உள்ளூர் செய்திகள்

என்ன விலை

கடந்த வாரம் சூரி... இந்த வாரம் கருணாஸ்இருவரின் வெற்றிக்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும், கதைக்கள தேர்வில் ஒன்றுபோல வென்றுள்ளனர். இனி தமிழ் சினிமாவில் கடலோர கதைக்களங்கள் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடுகையில் பக்தர்கள் கடலில் வீசும் நாணயங்களை மூழ்கி எடுப்பதும், கணவா மீன் பிடிப்பதும் ஏழை தவசி முத்துவின் வருவாய்க்கான வாசற்கதவு. தவசிமுத்துவுக்கு கடலில் கிடைக்கும் ஓர் ஆபரணம் அவரை நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது; தீர்ப்பு என்ன? எளிய மனிதர்களின் சட்டப் போராட்டத்தில் இருக்கும் வலிகளை காட்சிக்கு காட்சி சொல்லும் திரைக்கதை, பல இடங்களில் 1990களின் திரைக் கதை சாயலை கொண்டிருக்கிறது. ஆனாலும், மிதமிஞ்சிய வன்முறை சம்பவங்களால் புதர் போல் தெரியும் படைப்புகளுக்கு மத்தியில், சில பாத்திரங்களின் நற்குணத்தால் இப்படைப்பு துளசியாக மணக்கிறது! சிறுவர்களுக்கு நேர்மையை வலியுறுத்தும் கோடாரி கதையில் வரும் விறகுவெட்டியின் உள்ளம் கொண்ட தவசிமுத்து பாத்திரத்தில், வெள்ளந்தி தனம் இல்லா எளிமையை நடிப்பில் வார்த்திருக்கிறார் கருணாஸ். 'மானத்திற்கு என்ன விலை' என்று நீதிமன்றத்தில் நிமிஷா சஜயன் வழக்காடுகையில் வெளிப்படும் இயக்குனர் சஜீவ் பழூரின் தெளிவு, படம் மீதான நன்மதிப்பை ஒரு சாண் அளவு உயர்த்துகிறது; அரசு வழக்கறிஞர் சுவாமிநாதன் மற்றும் நீதிபதியின் எரிச்சலுாட்டும் வசன பாவங்கள் அந்த நன்மதிப்பை முழம் அளவில் சறுக்க வைக்கின்றன! 'சிஸ்டம் ஜெயித்து மக்கள் தோற்பதில் என்ன நன்மை இருக்கிறது' என்று சொல்லும் முதல்வராக சிறப்பு தோற்றத்தில் பிரபு வருகையில், இப்படியான தலைவருக்காக ஏங்குகிறது மனம். நாயகனின் வெற்றியை தனது வெற்றியாக பார்வையாளர்களை உணர வைத்துவிட்டாலே, அது பாதி வெற்றிக்கு சமம்; அவ்விடத்தை சுலபமாய் எட்டுகிறது இப்படம். ஆக...நல்லவனுக்காக கண்கலங்கி நீண்ட நாட்களாகிவிட்ட குறையை போக்கி விட்டீர் இயக்குனரே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !