கட்டா குஸ்தி 2
கலகலப்பான குடும்ப குஸ்தி'கட்டா குஸ்தி'யில் சாதிக்கத் துடிக்கும் கீர்த்தி; அவளுக்கு துணை நிற்கும் கணவன் வீரா; மகளை வளர்ப்பதில் கணவன் மனைவிக்கு இடையில் எழும் கருத்து வேறுபாடு எல்லை தாண்டிப் போக, ரத்தானதா அவர்களின் விவாகம்? ரயில்வே குடியிருப்பில் தண்ணீர் பிடிக்க பெண்களுடன் சண்டை போட்டபடி நாயகன் அறிமுகம்; 'குஸ்தி' களத்தில் எதிராளியை பந்தாடிய படி நாயகி அறிமுகம்; படத்தில் 'லாஜிக் பார்க்காதீர்கள்' என இப்படியாக புரிய வைத்து விடும் இயக்குனர் கடைசிவரை தன் தடம் மாறவில்லை! கீர்த்தியாக ஐஸ்வர்யா லட்சுமி; வீராங்கனையின் உடல்மொழியையும், தாய்மையின் மனவலியையும் அழகாக கடத்தி இருக்கிறார். வீரா பாத்திர வடிவமைப்பு நேர்த்தியால் விஷ்ணு விஷாலின் நடிப்பு தேறி விடுகிறது. 'பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்பது அவசியம்' எனப்பேசும் திரைக்கதை, ஆண் குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை சொல்லாமல் தவற விட்டிருப்பதும்... 'விளையாட்டில் பெண் கள் சாதிக்க வேண்டும்; அதற்கு குடும்பத்தினர் ஒத்துழைக்க வேண்டும்' எனும் அறிவு புகட்டும் ஆசிரியை பாத்திரத்தை கவர்ச்சியாக காட்டியிருப்பதும்... சிரிப்பில் தெரியும் ஓட்டை பற்கள்! அதேபோல், 'நான் ஹவுஸ் ஹஸ்பெண்ட்' என புதுமை பேசும் வீரா, ரயில்வே குடியிருப்பில் அக்கம்பக்கத்து பெண்களுக்கு சமையல், உடற்பயிற்சி பயிற்றுவிப்பதும் சில பழைய படங்களை நினைவூட்டி அயர்ச்சி தருகிறது. 'விருந்து படைத்த படங்களின் இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் ஏமாற்றமே தரும்' என்பது நம் அனுபவம். இந்த கட்டா குஸ்தி யிலும் இவ்வகை ஏமாற்றம் இருக்கிறது என்றாலும், அது ஒருசில காட்சிகளில் மட்டும்தான்! இரண்டாம் பாதியின் நீதிமன்ற காட்சிகளும், 'க்ளைமாக்ஸ்' கணவன் - மனைவி குஸ்தியும், 'வெற்றி பெற்ற முதல் பாகத்தின் நீட்சி நாங்கள்' என்று புஜம் காட்டுகின்றன. ஆக...'த.வெ.க., - தி.மு.க.,' குஸ்தியை நம் மனதில் இரண்டாம் இடத்திற்கு நகர்த்துகிறது இந்த கட்டா குஸ்தி