மேலும் செய்திகள்
ஒயர்பாக்ஸ் டெரியர் அதீத புத்திசாலி
11-Oct-2025
தீபாவளி பலகாரங்களில் வேண்டும் தனிகவனம்
11-Oct-2025
திருவண்ணாமலை, 'ஆரணி ஸ்டார் பெட்ஸ்' என்ற பெயரில், கன்னி, சிப்பிப்பாறை இன பப்பிகளை இனப்பெருக்கம் செய்தல், பயிற்சி அளித்து, கண்காட்சிகளில் காட்சிப்படுத்துதல் என படுபிசியாக உள்ளார் சீனீவாசன். நாட்டு இன நாய்களை, சேம்பியன்களாக உருவாக்கி வரும் இவர், கன்னி, சிப்பிப்பாறை இன நாய்களின்தனித்துவம் பற்றி, நம்மிடம் பகிர்ந்தவை: தமிழகத்தின் தென்மாவட்டங்களை ஆட்சி புரிந்த பாளையக்காரர்கள், குறுநில மன்னர்களின் வரலாற்றில் கன்னி, சிப்பிப்பாறை நாய்களை வேட்டைக்காக பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன. கோட்டை, அரண்மனையை பாதுகாக்க, வேட்டைக்காக மன்னர்கள் செல்லும் போது, காட்டுவிலங்குகளை அடையாளம் காட்ட, வழிதவறி சென்றவர்களை மீட்க, என பல்வேறு பணிகளுக்கு, இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. காற்றை கிழித்து செல்லும் வகையில், ஊசி போல நீண்ட கூரிய முகம், மெலிந்த நீண்ட உடல்வாகு, ஆங்காங்கே முடுச்சு இருப்பது போன்ற மெல்லிய வால் என, தனித்துவ உடலமைப்பு இருப்பதால், கன்னி, சிப்பிப்பாறை இரண்டுமே, சிறுத்தையை போல, வேகமாக ஓடும். உலகிலேயே நாய் இனங்களில், வேகமாக ஓடும் திறன் கொண்டது, வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட சலுக்கி இன நாய். இது, மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு அடுத்தபடியாக, மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ., வேகத்தில் ஓடுபவை, கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் தான். இவ்விரண்டும் ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவை. இதில், கருப்பு, நிறத்தில் இருப்பவை கன்னி எனவும், மற்ற நிறங்களில் இருப்பவை சிப்பிப்பாறை எனவும், 'கென்னல் கிளப் ஆப் இண்டியா' அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு அதீத மோப்பத்திறன் உள்ளது. கொரோனா நோய் தொற்று வேகமாக பரவிய ஆரம்பகாலக்கட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, சிறுநீர் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி முடிவுகளை அறிவதில் காலதாமதம் ஏற்பட்டதால், மாதிரிகளை மோப்பம் பிடித்து கண்டறிய, கன்னி, சிப்பிப்பாறை நாய்களை தான், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தினர். மேலும் இவ்விரு இன நாய்களாலும், 360 டிகிரி வரை கண்களை சுழற்றி பார்க்க முடியும். இதன் கண்காணிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது. இவற்றை முறையாக பயிற்சி அளித்து, பாதுகாப்பு, மோப்ப பணிகள், காவலுக்கு பயன்படுத்தலாம். நாட்டு இன நாய்களுக்கு மிருதுவான முடிகளே இருப்பதால், பராமரிப்பது மிக எளிது. எல்லா தட்பவெப்ப சூழலிலும், வளரும் தன்மை கொண்டது. அதீத புத்திசாலி என்பதால், எதையும் எளிதில் கற்று கொள்ளும். கன்னி, சிப்பிப்பாறை ஆகிய இரண்டுக்கும்,கூச்ச சுபாவம் இருப்பதால், செல்லப்பிராணியாக வளர்ப்பதாக இருந்தால், பப்பியாக இருக்கும் போதே, பிறருடன் பழக அனுமதித்து, பயிற்சி அளிக்க வேண்டும். இது அதீதமாக விசுவாசம் காட்டும் என்பதால், பாதுகாப்பு பணிகளுக்கு வளர்ப்பதாக இருந்தால், உரிமையாளர் தவிர, யாரையும் உணவு கொடுக்க அனுமதிக்க கூடாது. சத்தான உணவு, முறையான பயிற்சி இருந்தால், அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை உயிர்வாழும். மேலும், இவ்விரு இன நாய்களின் ரத்தமும்,மற்ற இன நாய்களுக்கு, அவசர காலங்களுக்கு செலுத்த முடியும் என்பதால், 'யுனிவர்சல் பிளட் டோனராக' அங்கீகரிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள், நம் நாட்டு இன நாய்களுக்கு உள்ளன, என்றார்.
11-Oct-2025
11-Oct-2025