உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!: உறவை கொண்டாடும் பாசப் பறவைகள்

வீட்டுக்குள் ஓர் குட்டி சரணாலயம்!: உறவை கொண்டாடும் பாசப் பறவைகள்

பகலெல்லாம் சுட்டெரித்த சூரியன் சுடர் சுருட்டி மலை முகட்டில் மதிமயங்கி சாயும் மாலை நேரமது... கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோட்டில் காலார நடந்தோம் கன்டென்ட் கிடைக்காதா என...ஓரிடத்தில் பறவைகள் சரணாலயத்தின் பரபரப்பு... ஆம், விதவிதமான பறவைகளின் கொஞ்சலும், கெஞ்சலுமான 'பேச்சு'கள் ஒலித்தன... மரங்களில் இருந்தல்ல... ஒரு கான்கிரீட் கட்டட வீட்டிலிருந்து... ஆச்சரியத்துடன் அங்கே அடியெடுத்து வைத்தோம். வாசலில் நின்றிருந்த பெண் வழிமறிக்க, 'பறவைகள் எங்களை அழைத்தன... வரலாமா' எனக்கூறி விவரம் தெரிவிக்க, வியப்புடன் பார்த்தார் அந்த வீட்டு ஓனர்.அவர் பெயர் சுதா. ஆர்வத்துடன் நம்மை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். ஹால் முழுவதும் பறவைகளின் கூண்டுகள். ' வா, நுா காவால்லய்யா..' சாங், சவுண்ட் சிஸ்டத்தில் முழங்க, அந்த பட ஹீரோயின் தமன்னாவுக்கே 'டப்' கொடுக்குற அளவுக்கு கழுத்தை வளைச்சு நெளிச்சு, உடலை ஆட்டிக்கிட்டிருந்துச்சு ஒயிட் காக்கட்டூ!

வியப்பில் ஆழ்ந்தோம்.

'சுதா...சுதா...! யாரிது, கெஸ்ட்டா'னு செல்லப்பேச்சில் கீச்சிட்டது ஒரு கிரே பேர்டு...'ம்ம்ம். கெஸ்ட்' தான்னு சொல்லி, 'அது கிட்ட' எங்களை அறிமுகப்படுத்தினார் சுதா. 'அழகா பேசுது' என ஆச்சரியப்பட்ட நம்மை பார்த்து, 'இதுக்கே... அசந்துட்டா எப்படி? மொட்டை மாடிக்கு வாங்கோன்னு வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார் சுதா.மொட்டை மாடி முழுக்க வித்தியாசமான விதவிதமான பேர்ட்ஸ். சுதாவோட குரல் கேட்டதும், அந்த இரும்புக் கூண்டையே தகர்த்துக்கிட்டு வெளிய வர்ற மாதிரி அங்கயும், இங்கயும் பறந்து கீச்சிட்டன பேர்ட்ஸ். ஒவ்வொன்றாய் அறிமுகப்படுத்தினார். ''இவங்க எல்லாரும் என்னோட குழந்தைங்க. ஆரம்பத்துல எனக்கு பேர்ட்ஸ்னா பெரிய இஷ்டமில்ல. ஆனா, கணவர் கண்ணன் பேர்ட்ஸ் லவ்வர். அவருக்காக தான், இவங்கள பாத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா இப்போ, பேர்ட்ஸ் இல்லாம என்னால இருக்கவே முடியாது'', என்றார் தாய்மை உணர்வுடன்.இவ்ளோ தான் பேர்ட்ஸான்னு கேட்டதும்,''செஞ்சேரிபுதுார்ல தோட்டம் இருக்கு. அங்க, 20க்கும் மேல வெரைட்டி பேர்ட்ஸ் இருக்கு. கவர்மெண்ட்ல அப்ரூவல் வாங்கிட்டு தான் வளர்க்குறோம்.அவங்ககிட்ட பேசலாமா''என,கண்கள் விரிய படபடத்தார். 'இங்கிருந்தா... அது எப்படி?' என்றோம். '' தோட்டத்துல வாய்ஸ் ரெக்கார்டு கேமரா இருக்கு. இப்போ பாருங்களேன்னு போன்ல கனெக்ட் பண்ணி காட்டினார். 'ஹே...பட்டூ...! பட்டுக்குட்டி' ன்னு சுதா பேசுன மறுநொடியில, போன் ஸ்பீக்கரே சூடாகுற அளவுக்கு பேர்ட்ஸ் சவுண்டு கொடுத்துச்சு. கொஞ்ச நேரம், ஹம்மிங் மூடுலயே இருந்துச்சு...சிறகை விரிச்சி, அதோட அலகால, சுதாவுக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடுச்சு... பறவைகளுடன் கொஞ்ச நேரம் பறவையாக வாழ்ந்த அனுபவத்தோட சாலைக்கு வந்தோம்...'பரபரப்பான உலகத்த பார்க்கவே பிடிக்கலை...' மனசு சொல்லுச்சு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி