொல்லப்போற ரகசியம் சின்னது... ஆனா, சிறப்பானது! பாண்டியனுக்கும், சோழனுக்கும் கிடைச்ச மாதிரியான கெட்டியான பாறைங்க பல்லவனுக்கு கிடைக்கலையாம்; அவனுக்கு கிடைச்சதெல்லாம் சாதாரண கல்லுதானாம்; ஆனாலும், சிலை வடிக்கிறதுல அவனும் சாதிச்சி ருக்கான்! பல்லவன் திறமை சொல்ற விழுப்புரம், பனைமலை கொற்றவை சிலையோட மந்தகாச புன்னகை; சோழனோட பெருமை சொல்ற அரியலுார், மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முருகனோட அழகு புன்னகை; பாண்டியனை பெருமைப் படுத்துறவிதமா துாத்துக்குடி கழுகுமலையில நிற்கிற உங்க கம்பீரம்... ம்ஹும்... இதை எல்லாம் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதுமா என்ன? சரி... நேரமாயிருச்சு; மனசு இல்லாமதான் நான் கிளம்புறேன்; கூடிய சீக்கிரமே திரும்பி வருவேன்.