மரணத்துக்குப்பின்... மீண்டும் ஜனனம்
''திடீரென நிகழ்ந்த ஷைனியின் பிரிவு உடைந்த கண்ணாடியின் ஒவ்வொரு துண்டிலும் சிதறி கிடக்கும் உருவம் போல, என்னை ஆக்கிரமித்தது. அதிலிருந்து கடக்கவே துாரிகையை கையில் எடுத்தேன். நிஜத்தின் சாயலை உருவாக்கினேன். அதை பார்க்கையில் மனம் சற்று நெகிழ்ந்ததால் நண்பர்கள், உறவினர்களின் செல்லப்பிராணிகளை, '3-டி போர்ட்ரைட்'டாக வரைந்து கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது; பிசினஸாக மாற்றி கொண்டேன்,'' என்கிறார் 'ஷைனி பா பிரிண்ட்ஸ்' (Shineys paw prints) உரிமையாளர் நித்தின்.கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஐ.டி., நிறுவனத்தில் பணிப்புரியும் இவர், செல்லப்பிராணிகளின் 3-டி ஓவியம் வரைகிறார். எது ஒரிஜினல் எது புகைப்படம் என நினைக்கும் அளவுக்கு, அச்சு அசலாக, தத்ரூபமாக இருக்கின்றன, இவரின் ஓவியங்கள்.இதுகுறித்து, செல்லமே பக்கத்திற்கு, இவர் பகிர்ந்தவை: என் பொழுதுபோக்கு ஓவியம் வரைவது தான். இதை முறையாக கற்றுள்ளேன். பணி அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் துாரிகைகள் தான் இளைப்பாறுதல் தந்தன. என் கோல்டன் ரெட்ரீவர் பப்பி (ஷைனி), இதய நோயால் திடீரென இறந்துவிட்டது. அதனுடன் செலவிட்ட பசுமையான நினைவுகளை ஓவியமாக வரைந்தேன். 3-டி ஓவியம் என்பதால், ஒரிஜினல் போலவே இருக்கும். என்னை போலவே, பப்பியை பிரிந்த சிலர் அணுகியதால், இதை பிசினஸாக மாற்றிவிட்டேன்.பப்பியின் முடி போன்ற அமைப்புக்காக, செம்மறியாட்டின் முடியில் இருந்து தயாரிக்கப்படும், 'மரினோ' நுால் பயன்படுத்துகிறேன். இது, நியூசிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறேன். மூக்கு, நாக்கு போன்ற அமைப்பை, களிமண் பயன்படுத்தி, இறுதி வடிவம் கொடுப்பேன்.புகைப்படம் மட்டும் அனுப்பி வைத்தால் போதுமானது. இந்தியா முழுக்க, பார்சலில் அனுப்பி வைக்கப்படும். உடல் பிரிந்தாலும், உருவம் உங்களுடனே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்பதால், செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு, இது நினைவு பொக்கிஷமாக மாறுகிறது. பிசினஸ் தாண்டி, இதில் ஆத்ம திருப்தியை காண்கிறேன்.தொடர்புக்கு: gmail.com