இந்திய ராணுவத்தில் இணைந்த முதல் நாட்டு இன கதாநாயகன் முதொல்
''இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட முதல் நாட்டு இன நாய் என்ற பெருமைக்குரியது, 'முதொல் ஹவுன்ட்' தான். நல்ல உயரம், வேகமாக ஓடும் திறன், பயிற்சி அளித்தால் எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தன்மை இருப்பதோடு, தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்து கொள்ளும் திறன் இருப்பதால், வேட்டையாடுதலுக்கு இந்த இன பப்பிகளை பயன்படுத்தலாம்,'' என்கிறார், திருப்பூரை சேர்ந்த நித்திஷ்.முதொல் ஹவுண்ட் இன நாய்களுக்கான பண்ணை வைத்திருக்கும் இவர், இந்த ப்ரீடின் சிறப்பம்சங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்தவை:பொதுவாக நாய்கள், ஓநாயின் உருவ அமைப்பு, குணாதிசயத்தை ஒத்திருக்கும். வேகமாக ஓடும் திறன், பயிற்சி அளித்தால் எதையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் திறன், நம் நாட்டு இன நாய்களுக்கு அதிகம் இருக்கிறது. இதிலும், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட முதொல் இன நாய், மற்ற வகை நாட்டு நாய்களை காட்டிலும், சற்று அதிக உயரம் கொண்டது. நீண்ட முக அமைப்பு, தலையை மறைக்கும் அளவுக்கு தொங்கும் காதுகள், 180 டிகிரி வரை பார்க்கும் வகையில் கண்கள், திடகாத்திரமான மேனி என, ராஜகம்பீரமான உடலைமைப்பு கொண்டது. இந்திய ராணுவத்தில், முதலில் சேர்க்கப்பட்ட நம் நாட்டு இன நாய், முதொல் ஹவுன்ட் தான்.எவ்வளவு துாரத்தில் இருந்தாலும், 'டார்கெட்'டை சீறிப்பாய்ந்து துரத்தி பிடிக்கும். தோட்ட பராமரிப்புக்கு ஏற்றது என்பதாலேயே, பலரும் விரும்பி வளர்க்கின்றனர். மிதமான, அதிக வெப்பத்தையும் தாங்கி கொள்ளும் தன்மை இருப்பதோடு, அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.நாய்களின் பல், தாடை அமைப்பு, உணவை கடித்து, விழுங்கும் வகையில் இருப்பதால், வேக வைக்காத இறைச்சியை சாப்பிட கொடுப்பதே சிறந்தது. சிலர் இறைச்சியில் உள்ள எலும்புகளை வேகவைத்து உணவுடன் சேர்த்து கொடுக்கின்றனர். இதை, கடித்து விழுங்கும் போது, தொண்டை வயிற்று பகுதியில், எலும்புகள் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.இதை அப்படியே சாப்பிட கொடுப்பதே சிறந்தது. வேக வைக்காத இறைச்சியை செரிக்கும் தன்மை, நாய்களுக்கு இருப்பதால், உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்படாது. இப்படி சாப்பிட்டால், சத்துக்குறைபாடு ஏற்படாது. சிலர், இறைச்சியை அப்படியே சாப்பிட்டால், நாய்கள் அக்ரசிவ்வாக மாறிவிடும் என, தவறான தகவல்களை பரப்புகின்றனர். இதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை.முதொல் ஹவுன்ட், வேகமாக ஓடும் திறன் கொண்டது என்பதால், வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க கூடாது. நீண்ட துாரம் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சியில் ஈடுபடுத்தும் போது மட்டுமே, ஆரோக்கியமாக வளரும். இது எளிதில் உரிமையாளருடன் நெருங்கிவிடும். குழந்தைகளை நம்பி விட்டு செல்லும் அளவுக்கு, பாசக்காரன். சின்ன வயதில் இருந்தே, சில அடிப்படை பயிற்சிகளை கற்று கொடுத்தால், வாழ்நாள் முழுக்க, அதை கடைபிடிக்கும்.நம் நாட்டு இன நாய்களின், நீண்ட, நெடிய மரபு ரீதியான சிறப்பம்சங்களை, அதன் தனித்துவமிக்க திறன்களை, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது அவசியம். வெறுமனே ப்ரீடிங் செய்து, வியாபார நோக்கத்திற்காக மட்டும் பப்பிகளை விற்காமல், அதன் உடல் திறன், தகுதித்திறனை ஆய்வு செய்து ப்ரீடிங் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.