சில நேரங்களில் சில(ர்) ஞாபகங்கள்!
ஏழு கண்டங்களின் ஏழு சிகரங்களில் ஏறி சாதித்த தமிழகத்தின் முதல் பெண்மணி; 755 நாட்களுக்குள் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய பெண்மணி! மே 23, 2023ல் ஆசியாவின் 'மவுன்ட் எவரெஸ்ட்' உச்சி தொட்டதற்கு, தமிழக அரசின் 'கல்பனா சாவ்லா' விருது பெற்றவர்; ஜூன் 16, 2025ல், ஏழா வது கண்டமாக வட அமெரிக்காவின் டெனாலி சிகரத்தின் 20 ஆயிரத்து 310 அடி உயரத்தின் உச்சி முகர்ந்தவர்; இவர், விருதுநகர் மாவட்டம் ஜோகல்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி நாராயணன். இப்போ நான் சொல்லப் போறது என் ஞாபகங்கள் மட்டுமில்ல... என் நன்றிகள்! பள்ளிப் படிப்பு முடிச்சதுமே 18 வயசுல திருமணம். அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். மகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்க நான் ஹிந்தி கத்துக்க ஆரம்பிச்சேன். குழந்தைங்க வளர்ந்ததும் தொலைநிலை கல்வியில பி.சி.ஏ., முடிச்சேன். ' ஜாப்பனிஷ்' கத்துக்கிட்டதால, பன்னாட்டு நிறுவனத்துல பணிவாய்ப்பு கிடைச்சது. 30 வயசுல ரொம்பவே திருப்தியா சம்பாதிச்சேன். 'கத்துக்கிறதுக்கும், சாதிக்கிறதுக்கும் வயசு ஒரு தடையில்லை'ன்னு எனக்கு புரிய வைச்சது இந்த நாட்கள்! என்னவோ... மனசுக்கு முழு திருப்தி வரலை! மார்ச் 2021; ஸ்ரீபெரும்புதுார் மலையோட 155 அடி உயரத்துல இருந்து, கண்களை கட்டிக்கிட்டு 58 வினாடிகள்ல அடிவாரம் தொட்டேன். அந்த டிசம்பர் மாதம் என் மகள்களோட ஹிமாச்சல பிரதேசம் குலுமணாலியின் 165 அடி உயரத்துல இருந்து 55 வினாடிகள்ல அடிவாரம் தொட்டேன். 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வளரிளம் பருவத்தினரின் தற்கொலை' தடுக்கும் விழிப்புணர்வுக்கு இதை செய்தேன். அடுத்தகட்டம்... வில்வித்தை! குதிரையில அமர்ந்து அம்பெய்து வீரமங்கை வேலுநாச்சியாருக்கு வீரமா ஒரு அஞ்சலி செலுத்தணும்னு ஆசை. நான்கு லட்சம் ரூபாய்க்கு உபகரணங்கள் வாங்கினேன். நிறைய தடவை குதிரை என்னை எறி ஞ்சும் பயிற்சியை நான் கைவிடலை. ஜனவரி 26, 2022; மூன்று மணி நேரத்துல 1,389 அம்புகள், 87 புள்ளிகள்னு உலக சாதனை படைச்சேன். இதுக்கு முக்கிய காரணம் என் வில்வித்தை பயிற்றுனர் திருலோகசந்திரன். 'இது போதாது... இன்னும்... இன்னும்...'னு மனசுக்குள்ளே ஒரு குரல்! மே 23, 2023ல் எவரெஸ்ட் ஏறினேன்; வழி நெடுக சவால்கள்; குறிப்பா, ஆக்ஸிஜன் பற்றாக்குறை; சிகரம் ஏறுறப்போ மலையேற்ற வழிகாட்டி உதவினார். 29 ஆயிரம் அடி உயரத்துல இருந்து இறங்குறப்போ மயங்கி சரிஞ்ச என்னை, மெக்சிகோ ஆன்ட்ரூ மீட்டார். என் வெற்றிகளை தெரிஞ்சு வைச்சிருந்த நீங்க, அந்த வெற்றிகளுக்கு காரணமானவங்களை தெரிஞ்சுக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோ ஷம். 'கத்துக்கிறதுக்கும், சாதிக்கிறதுக்கும் வயசு ஒரு தடையில்லை'ன்னு எனக்கு புரிய வைச்சது இந்த நாட்கள்!