நாங்க என்ன சொல்றோம்னா...: ஆபிசர் ஆன் ட்யூட்டி (மலையாளம்)
விறுவிறுவென வேகம் குறையாத பயணம்!தற்கொலையில் துவங்கும் முதல் காட்சி, 'நடந்தது கொலை' என்று நம் காதில் கிசுகிசுத்துவிட்டு நிறைவு பெறுகிறது; அடுத்ததாக, காவல் ஆய்வாளரான ஹரிசங்கரிடம் தங்க நகை குறித்த வழக்கு சுடச்சுட வருகிறது; எதையும் தீர விசாரிக்கும் ஹரிசங்கர், அந்த துக்கடா வழக்கு மூலம் கொடூர மனம் கொண்ட ஐவரை தேடுகிறார்; யார் அவர்கள்?'கவரிங்' நகையாக மாறிய தங்க நகை பற்றிய விசாரணை, இதற்கடுத்து ஓர் உயிர் பலி, இதிலிருந்து நுால் பிடித்தாற்போல் ஒரு ப்ளாஷ்பேக், அது முடிந்ததும் இரண்டு கவரிங் நகைகள் மீதான விசாரணை, அதன் முடிவை சொல்லிய கையோடு புதிதாக இரண்டு கொலைகள் நடக்கும் வீடு... இப்படியாக, 'சீட் பெல்ட்' அணியக்கூட அவகாசம் தராமல் பறக்கிறது முதல்பாதி!காவலர் பணியை ராஜினாமா செய்துவிட்டு கதையாசிரியரான ஷாகி கபீர் எழுதியிருக்கும் மூன்றாவது காக்கி கதை இது. 'கறைபடியா காக்கி - கறை படிந்த காக்கி' என இரு தரப்பை ஷாகி கபீரின் எழுத்து வடித்திருக்கிறது. வில்லத்தனம் காட்டும் ஐவர் கூட்டணி வழக்கமானதை தவிர்த்து வேறெதுவும் செய்யவில்லை.மனதில் ஆறாத சூட்டை செயலில் உணர்த்தும் காவல் ஆய்வாளராக குஞ்சாக்கோ போபன்; ஷெர்லாக் ஹோம்ஸ் புலனாய்வு பாணியில், சாத்தியமற்ற விஷயங்களை எல்லாம் நீக்கிவிட்டு உண்மையை கண்டுபிடிக்கும் விதம் அபாரம்! ஒரு பேருந்து பயணமே எல்லாவற்றுக்கும் துவக்கம் என்பதை கோர்த்தறியும் விதம் திரைக்கதையின் கிரீடம்!இரைச்சல் எழுப்பி 'மாஸ்' காட்டும் தொற்று வியாதி, மலையாள சினிமாவிலும் வேகமாக பரவுவதை சில காட்சிகள் உறுதிப்படுத்துவது மட்டும்... சிறு வேதனை.ஆக...'யார் அந்த சார்' என்றறியும் பொறுப்பை இவரிடம் ஒப்படைக்க விரும்புகிறான் தமிழன்!