உள்ளூர் செய்திகள்

தி பாரடைஸ் (தெலுங்கு)

நாய் துரத்த, முட்டுச்சந்தில் முட்டி நிற்கும் அனுபவம்தன் இன மக்களை அடிமையாய் நடத்தும் வில்லனை எதிர்க்கும் நாயகன்; இதுவே 'புளித்த' கதை; இதில், தன் மகனை நாயகன் போட்டுத் தள்ளியதற்காய் கண்கள் சிவந்து சபதம் எடுக்கும் வில்லன்; தாயை தவறாக புரிந்து கொண்டு அவருடன் பேசாமல் இருக்கும் மகன்; இப்படி, திரைக்கதை முழுக்க புளிப்போ புளிப்பு! இறந்து போன சகோதரியின் நினைவாய் நாயகன் ஜடை பின்னிக்கொள்வது, அழகியல் உவமையில் இருந்து ஒதுக்கப்பட்ட காகங்களை ஓரின மக்களின் அடையாளமாக்கியது, என்.டி.ஆர்., மற்றும் சந்திரசேகர் ராவ் சாயல் பாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்தது என, மேற்சொன்ன புளிப்பு குறைக்க சிலபல வெங்காயங்களை நறுக்கிப் போட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா. 'நாவல் பாணியில் அத்தியாயங்களாய் பிரித்து திரைக்கதை அமைத்தால் புதுவிதமான சிந்தனையாக போற்றப்படும்' என்று கருதினார்களோ என்னவோ, அவசியமே இல்லாமல் துணை தலைப்பிட்டு கதை சொல்லி இருக்கின்றனர். கடவுளிடம் நாய் ஒன்று கண்ணீர் மல்க கால் கூப்பி வேண்டியதும் மழை பெய்து நாயகன் தப்பிப்பது எல்லாம்... எந்த ஊரு நியாயம் சாமி! ரத்த வெள்ளம், காது கூசும் வார்த்தைகள், மணிக்கணக்கில் நீளூம் சண்டை காட்சிகள், அலறும் பின்னணி இசை, எப்போதும் மழை பெய்து சேறும் சகதியுமாய் இருக்கும் வாழ்விடங்கள், சிதிலம் அடைந்த கலை பொருட்கள் என, வெள்ளித்திரை வழியாக இயக்குனர் நமக்குள் கடத்தும் யாவும் பெரும் அயர்ச்சி தருகின்றன! தன்னை ஓர் அழகான 'செட் பிராப்பர்டி'யாகவே பயன்படுத்துகின்றனர் என்பதை கயாடு லோஹர் சீக்கிரம் உணர்வது அவருக்கு மிகவும் நல்லது. 'ஓவர்டோஸ் மாஸ்' ஹீரோவாக நானியின் நடிப்பு குமட்டலைத் தருகிறது. இருக்கையில் சரிந்திருக்கும் நமக்கு எழுந்து செல்வதற்கான தெம்பை கொடுக்கிறது 'க்ளைமாக்ஸ்' தாய் சென்டிமென்ட்! ' டாக்ஸிக் படம் அவ்வளவு மோசமாவா இருக்கு' என்று அப்படம் பார்த்தவர்களிடம் நலம் விசாரித்தவர்கள், இதிலும் உஷாராய் தப்பித்துக் கொள்ளவும். ஆக...'அடிக்க மாட்டேன் வா' என்று நம்ப வைத்து வெளுத்து விடும் முரட்டு அப்பா போன்ற படம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !