நுாறுகோடி வானவில்
'முக்கோண காதல்' கதையில் என்ன நிகழும்?'ஒரு காதலி - இரண்டு காதலன்' எனும் சூழலில், முதல் காதலன் காதலியின் கனவுகளை மதிக்க மாட்டான்; இரண்டாவது காதலனே அவளை உண்மையாக நேசிப்பான். அவளோ, குணக்கோளாறு கொண்ட முதலாமவனுக்காக இரண்டாமவன் மனதை நோகடித்து விடுவாள். காதலின் வாழ்வுதனை சூது கவ்வும்... க்ளைமாக்ஸில் காதலே வெல்லும்! மென்மையும், மேன்மையும் உள்ள மனித மனங்களைக் கொண்டு கதைகள் அமைக்கும் இயக்குனர் சசி, இந்த சாதாரண கதைக்கு என்ன திரைக்கதை அமைத்து உள்ளார் என்பதுதான் எதிர்பார்ப்பு; 'நமக்கு நாம நேர்மையான ஒரு வாழ்க்கை வாழ்றதுக்காக செய்ற எதுவுமே சரியானதுதான்' உள்ளிட்ட வசனங்களால் மழைக்காலத்தின் குளுமையை தந்திருக்கிறார்; 'பெண்ணின் மனதை இன்னும் அதிகம் படியுங்கள்' என்று ஆண்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதைக்கடந்து வேறொன்றும் புதுமையாக படைக்கவில்லை. 'பெரும் காலதாமதத்திற்கு பின் வெளியாகும் படைப்புகள் பின்தங்கிப் போகும்' நிலைமை இப்படைப்பிற்கும் ஏற்பட்டுள்ளது. தந்தையின் வெற்றிடத்தை நிரப்பும் ஆணின் மீது காதல் கொண்டு, பிறகு அக்காதலின் நிதர்சனம் புரிந்தாலும் அதிலிருந்து விலக முடியாது தவிக்கும் பெண்ணின் மனதை, சசி இன்னும் கொஞ்சம் அலசியிருக்க வேண்டும்! கதைக்களம் 'கோவா' என்பதால், 'சுற்றுலா' உணர்வோடு காட்சிகள் நகர்வது இனிமை! 'டிவி' நிகழ்ச்சியை இயக்கும் ஹரிஷ் கல்யாண், காதலனின் சிகிச்சை தேவைக்காக நிகழ்ச்சி தொகுப்பாளராகும் சித்தி இத்னானி, 'கோமா'வில் இருந்து மீண்டு வரும் முதல் காதலன், மன உரசல்களை ஏற்படுத்தும் 'டிவி' நிகழ்ச்சி என பல வழக்கமானவற்றால் நிறைய சோர்வு! தந்தையுடன் பேசாத நாயகன், திருமணம் ஆகாத தாய்மாமா, நாயகன் மீதான திருநங்கையின் காதல் உள்ளிட்ட சில ரசனைமிகு வண்ணங்கள் இந்த நுாறுகோடி வானவில் லில் இருப்பினும், மையக்கதையில் அழுத்தம் இல்லாததால் ஆழ்ந்து ரசிக்க இயலவில்லை. ஆக...'இது, 'சுமார்' தான்' என்பதில் எங்களுக்கு 100 சதவீதம் வருத்தமில்லை; நுாறு சாமி யா திரும்பி வாங்க சசி