உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்

அ.தி.மு.க., அதிரடியால் ஆளுங்கட்சியினருக்கு உதறல்

திண்ணையில் அமர்ந்து நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''நம்மூர்ல நடந்த நா.த., கூட்டத்துக்கு பின்னணி காரணம் இருக்குதா,'' என, நோண்டினாள்.''ஆமாக்கா... த.வெ.க., தலைவர் விஜய் நடத்திய பூத் முகவர்கள் மண்டல மாநாட்டுக்கு, திரண்டு வந்திருந்த இளைஞர்கள் கூட்டத்தை பார்த்து, தன்னுடைய ஆதரவாளர்கள், நண்பர்களிடம் விஜய் செயல்பாடு சம்பந்தமா, அந்த கட்சி தலைவர் ஆலோசனை செஞ்சிருக்காரு,''''ஓட்டு வங்கி குறைஞ்சிடும்; இளைஞர்கள் விஜய் கட்சிக்கு தாவிடுவாங்கன்னு வெளிப்படையா பலரும் பேச ஆரம்பிச்சதால, நம்மூர்ல கூட்டம் நடத்தி, கட்சி பலமா இருக்கு; இளைஞர்கள் எங்கள் பக்கம்தான் இருக்காங்கங்கிறதை காட்டுறதுக்கு, முயற்சி செஞ்சிருக்காரு,''''கூட்டத்தை பிரமாண்டமா நடத்த ஏற்பாடு செஞ்சாங்க. 100 பஸ், 200க்கும் மேற்பட்ட மினி பஸ், கார், பைக்குல, வெவ்வேற மாவட்டங்கள்ல இருந்தும் கட்சிக்காரங்க வந்திருந்தாங்க. 10 ஆயிரம் இருக்கை போட்டிருந்தாங்க; அதையும் மீறி கூட்டம் நின்னுக்கிட்டு இருந்துச்சு,'' என்றபடி, காபியை பருகினாள் மித்ரா.

விஜய் கட்சி ஸ்பீடு

''விஜய் கட்சிக்காரங்க ரொம்பவே ஸ்பீடா இருக்காங்களாமே...''''ஆமாக்கா... பூத் வாரியா 'பப்ளிக்'கை சந்திச்சிட்டு வர்றாங்க. அவுங்க போற இடத்துல, பப்ளிக் ஆதரவு எதிர்பார்க்கறத விட, அதிகமாவே கெடைக்குது. இதெல்லாம், விஜய் கட்சியை எதிரா பார்க்குற கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கு. அடுத்த மாசம் விஜய்க்கு பிறந்த நாள் வருது; நலத்திட்ட உதவிகள் வழங்கி, தடபுடலா கொண்டாடப் போறாங்களாம். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிஞ்சதும், முழு நேர அரசியல்ல விஜய் களமிறங்கினா, தேர்தல் ஆட்டம் வேற விதமா இருக்கும்னு த.வெ.க.,காரங்க சொல்றாங்க...''

ஆளுங்கட்சி மிரட்சி

''அ.தி.மு.க., தரப்பிலும் பூத் கமிட்டி வேலையை, படுஜோரா செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாமே...''''கிணத்துக்கடவு தொகுதிக்கு பொறுப்பாளரா, 'மாஜி'யின் மைத்துனரை நியமிச்சிருக்காங்க. கட்சியினருடன் இணைந்து எலக்சனுக்கு படுவேகமா தயாராகிட்டு இருக்காங்க. இதை பார்த்து தி.மு.க.,வினர் மிரண்டு போயிருக்காஙக. குறிச்சி ஏரியாவுல இருக்கற ஏழு வார்டுல ஆளுங்கட்சிக்காரங்க ஈடுகொடுக்க முடியாம, திணறிட்டு இருக்காங்களாம்.இதே மாதிரி, காரமடை ஏரியாவிலும் அ.தி.மு.க., கை ஓங்கியிருக்கு. ஏதாச்சும் பிரச்னைன்னு தகவல் வந்தா, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், 'ஸ்பாட்' டுக்கு வந்துடுறாரு; அவரை பின்தொடர்ந்து, பா.ஜ.,வினரும் வந்துடுறாங்க. ஆட்சி அதிகாரம் இருந்தும் தி.மு.க.,காரங்க எதுவும் செய்ய முடியாம முழிக்கிறாங்க. அதனால, உடன்பிறப்புகள் கொந்தளிப்புல இருக்காங்க. இந்த விவகாரம், மேற்கு மண்டல பொறுப்பாளரான செந்தில்பாலாஜி காதுக்கு போயிருக்கு. இந்த ஏரியாவுல ஆளுங்கட்சி நிர்வாகிகள் மாற்றம் விரைவில் நடக்கும்னு எதிர்பார்க்குறாங்க...''

