உள்ளூர் செய்திகள்

சிலை வியக்கும் சிற்பி!

இதயங்களில் ஓர் இறைவிபிளஸ் 1 வகுப்பில் நுழைகிறேன்; புதிய முகம் ஒன்று 'கரகர' குரலோடு ஆசிரியையாய் எனக்கு அறிமுகமாகிறது. 'நான் திருநங்கை மரக்கா... உங்கள் தமிழ் ஆசிரியை; இதுதான் நான்... இதுதான் என் குரல்; 'மேடம் என்று என்னை அழைக்க வேண்டாம்; 'டீச்சர்' என்பது போதுமானது' என்கிறது குரல். அந்த மிடுக்கில், அக்குரலுக்கு சொந்தக்காரர் என் மனதில் கம்பீரமாய் அமர்ந்து விட்டார்! இந்த வார... சிலை: ச.சு.ஷோபனா, பிளஸ் 2 உயிரியல் சிற்பி: மரக்கா, தமிழாசிரியை கருவறை: லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குன்றத்துார், சென்னை மறக்கவே முடியாதவரா மரக்கா டீச்சர்? மறக்க கூடாதவர் மரக்கா டீச்சர்; கற்பிக்கும் பாடங்களுக்கு பொருத்தமான கவிதைகள் சொல்வதாலும், 'மேடை நாடக கலைஞர்' அனுபவத்தில் பாடங்களை புரிய வைக்க நடித்துக் காட்டுவதாலும், செய்யுள் பயிற்றுவிக்க பிரபல இசை மெட்டுகளை பயன்படுத்துவதாலும், பள்ளி விழாக்களில் பறையிசைத்து அசத்துவதாலும் மறக்க கூடாதவர் அவர்! இவற்றிற்கு மேலாக, அடிக்கடி 'தாய்மை' குறித்தான தன் ஏக்கம் சொல்லி, 'கருக் கலைப்பு செய்வது பாவம்' என்று விழிப்புணர்வு ஊட்டுபவர். இப்படி, என் ஆயுள் வரை இவரை மனதில் வைத்து பூஜிக்க எத்தனையோ நிகழ்வுகள் என் வசம் உண்டு. 'சிறப்பு குழந்தைகளுக்கான கல்வியில் பி.எட்., முடித்த இந்தியாவின் முதல் திருநங்கை' எனும் சிறப்பு பெற்றிருக்கும் 33 வயது மரக்கா, 2014ம் ஆண்டில் இருந்து சிறப்பு குழந்தைகள் பயிற்றுனராக அனுபவம் பெற்றவர். 2025 - 26 கல்வியாண்டு முதல் இப்பள்ளியின் தமிழாசிரியை ஆக பணியாற்றுகிறார். இந்த பொறுப்போடு எழுத்தாளர், பதிப்பக உரிமையாளர், நுாலக நிறுவனர், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர் உள்ளிட்ட பன்முகங்கள் இவருக்கு உண்டு. கடமைக்கு அப்பால் மரக்கா 'தீண்டாமை ஒரு பாவச் செயல்' எனும் உறுதிமொழியோடுதான் இவரது வகுப்புகள் அன்றாடம் துவங்கும். 'சிறு வயதில் இருந்தே மாணவர்களிடம் இச்சீரிய எண்ணம் முளைத்தால்தான் எதிர்காலத்தில் சமத்துவ சமுதாயம் அறுவடை ஆகும்' எனும் அவரது சிந்தனை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! பாலின முரண்பாட்டால் தான் எதிர்கொண்ட பெரும் மனக் காயங்களையும், கரடுமுரடான வாழ்க்கை பாதையையும், மாணவ, மாணவியரான எங்களிடம் அவர் பகிர்ந்துகொள்ளத் தயங்கியதே இல்லை. 'வெளிப்படைத்தன்மை பலவீனம் அல்ல... பலம்' என்பதை நான் உணர்ந்தது இவர் மூலம்தான்! பாடத்தில் மட்டுமல்ல... பதின்பருவத்து எங்களின் குழப்பங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல் எங்கள் மரக்கா டீச்சரிடம் இருக்கும். இவர் எங்களுக்கு ஆசிரியை மட்டுமல்ல... அன்னையும் கூட. உளியின் மொழி!'பள்ளி எனும் சிறுகூட்டில்இருந்து சிறகு முளைத்த பறவையாக கல்லுாரிக்குச் செல்லும் என் பிள்ளைகளிடம், 'இனி, கடிவாளம் அற்றது உங்கள் வாழ்க்கை; உங்கள் அருகில் இருப்பது திருநங்கையோ, மாற்றுத்திறனாளியோ, யாராயினும் உங்களை நேசிப்பது போல் அவர்களையும் நேசியுங்கள்' என்று வாழ்த்தி அனுப்புவது என் வழக்கம்!' - தமிழாசிரியை மரக்கா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !