படிச்சத விட பிடிச்சத செய்யறேன்! ஜாலியா ஒரு ஸ்டார்ட் அப்
செல்லப்பிராணிகளுக்கு பிடித்த உணவு பொருட்களை கொண்டு கேக், கப் கேக், குக்கீஸ் போன்றவற்றை பல்வேறு 'பிளேவர்களில்' தயாரித்து விற்பனை செய்கிறார், கோவையை சேர்ந்த ஸ்ருதி. கேக் தயாரிக்கும் பணியில் பிசியாக இருந்த இவரை சந்தித்தோம்.பப்பிகளுக்கான கேக் பிசினஸ், ஐடியா எப்படி...நான், பெங்களூருவில், பி.டெக்., பேஷன் டெக்னாலஜி படித்தேன். அங்கே, செல்லப்பிராணிகளுக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்கள், வெகு விமரிசையாக இருக்கும். குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போல, உறவினர், செல்லப்பிராணி வளர்ப்போருக்கு அழைப்பு விடுத்து, பப்பிக்கு புத்தாடை அணிவித்து, கேக் வெட்டுவது, போட்டோ ஷூட் நடத்துவது என, கொண்டாட்டங்கள் களைகட்டும்.படிப்பு முடித்து வீடு திரும்பிய போது, பெங்களூருவின் டிரெண்ட், கோவையிலும் பின் தொடர்வது தெரியவந்தது. எனக்கு, 'கேக் பேக்கிங்' செய்வதில் ஆர்வம் இருந்ததால், செல்லப்பிராணிகளுக்கான கேக் தயாரிக்க வேண்டுமென, கரண்டியை கையில் எடுத்தேன்.நாம் சாப்பிடும் கேக்கில், மைதா, சர்க்கரை அதிகம் பயன்படுத்துவர். ஆனால், இவை சாப்பிட்டால், செல்லப்பிராணிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படும். இதனால், அவை விரும்பி சாப்பிடும் சிக்கன், மட்டன், பழங்கள், காய்கறிகள் கொண்டு கேக் தயாரித்தேன். இதை அலங்கரிக்க, காய்கறிகளை வேகவைத்து, மிக்ஸியில் அடித்து, கிரீம் போல டிசைன் உருவாக்கினேன்.நண்பர்கள், உறவினர் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த போது, அவை விரும்பி சாப்பிட்டன. நிறைய பேக்கிங் முயற்சிகளுக்கு பின், 'டாக் கேக்' (dog_cake_cbe) என்ற இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, என் தயாரிப்புகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஸ்டமர்களை சென்றடைந்துள்ளது.வெஜிடேரியன் விரும்பிகளுக்கு, ஆப்பிள், வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பல்வேறு சுவைகளில் கேக் தயாரிக்கிறேன். கஸ்டமர் விருப்பப்படி, அவர்களின் செல்லப்பிராணி விரும்பி சாப்பிடும் உணவு பொருட்கள் கொண்டும் கேக் செய்கிறேன். இதுதவிர, பீட்ரூட், பரங்கிக்காய், வாழைப்பழம், பீனட் பட்டர் பிளேவர்களில், பப்பிகளுக்கான 'குக்கீஸ்' தயாரிக்கிறேன்.இதை மிச்சம் வைக்காமல், பப்பி ருசித்து சாப்பிடுவதாக, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிப்பது தான், மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.