தாடிக்காரருக்கு ஆசை

''அதெல்லாம் இருக்கட்டும்... தாடிக்காரருக்கு மறுபடியும் எம்.எல்.ஏ., 'சீட்' கொடுக்கக் கூடாதுன்னு உடன்பிறப்புகள் கொடி பிடிக்கிறாங்களாமே...''''ஆமாக்கா... 2016 தேர்தல்ல, அவிநாசி தொகுதியில 'தாடிக்காரர்' போட்டியிட்டு, 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்துல தோத்துப் போனாரு. 2021ல அவருக்கு வாய்ப்பு கொடுக்காம, கூட்டணி கட்சிக்கு ஒதுக்குனாங்க; 2026ல 'சீட்' வாங்குறதுக்கு பகீரத முயற்சி பண்ணிட்டு இருக்காரு. அன்னுார் ஒன்றியத்துல இருக்கற நிர்வாகிகள், கடுமையா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க. உடன்பிறப்புகளே எதிர்ப்பு குரல் எழுப்புறதுனால, 'தாடிக்காரர்' தரப்பு 'அப்செட்'டுல இருக்குது,''''இருந்தாலும், யார் யாருக்கு தொகுதியில செல்வாக்கு இருக்குன்னு, மருமகனின் ரெண்டெழுத்து டீம் ஏற்கனவே சர்வே எடுத்திருக்கு. வேட்பாளர்கள் பட்டியல்ல இருக்கறவங்க பின்னணிய, உளவுத்துறை மூலமா சரிபார்த்துட்டு இருக்காங்க. ஜெயிக்க வாய்ப்பில்லைன்னு தகவல் வந்தா, வேறொருத்தரை செலக்ட் பண்றதுக்கு ஏதுவா, தொகுதிக்கு மூனு பேர் பட்டியல் தயார் செஞ்சிருக்காங்களாம். கொங்கு மண்டலத்துல, 25 தொகுதிகளை கரூர்க்காரர் கட்டுப்பாட்டுல கொடுக்கப் போறாங்களாம். அதனால, அவர் முடிவே இறுதியானதா இருக்கும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க,''

கவுன்சிலர்களுக்கு பட்டுவாடா

''கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு, இந்த மாசத்துக்கான பணப்பட்டுவாடா முடிஞ்சிருச்சாமே...''''அதுவா... ஊட்டிக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பிப் போனாரு. அன்னைக்கு 'கொடிசியா'வுக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்கு வரச்சொல்லி கவுன்சிலர்களுக்கு அழைப்பு வந்திருக்கு. ஒரு லட்சத்துல இருந்து அஞ்சு லட்சம் ரூபா வரைக்கும் பதவிக்கு தகுந்த மாதிரி, கவர் போட்டு தயாரா வச்சிருந்தாங்களாம். ஆளுக்கொரு கவர் கொடுத்திருக்காங்க. சந்தோஷமா வாங்கிட்டு, ஏர்போர்ட் போயி, முதல்வரை சென்னைக்கு வழியனுப்பி வச்சிருக்காங்க,''

அ.தி.மு.க., காட்டம்

''கார்ப்பரேஷன் கவுன்சில் கூட்டத்துல கம்யூ., கட்சி கவுன்சிலரை, அ.தி.மு.க., கவுன்சிலர், வார்த்தைகளால் நாறடிச்சிட்டாராமே...''''அதுவா... பீளமேடு ஏரியாவுல மயான வளாகத்துல குப்பை மாற்று நிலையம் அமைக்கக் கூடாதுன்னு 'பப்ளிக்' சொல்றாங்க. சிங்காநல்லுார் எம்.எல்.ஏ.,வும் அசெம்ப்ளியில பேசியிருக்காரு. கார்ப்பரேஷனோ, அதேயிடத்துல கட்டியே தீருவோம்னு விடாப்பிடியா இருக்கு. இதுசம்பந்தமா, அ.தி.மு.க., கவுன்சிலர் கவுன்சில் கூட்டத்துல பேசுனாரு...''''இதை புரிஞ்சிக்காத கம்யூ., கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாரு. கோபமான அ.தி.மு.க., கவுன்சிலர், 'நீங்கள்லாம் ஒரு கம்யூனிஸ்ட்டா... கம்யூனிஸ்ட்டுனா மக்களுக்காக போராடுவாங்க... நீங்க... என்னடான்னா... தி.மு.க.,வுக்கு ஜால்ரா போடுறீங்கன்னு நேருக்கு நேராவே திட்டிட்டாரு. இதையெல்லாம் மற்ற கம்யூ., கவுன்சிலர்கள் பெருசா எடுத்துக்கிடலை,''''கார்ப்பரேஷனுக்கு எதிரா, மா.கம்யூ., கட்சிக்காரங்க போராட்டம் அறிவிச்சிருக்காங்களே...''''அதெல்லாம் நடக்குமான்னு தெரியலை. ஆளுங்கட்சி தரப்புல இருந்து, கம்யூ., மேலிட நிர்வாகிகளிடம் பேசி, சாந்தப்படுத்திடுவாங்கன்னு சொல்றாங்க. இருந்தாலும், சம்பிரதாயத்துக்காக, கார்ப்பரேஷனுக்கு முன்னாடி, ஆர்ப்பாட்டம் செய்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க...'' என்ற மித்ரா, நகர்வலம் செல்ல, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

