மிஸ்டர் மூளைக்காரன்
சீனு விஜி வைகோ மற்றும் பலர்சீனு... சீனு... உனக்கு என்ன கேட்குது? 'தி.மு.க.,வுக்கும் த.வெ.க.,வுக்கும் இடையில தான் போட்டியே'ன்னு கேட்குது விஜி! லுாசா சீனு நீ; ஆட்சி அமைச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சு; இன்னுமா அப்படி கேட்குது? நம்பலேன்னா வா... நீயே காது வைச்சு கேட்டுப் பாரு! ஏய்ய்ய்... ஆமா சீனு... நீ சொன்னதுதான் எனக்கும் கேட்குது; இரு... இரு.... என்ன விஜி; வேற ஏதாவது கேட்குதா? 'மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுக்க நான் பக்கபலமாக இருப்பேன்'னு, தி.மு.க., முன்னாள் தலைவர் மு.கருணாநிதியோட கடைசி காலத்துல அவருக்கு வைகோ செஞ்சு கொடுத்த சத்தியம் கேட்குது. ஆனா, கொடகொடன்னு குரல் ரொம்ப உருளுது சீனு! அந்த சத்தியம் இனி அப்படித்தான் உருளும்; இவ்வளவு ஏன்... உடையும்; ப்ப்ப்ச்ச்... அதெல்லாம் உனக்குப் புரியாது; நீ இந்த பக்கம் வா... நான் கொஞ்சம் கேட்டுக்குறேன்! ஏன் சீனு சிரிக்கிறே... ஏதாவது 'ஜோக்' கேட்குதா? ஜோக்கா... சும்மா இரு விஜி; 'அண்ணன் வைகோ ரியல் ஹீரோ மட்டுமல்ல... கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ, எழுச்சிமிக்க ஹீரோ, உணர்ச்சிமிக்க ஹீரோ, ஒற்றை வரியில் சொல்வதானால் ஒரு போராளி ஹீரோ! 'உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல அண்ணன் வைகோ... கொள்கையில் உயர்ந்தவர், லட்சியத்திலும் உயர்ந்தவர்'னு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு பேசுனது எல்லாம் கேட்குது விஜி! ைஹய்யா ஜாலி... சீனு... சீனு... ப்ளீஸ் சீனு... கடைசியா ஒருதடவை நான் கேட்டுக்கவா? சரி... கேளு; ஆனா, ஒரு கண்டிஷன்; அவசர நிலையை அமல்படுத்தி தி.மு.க., தொண்டர் களை வதைச்ச இந்திராகாந்தியை, 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக'ன்னு 1980 பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்துல மு.கருணாநிதி வரவேற்றது கேட்டுச்சுன்னா, நீ அதை வெளியில சொல்லக்கூடாது; அதுக்குபதிலா, 'அந்த பாட்டு கேட்டுச்சு'ன்னு புளுகணும்... சரியா; வா... வந்து கேளு! ஆஹா... பிரமாதம்... அவர் எவ்வழியோ இவரும் அவ்வழி! என்ன விஜி... உனக்கு என்ன கேட்குது? எல்லாம் நீ சொன்னதுதான்; பூங்காற்று... புதிதானது...