உள்ளூர் செய்திகள்

ஒன்ஸ்மோர் (தமிழ்)

மனக்கண்ணில் விழுந்த துாசு அகற்றும் காதல்அதுவரை வீடெங்கும் பரவியிருந்த ஒளி வெள்ளத்தை விழுங்கி, இருள் கக்கும் மின்வெட்டு போலத்தான் காதல் முறிந்துபோகும் தருணமும்! 'இது நிரந்தர ஒளி' எனும் நம்பிக்கையில் திளைத்த ரகுவரனை போன்ற சில மனங்கள், மின் வெட்டுக்கு பிறகு இருளிலேயே வாழப் பழகி, ஒளிக்கு திரும்பும் பாதையை மறந்து விடுகின்றன! 'ஏன், எதற்கு' என்கிற காரணங்கள் ஏதுமின்றி இந்திரா விலகிய தருணமே, ரகுவரன் வாழ்வில் நிகழ்ந்த மின்வெட்டு. எட்டு ஆண்டுகள் கடந்து ரகுவிடம், 'உனக்கு ஒளியாக இருக்க எனக்கு ஆசை' என்கிறாள் அஞ்சலி. ஒளி மறந்து இருளில் வாழப் பழகிய அவன் மீண்டும் ஒளிக்கு திரும்புவதாக விரிகிறது மிச்ச திரைக்கதை! சோகத்தில் இருப்பவர்கள் மீது எழும் பச்சாதாபம், அடிப்படை மனித இயல்பு; இதை காதலாக பூசி மெழுகுவது, சோக நாயகனுக்காக நாயகி அழுவது என்று காட்சிப்படுத்தி, 'எதன் அடிப்படையில் காதல் மலரும்' என்பதற்கு தவறான முன்னுதாரணங்கள் வழங்கிய பெருமை பல இயக்குனர்களைச் சாரும்! இத்தகைய பச்சாதாப காதலுக்கு இடமளிக்காது, நேர்மறை காதலுக்கு வலு சேர்த்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்; இவர் போற்றும் காதலுக்கு, ஹேஷம் அப்துல் வஹாப் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அபிஷேகம் நடத்தியிருக்கிறார். 'இவ எதுக்கு திரும்ப வந்தா' என்று நம்மை கோபப்படுத்தி, 'சிறந்த நடிகை' விருது பெறுகிறார் சோனா ஒலிக்கல்; அதிதி ஷங்கருக்கு ஆறுதல் பரிசுதான். அர்ஜுன் தாஸ், ரகுவரனுக்கு இன்னும் நியாயம் செய்திருக்கலாம். 'ரகுவரன் - இந்திரா' இடையிலான 'க்ளைமாக்ஸ்' உரையாடல், நமக்கு எதிரே கண்ணாடி காட்டுகிறது. அதில் நமக்கு நாம் ரகுவரனாக தெரிகிறோமா, இந்திராவாக தெரிகிறோமா என்பதில் இருக்கிறது இப்படைப்பிற்கு நாம் தரும் மதிப்பு! 'சோக நாயகன், குறும்பு நாயகி, முன்னாள் காதலி வருகை, நாயகனின் தடுமாற்றம்' என பழகிய திரைக்கதையால் சுவாரஸ்யம் அடிவாங்கினாலும் இறுதியில் இதயம் இனிக்கிறது. ஆக...'கப்பலுக்கு புயல் எப்படியோ காதலுக்கு பிரிவு அப்படி' என்கிறான் நாயகன் ரகுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !