உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / குழந்தைகளின் பாதுகாவலன்!

குழந்தைகளின் பாதுகாவலன்!

''கு ட்டையான கால், நீளமாக வளைந்து செல்லும் வகையிலான உடல்வாகு இருப்பதால், டேஷண்ட் பப்பி, புதர்களில் ஒளிந்திருக்கும் சிறிய வகை விலங்குகளை கூட எளிதில் வேட்டையாடிவிடும். வேட்டை நோக்கத்திற்காக இதை இனப்பெருக்கம் செய்துள்ளதால் பாதுகாவலுக்கும் ஏற்றது,'' என்கிறார், கோவையை சேர்ந்த, டேஷண்ட் ப்ரீடர் கிஷோர் விக்னேஷ்வரன்.

'செல்லமே' பக்கத்திற்காக, இவருடன் ஒரு சந்திப்பு:

ஜெர்மன் நாட்டை பூர்வீகமாக கொண்ட டேஷண்ட் பப்பிக்கு, நீளமான தொங்கும் காது, பளீச்சென்ற கண்கள், முன்னங்கால் சற்று குட்டையாகவும், பின்னங்கால் சற்று வளைந்தும் இருப்பதால், குழந்தை தவழ்வது போன்ற நடை, நீளமான உடல் என பார்ப்பதற்கே, வித்தியாசமாக இருக்கும். இவை, 'மினியேச்சர்', 'ஸ்டாண்டர்டு' என்ற இரு அளவுகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மினியேச்சர் வகை பப்பி, 5 கிலோ வரை எடையும், 13-15 செ.மீ., உயரமும் கொண்டது. ஸ்டாண்டர்டு வகை பப்பி, 7-14 கிலோ வரை எடையும், 23 செ.மீ., வரை உயரமும் கொண்டிருக்கும். இந்த இரண்டு வகையிலும், மென்மையான, நீண்ட மற்றும் சற்று வளைந்தது போன்ற, மூன்று விதமான முடி அமைப்பு இருக்கும். கிட்டத்தட்ட ஆறு வண்ணங்களில், இப்பப்பியை காணலாம்.  இது, வித்தியாசமான உடல்வாகு கொண்டிருப்பதோடு, புத்திசாலியும் கூட.  புதிய ஆட்கள் யாரேனும் வந்தால், சத்தமிட்டே காட்டி கொடுத்துவிடும். திருடர்கள் இதன் பிடியில் இருந்து தப்பவே முடியாது.  நாய்களின் குணாதிசயம் அடிப்படையில், கண்காட்சிகளில் காட்சிப்படுத்த 11 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், டேஷண்ட் பப்பிக்கு தனி பிரிவே உள்ளது. சிறியதாக இருந்தாலும், பெரிய வகை ஆக்ரோஷமான நாய்களுடன் மல்லுக்கு நிற்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது.  இப்பப்பிக்கு அதிக உணவு கொடுத்து,பருமனாக்கி விட கூடாது. இதன் கால்கள் சற்று வளைந்திருப்பதாலும், குட்டையாக இருப்பதாலும், அதிக உடல் எடையை தாங்க முடியாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பயிற்சி அளித்தால், எதையும் எளிதில் கற்று கொள்ளும்.  என்னிடமுள்ள இந்த சார்லி பப்பி, 'கென்னல் கிளப் ஆப் இண்டியா' சார்பில், கடந்தாண்டு நடத்திய நாய் கண்காட்சிகளில், டேஷண்ட் பப்பிகளுக்கான பிரிவில், தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதோடு, பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது. இவனை தவிர, 10 டேஷண்ட் பப்பிகள் என்னிடம் உள்ளன. இவை குடும்பத்தில் உள்ளோரிடம் எளிதில் நெருங்குவதோடு, குழந்தைகளை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் தரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !