உள்ளூர் செய்திகள்

லாஸ்ட் மேன் இன் டவர் (ஹிந்தி)

மனிதம் கொல்லும் 'நெகிழி' பையோகேஷ் மிஸ்ரா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்; மனைவியை இழந்தவர்; தனியே வாழும் மகன், மருமகள், பேரனோடு தொடர்பில் இருப்பவர்; அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மிகப்பெரிய விலைக்கு வர, 'நகர மாட்டேன்' என பிடிவாதம் பிடிக்கும் அவரை பழகியவர்கள் நசுக்கி நகர்த்தும் கதை! 'டியூஷன் வகுப்புக்கு வாருங்கள்' என அழைத்ததும், குடியிருப்பின் மைதானம் காலியாகி மாணவர்கள் மிஸ்ராவின் வீடு நோக்கி ஓடுகின்றனர்; இது, அவர் மீது அக்குடியிருப்பாளர்கள் வைத்துள்ள மதிப்பை நமக்கு புரிய வைக்கிறது! 'நான் விலை போக மாட்டேன்' என்று மிஸ்ரா பிடிவாதம் பிடித்தபின், அவரது அதே அழைப்பை மாணவர்கள் நிராகரிக்கின்றனர்; இங்கு, பணத்திற்குரிய பெரும் மதிப்பு நமக்கு உணர்த்தப்படுகிறது! இப்படியாக நம் தோள் மீது கை போட்டு நெருங்குகிறது திரைக்கதை! ஒரு தொட்டிக்குள் உலவும் இரு வண்ண மீன்களின் சந்தோஷத்தின் மூலம், அவற்றை வளர்க்கும் முதிய தம்பதியின் மனநிலையை நமக்கு புரிய வைக்கும் யதார்த்த இயக்கம், மன வளர்ச்சியற்ற ஓர் இளைஞனை குழந்தை போல் பாவித்து வளர்க்கும் தாயின் மனத்துயரங்களை, மனதில் அவள் அழுத்தி ஒளித்து வைத்திருக்கும் ஏக்கங்களை... ஒரு 'நெகிழி' பையின் மூலம் உணர்த்துகையில்... லேசாய் நெஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது; 'இப்படி ஒரு முடிவை நோக்கித்தான் திரைக்கதை செல்லப் போகிறது' என்பதை யூகிக்க வைக்கும் காட்சிகளின் முடிவுகள் வேறுமாதிரியாய் நிறைவுற, 'க்ளைமாக்ஸ்' நோக்கும் எதிர்பார்ப்பு; நீளும் இந்த எதிர்ப்பார்ப்பில் சலிப்பு தட்டிவிடாமல் இருக்க, தந்தையும் மகனும் உரக்கப் பேசாது உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றனர். மின்சாரம், குடிநீர் துண்டிப்புக்கு பிறகும் பிடிவாதமாய் இருக்கும் மிஸ்ரா, தன் சொத்தை தந்து விட்டு செல்லும் விதம் மனம் கனக்க வைக்கிறது. இதற்கு காரணமாகும் அப்பெண்ணின் தரப்பில் நியாயம் இருப்பதும், பின் அப்புத்தி பின் புத்தியாக காட்டப் படுவதும் இப்படைப் பிற்கான அழகு அரியணைகள். மிஸ்ராவாக மனோஜ் பாஜ்பயீ; இவரது முடிவுக்கு காரணமாகும் பெண்ணாக திவ்யா தத்தா; இருவரின் நடிப்பும்... அற்புதம். ஆக....'அந்த' உலகில் அணைந்த 'அகல் விளக்கு' போலல்ல இது; நம் அக இருள் அகற்றும் 'அற்புத' விளக்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !