நடிகனென்று மாறியாச்சு நாங்கெல்லாம் ஒரே பிஸி
இந்தியா மட்டுமல்லாமல் நேபாளம் வரை, கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோமீட்டர் சாலை வழியாக ஊர் சுற்றியிருக்கிறது, 'ப்ளோயி' என்ற மியாவ். இதன் துறுதுறு கண்களையும், சின்ன சின்ன ரியாக் ஷன்களையும் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் பார்க்கலாம். மும்பையை சேர்ந்த மணிஷா, ஹிடேஷ் தம்பதியினரின் செல்லக்குட்டியான, ப்ளோயி பயண அனுபவங்களை கேட்க தொடர்பு கொண்டோம்.அவர்கள் நம்மிடம் பகிர்ந்தவை:பூனையால் நீண்ட துாரம் பயணிக்க முடியுமா?
பொதுவாக, பூனைகள் வீட்டிற்குள், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழ விரும்புபவை. ஆனால், ப்ளோயியை பொறுத்தவரை, வெளியிடங்களுக்கு பயணம் செய்வது, புதிய ஆடைகள் அணிவித்தால் செல்பி எடுக்க 'போஸ்' கொடுப்பது, சொல்வதை புரிந்து கொள்வது என, சமத்தாக நடந்து கொள்ளும். வெளியிடங்களுக்கு எடுத்து சென்று வீடு திரும்பினால், சுறுசுறுப்பாக, ஆர்வமாக இருப்பதை பார்க்க முடிந்தது. இதற்கு பயணம் செய்ய பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே, ஊர் சுற்ற ஆரம்பித்தோம்.துவக்கத்தில், மும்பையை சுற்றி சில இடங்களுக்கு அழைத்து சென்றோம். பயணத்திற்கு பின், ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என, ஆய்வு செய்தோம். புதிய இடம், புதிய நபர்கள், புதிய வாசனையை பார்த்தால், ப்ளோயி குஷியாகிவிடுவதை அறிந்த பிறகே, அண்டை மாநிலங்களுக்கு டூர் செல்லும் ஐடியா வந்தது.புதிய முயற்சியாக இருக்கட்டுமே என்ற அடிப்படையில் தான், நேபாளம் வரை, சாலை வழியாக பயணித்தோம். அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அந்தந்த ஊர் தட்பவெப்ப நிலைக்கேற்ப, ப்ளோயிக்கு தேவையான உணவுகள், ஓய்வு நேரம், பயண நேரத்தை திட்டமிட்டோம்.பயணத்தின் போது சந்தித்த சவால்கள் என்ன?
ப்ளோயியை பொறுத்தவரை, அதன் ஆரோக்கியத்தில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால், செல்லப்பிராணியுடன் வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்குவதற்கு வெகுசில ஓட்டல்களே உள்ளன. செல்லப்பிராணிகளை அனுமதிக்கும் டாக்ஸி, ஆட்டோக்கள் குறைவு. பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகளவில் இல்லை. செல்லப்பிராணிகள் சார்ந்த வணிகம் பெருகிக்கொண்டே வரும் சமயத்தில், அதுசார்ந்த வசதிகளையும் விரிவாக்க வேண்டும்.உங்கள் பூனையின் நடிப்பு அனுபவம் பற்றி
ஆதித்யா பிர்லா குரூப், பண்டலுான், வோக்ஸ்வேகன், ஹயாட் மற்றும் ஐ.டி.சி., குரூப் ஆப் ஓட்டல்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின், தொலைக்காட்சி, டிஜிட்டல் விளம்பரங்களில் நடித்துள்ளது. இது பிறந்து ஆறு மாதத்தில் இருந்தே, போட்டோ, வீடியோ எடுத்து வருவதால் கேமரா முன்பு நடிப்பதில், அதற்கு சிரமம் ஏற்படவில்லை. நாங்கள் என்ன சொன்னாலும் புரிந்து கொண்டதால், ஷூட்டிங் பணிகள் விரைந்து முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். எங்களுக்கே சில நேரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, க்யூட்டாக போஸ் கொடுக்கும்.பூனை வளர்ப்பவர்களுக்கு ஆலோசனை?
பூனை மிகவும் சென்சிட்டிவ்வானது. அதனிடம் தினசரி தெரியும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். அதற்கு பிடிக்காத விஷயங்களை செய்யவே கூடாது. கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். திடீரென புதிய தட்பவெப்ப சூழலுக்கு கொண்டு செல்ல கூடாது. அதனுடன் விளையாடுவதற்கு, உணவளிப்பதற்கு நேரம் ஒதுக்கினால், பூனைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதை உணர முடியும்.