போலீசாருக்கு 'பரேடு'

பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''ஆயுதப்படை போலீஸ்காரங்களுக்கு, 'செம டோஸ்' விழுந்துச்சாமே...'' என, கேட்டாள்.''ஆமாக்கா... பி.ஆர்.எஸ்., கிரவுண்டுல ஆயுதப்படை போலீஸ்காரங்களுக்கு வாரந்தோறும் 'கவாத்து பயிற்சி' நடக்கும். கொஞ்ச நாளாவே, சில போலீஸ்காரங்க, 'டிமிக்கி' கொடுக்கறதா, ஆபீசர்ஸ் காதுக்கு தகவல் போயிருக்கு. 'ஆப்சென்ட்' ஆகுற போலீஸ்காரங்க 'லிஸ்ட்' கேட்டிருக்காரு கமிஷனர். பயிற்சிக்கு வராதவங்க யார், யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு, அவுங்களை நேரில் வரச்சொல்லி, 'பரேடு' கெளப்பியிருக்காரு. கவாத்துப் பயிற்சிக்கு ஒழுங்கா வரலைன்னா இனிமே ஆக்சன் வேற விதமா இருக்கும்னு 'வார்னிங்' கொடுத்திருக்காராம். அதனால, ஆயுதப்படை போலீஸ் வட்டாரம் ஆடிப்போயிருக்கு,''

லேடி ஆபீசருக்கு டார்ச்சர்

பாலசுந்தரம் ரோட்டில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை பார்த்த சித்ரா, ''அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் 'லேடி' ஆபீசரை சரிக்கட்டுறதுக்கு உடன்பிறப்புகள் ஏகப்பட்ட 'டார்ச்சர்' கொடுக்குறாங்களாமே...'' என கேட்டாள்.''அதுவா... அந்த கோவில் ஆபீசர், நிர்வாக ரீதியா கடுமையான நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறார். கோவிலுக்கு தொடர்புடைய உடன்பிறப்புகள், அவரை சரிக்கட்டுறதுக்கு முயற்சி செஞ்சாங்க. எதற்கும் மசியாத அவரு, போலீசுல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு. கடுப்பான உடன்பிறப்புகள், லேடி ஆபீசரை பின்தொடர்ந்து போறது; வழிமறித்து ஏதாச்சும் தொந்தரவு செய்றது; நைட் நேரத்துல வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புறதுன்னு, சம்பந்தமே இல்லாம வம்புக்கு இழுத்துட்டு இருக்காங்களாம்... உயரதிகாரிகள்கிட்ட ஆலோசனை செஞ்சிட்டு, போலீசுல கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறதா பேசிக்கிறாங்க,'' என்றபடி, காந்திபுரம் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

ரிசல்ட் லேட்

அவ்வழியாக வந்த கல்வித்துறை வாகனத்தை கவனித்த சித்ரா, ''நம்மூர்ல பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் தேர்வு முடிவை ஒழுங்கா வெளியிடலையாமே...''''அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க. 'ரிசல்ட்' தேதியை பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவிச்சிடுச்சு. இருந்தாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாம, எஜூகேசன் ஆபீசர்ஸ் பலரும் பொள்ளாச்சியில நடந்த மீட்டிங்கிற்கு போயிட்டாங்க. அதனால, நம்மூர்ல மட்டும் ரிசல்ட்டை லேட்டா வெளியிட்டாங்க. அதிலும், பிளஸ் 1 தேர்ச்சி விபரங்கள்ல முக்கியமான தகவல் 'மிஸ்ஸிங்' ஆகியிருந்துச்சு. ஆபீசர்ஸ் மீட்டிங்ல இருக்கறதா சொல்லி, தகவல்களை வெளிப்படையா சொல்லாம தவிர்த்துட்டாங்க. இதை விட கொடுமை என்னான்னா... கார்ப்பரேஷன் ஸ்கூல் பிளஸ் 1 ரிசல்ட்டை வெளியிடாம விட்டுட்டாங்களாம்...'' என்ற மித்ரா, ''மின்வாரிய போர்மென் மறுபடியும் கைவரிசைய காட்ட ஆரம்பிச்சிட்டாராமே...'' என கேட்டாள்.''ஆமாப்பா... உண்மைதான்! சுந்தராபுரம் அலுவலகத்தை சேர்ந்தவரை தானே கேட்குறே. மின்வாரிய ஆபீசர்ஸ் 'வார்னிங்' கொடுத்ததும் கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிச்சாரு. இப்போ, மறுபடியும் கலெக்சன் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. மின் இணைப்பு கேட்டு வர்றவங்கள்ட்ட, ஏதாச்சும் ஒரு வழியில வசூல் செய்றாராம்...அவர் மேல துறை ரீதியா நடவடிக்கை எடுக்காம, மின்வாரிய ஆபீசர்ஸ் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. 'விஜிலன்ஸ்ல' மாட்டி ஜெயிலுக்கு போனாத்தான் விழிப்பாங்க போலிருக்கு...'' என்றாள் சித்ரா. காந்திபுரம் கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி