மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025
''அ டி பட்ட ஒரு பப்பியை, பூனையை மீட்டு சிகிச்சை அளித்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் போது மனதுக்குள் நெகிழ்ச்சி ஏற்படும். அதற்காகவே, வங்கிப்பணியை துறந்துவிட்டு 2020ல், விலங்குகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கினேன். ஆதரவற்ற தெருநாய், பூனைகளுக்கு காப்பகம்; தினசரி 4 ஆயிரம் தெருநாய்களின் பசியாற இலவச உணவகம் நடத்துகிறோம்,'' என்கிறார், சென்னையில் 'ஹோப் பார் கிரிட்டர்' தொண்டு நிறுவனம் நடத்தும் கீர்த்தனா ராம்சுகேஷ். அவர் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே நிறைய சமூகப்பணிகள் மேற்கொண்டுள்ளேன். இன்ஜினியரிங், எம்.பி.ஏ., முடித்து, 12 ஆண்டு வங்கியில் பணிப்புரிந்தேன். கொரோனா காலத்தில் நிறைய தெருநாய், பூனைகள் உணவில்லாமல் தவிப்பதை கண்டேன். திடீரென ஒருநாள் வேலையை ராஜினாமா செய்தேன். தெருவில் உள்ள விலங்குகளுக்கு அடி பட்டால் உதவ முடிவெடுத்தேன். 'ஹோப் பார் கிரிட்டர்' (Hope For Critter) தன்னார்வ தொண்டு நிறுவனம் துவக்கினேன். ஆரம்பத்தில், தெருவில் இருந்து மீட்கப்படும் விலங்குகளை என் வீட்டிலே தங்க வைத்தேன். நிறைய பப்பிகள் சேர்ந்ததால் கேளம்பாக்கத்தில் வாடகை இடத்தில் காப்பகம் ஆரம்பித்தோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதால் கானத்துாருக்கு மாற்றிவிட்டோம். மீட்பு பணிக்கு இரு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. கடந்த, 2022ல், திடீரென ஒருநாள் என் பப்பி உயிரிழந்தது. அதன் நினைவாக திருவான்மியூரில், 'வெற்றி பெட் புட் பேங்க்' நடத்தி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கே தினசரி, 550 கிலோ அரிசி சமைத்து, நான்காயிரம் தெருநாய்களின் பசியாற்றுகிறோம். எங்களிடம் பதிவு செய்துள்ள 41 உணவு வினியோகிப்பாளர்கள் வாயிலாக இதை மேற்கொள்கிறோம். தவிர, தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடத்துகிறோம். தத்தெடுப்பு முகாம் வாயிலாக இதுவரை, 400க்கும் மேற்பட்ட பப்பி, மியாவ்களுக்கு நிரந்தர முகவரி ஏற்படுத்தி தந்துள்ளோம். இந்த உலகில் நம்மை போல அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழ வேண்டும் தானே!' என்றார்.
29-Jul-2025