உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  பார்க்கத்தான் அப்படி பழகினா இப்படி

 பார்க்கத்தான் அப்படி பழகினா இப்படி

''ஒ ரு கண் கறுப்பு நிறத்திலும், மற்றொன்று ஊதா, சிவப்பு என வேறு நிறத்திலும் கருவிழி இருப்பது, சைபீரியன் ஹஸ்கி பப்பியின் தனித்துவம் என்றே கூறலாம். பார்ப்பதற்கு ஒரு குட்டி ஓநாய் போல இருந்தாலும், செல்லப்பிராணியாக வளர்த்தால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும்,'' என்கிறார், சென்னையை சேர்ந்த 'ப்ரீடர்' கவுத்தம். சைபீரியன் ஹஸ்கி ப்ரீடரான இவர், செல்லமே பக்கத்திற்காக நம்மிடம் பகிர்ந்தவை: சைபீரியா நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த ஹஸ்கி பப்பி, பனிப்பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை கொண்டுள்ளன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் இறக்குமதி செய்து, இங்கேயே இனப்பெருக்கம் செய்வதால் எல்லா தட்பவெப்ப சூழலிலும் வாழ்வதற்கு ஏற்ப, அதன் அடிப்படை தன்மை மாறிவிட்டது. இந்த பப்பியின் தனித்துவம் அதன் கண்களும், உடல் முழுக்க அடர்த்தியாக காணப்படும் உரோமங்களும் தான். இவற்றின் கருவிழி, 10க்கும் மேற்பட்ட நிறங்களில் உள்ளன. இதில், ஒரு கண் கறுப்பாகவும், மற்றொன்று ஊதா, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் இருக்கும் பப்பிக்கு, ரசிகர் பட்டாளம் ஏராளம். ஓநாய்க்கு இருப்பது போன்ற முடி அமைப்பும் இதற்குள்ளது. அடர்த்தியாக, தடிமனாக இருக்கும் இதன் முடி அமைப்பை கொண்டு, இதை மூன்று வகையாக பிரிக்கின்றனர். இதில், 'சூப்பர் உல்லி கோட்', 'உல்லிகோட்' ஆகிய இரண்டும் அதிக முடி கொண்டிருக்கும். 'ஸ்டாண்டர்டு கோட்' என்றழைக்கப்படுவது, சற்று குறைவான அடர்த்தி கொண்ட முடி அமைப்பாகும். இதை மட்டுமே, கண்காட்சிகளில் காட்சிப்படுத்த, கென்னல் கிளப் ஆப் இண்டியா அமைப்பு அங்கீகரித்துள்ளது. இது, 11-30 இஞ்ச் உயரம், 10-18 கிலோ எடை கொண்டிருக்கும். கிட்டதட்ட 13-15 ஆண்டுகள் உயிர்வாழும். இதற்கு மரபு ரீதியாக பரவும் நோய்கள் எதுவும் இல்லை. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது பனிப்பிரதேசங்களில் வேட்டைக்கு பயன்படுத்தியதால், தோற்றமே மிரட்சியை ஏற்படுத்தும். அதனால், தேவையில்லாமல் குரைப்பது, கடிப்பது போன்ற சேட்டைகளில் ஈடுபடாது. ஆனால், செல்லப்பிராணியாக வளர்த்தால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். எளிதில் உரிமையாளரிடம் நெருங்கிவிடும். இது பிறந்து, 3-6 மாதத்தில், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது, ஈறுகளில் வலி ஏற்படும். அப்போது மட்டும், வீட்டிலிருக்கும் பொருட்கள் எதையாவது கடிக்க முற்படும். இதற்கு முன்பே, வீட்டிலிருப்போர் சொல்வதை கேட்டு கீழ்படிய பயிற்சி அளிப்பது அவசியம். இவை இயல்பிலே சுறுசுறுப்புடன் இருப்பதால், பிரத்யேக உடற்பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமில்லை. உடலமைப்பில் வித்தியாசமாக இருப்பதால், ஹஸ்கி பப்பிக்கு 'க்ரஷ்' அதிகம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை