உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  மர்மோசெட் வளர்க்க ஆசையா?

 மர்மோசெட் வளர்க்க ஆசையா?

''நாய், பூனை, பறவை என வழக்கமான செல்லப்பிராணிகளை தாண்டி பூச்சி, பல்லி, ஓணான், பாம்பு என வித்தியாசமான வெளிநாட்டு இனங்களை வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இதில், மர்மோசெட் குரங்கு வளர்க்க ஆசைப்படுவோர், கட்டாயம் மத்திய அரசின் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்,'' என்கிறார் சஞ்சய். திண்டுக்கல் மாவட்டத்தில், 'ரியோ பெட்ஸ்' உரிமையாளரான இவர், வித்தியாசமான வெளிநாட்டு செல்லப்பிராணி வளர்க்கிறார். மர்மோசெட் குரங்கு பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை: அரியவகை வெளிநாட்டு செல்லப்பிராணிகளின் பட்டியலில், தற்போது அதிக வைரலாகி இருப்பது மர்மோசெட் குரங்கு தான். இதில், வெள்ளை காது, கறுப்பு காது, பிக்மி, அணில் போன்ற மர்மோசெட் என, 20-30 வகைகள் உள்ளன. தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த மர்மோசெட், 10-15 ஆண்டுகள் உயிர்வாழும். நம்மூரில் இருக்கும் குரங்குகளை விட வித்தியாசமான உடல்வாகு கொண்டுள்ளன. இரு ஒளிரும் கண்கள், வட்டமான சிறிய முகம், உடல் முழுக்க முடிகள், சிறிய நீண்ட வால் இருப்பதோடு, அதீத சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கு உணவு கொடுக்கும் போது செய்யும் சேட்டையை, ரசித்து கொண்டே இருக்கலாம். பிறந்து ஒரு மாதத்திற்கு பின், இதற்கு கையில் உணவு கொடுத்து, மனிதர்களுடன் இருப்பதற்கு ஏற்ற வகையில், பழக்கிய பிறகே இது விற்கப்படுகிறது. இப்படி பழக்கப்படுத்திய மர்மோசெட் மட்டுமே வாங்க வேண்டும். இவை எளிதில், மனிதர்களுடன் நெருங்கிவிடும். குழந்தைகளுடன் விளையாடும். பிரத்யேக பெல்ட் அணிவித்து, வெளியிலும் அழைத்து செல்லலாம். இதற்காக பிரத்யேக கூண்டு இருப்பது அவசியம். பழங்கள், வேகவைத்த கிழங்குகள், முட்டை, பூச்சி, புழுக்களை விரும்பி சாப்பிடும். இவை வீட்டிற்குள் இருப்பதே தெரியாது. அதிக சத்தமிடாது. தேவையில்லாமல் தொந்தரவு செய்யாது. பராமரிப்பதும் எளிது. மர்மோசெட் இனங்களுக்கு ஏற்ப, 4 - 50 லட்சம் ரூ பாய் வரை விற்கப்படுகிறது. இருப்பினும் இதை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோர், மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் (parivesh.nic.in) இணையதளத்தில் விண்ணப்பித்து, வளர்ப்பதற்கான உரிம சான்றிதழ் பெற்றிருப்பது மிக அவசியம். இல்லாவிடில், வனத்துறை பறிமுதல் செய்ய, சட்டத்தில் இடமுண்டு, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி