உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / அறிவோமா பூனைக்கான டயட்!

அறிவோமா பூனைக்கான டயட்!

இங்கிலாந்து, லண்டனில், பூனைக்கான ஊட்டச்சத்து குறித்த டிப்ளமோ படிப்பு முடித்து, அங்கேயே ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றுகிறார் கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த ஹரீஷ் சுப்ரமணியன்.

இவர், செல்லமே பக்கத்திற்காக பூனையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கான டயட் முறைகள் குறித்து பகிர்ந்தவை:

வெளிநாடுகளில் செல்லப்பிராணிகளுக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், கால்நடை மருத்துவர் மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து நிபுணர், பயிற்சியாளர் என, துறை ரீதியான வல்லுநர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். இந்தியாவில், செல்லப்பிராணிகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.குறிப்பாக, பூனை வளர்ப்பவர்கள், அதன் சைக்காலஜி, உணவு முறை, உடலியல் மாற்றங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஏனெனில், இது மிகவும் சென்சிட்டிவ்வான விலங்கு. இதற்கு வீட்டில் சமைத்த உணவு அல்லது தயிர் சாதம் மட்டுமே, கொடுக்க கூடாது. ஏனெனில், இவற்றில் அத்தியாவசிய நுண்ணுாட்டங்கள் இல்லை. இது தொடர்வதால் தான், உடலியல் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவது, அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவது, உடல் உறுப்புகள் செயலிழப்பு, கர்ப்ப கால சிக்கல்கள், குறைபாடுள்ள குட்டிகள் பிறப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புரோட்டீன்

பூனையின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றுவது புரோட்டீன் தான். இறைச்சி புரோட்டீன் மட்டுமே, பூனையால் முழுமையாக உட்கிரகிக்க முடியும். தானியங்களில் இருந்து கிடைக்கும் புரோட்டீனை, பூனையால் உட்கிரகிக்க முடியாது. ஒரு கிலோ எடையுள்ள பூனைக்கு அதன் வயதை பொறுத்து, நாளொன்றுக்கு, 5.7- 11.4 கிராம் புரோட்டீனை உணவில் சேர்ப்பது அவசியம். இதேபோல, சராசரியாக 10 கிராம் புரோட்டீன் இருக்கும் உணவில், 4 கிராம் கொழுப்பு சத்து கிடைக்குமாறு, பார்த்து கொள்ள வேண்டும்.

புரோ பயாடிக் (Pro Biotic)

பூனை அடிப்படையில் ஒரு மாமிச உண்ணி. இதன் உணவுக்குழாய் மிக சிறியதாக இருப்பதால், செரிமானம் நடக்க புரோ பயாடிக் அவசியம். இது, தயிரில் அதிகம் இருக்கிறது. ஆனால், பூனைக்கு பாலில் உள்ள லாக்டிக் அமில ஒவ்வாமை இருப்பதால், தயிராக கொடுக்காமல், மார்கெட்டில் கிடைக்கும் புரோபயாடிக் இணை உணவைமட்டுமே கொடுக்க வேண்டும்.

டாரின்

இது, பூனையின் வளர்ச்சிக்கான, மிக முக்கிய நுண்ணாட்ட சத்து. மூளை, இதயம், கண் சார்ந்த இயக்கத்திற்கு, இச்சத்து அவசியமாகிறது. சிவப்பு இறைச்சியில், இச்சத்து மிகுந்துள்ளது. இதை இணை உணவாக, பூனைக்கு தினசரி வழங்க வேண்டும். கமர்ஷியல் உணவுகளில், டாரின் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. இதேபோல, பூனையின் எலும்பு, மூட்டு வலுவடைய கால்சியம் சத்து அவசியம். மல்டிவிட்டமின், கால்சியம், டாரின், குளூக்கோசமின் போன்றவை, இணை உணவாக, கடைகளில் வாங்கி, உணவுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். பச்சை புற்களில், நார்சத்து கிடைப்பதால், பூனைக்கு அதை சாப்பிட கொடுக்கலாம்.

உணவு அட்டவணை

கமர்ஷியல் உணவு வாங்கும் போது, பாக்கெட்டுகளில் அச்சிட்டிருக்கும் உணவு அட்டவணை, அதன் அளவு ஆகியவற்றை கட்டாயம் பார்க்க வேண்டும். என்னென்ன சத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்வது அவசியம். 'குளூட்டன்' (Gluten) அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை, பூனைக்கு தொடர்ந்து அளித்தால் உடல் பருமன் அதிகரிக்கும். கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்.

தண்ணீர் அளவு

பொதுவாக பூனை குறைந்த அளவே தண்ணீர் உட்கொள்ளும். இதனால், அடிக்கடி சுத்தமான தண்ணீர் மாற்றுவது அவசியம். ட்ரை உணவுகள் கொடுத்தால், தண்ணீர் போதுமான அளவு எடுத்து கொள்கிறதா என கண்காணிக்க வேண்டும். வெயில் காலங்களில், ஈரப்பதம் மிகுந்த உணவுகளை சாப்பிட கொடுப்பதே நல்லது.

ஆரோக்கியத்தின் அளவீடு

பூனையின் வயிறு, அதன் இடுப்புக்கும், நெஞ்சுப்பகுதிக்கும் இடையில், நேராக இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், அதீத உடல் எடையாகும். போதுமான கொழுப்பு சத்தை விட, 20 சதவீதம் அதிகம் இருந்தாலே, பூனைக்கு ரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், எலும்பு மூட்டு பகுதிகள் பாதிப்படைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். சரிவிகித உணவின் அளவே, ஆயுட்காலம் வரை, நோயின்றி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என்பதை மறக்க வேண்டாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