உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / கேஸ் போடாம போலீஸ் வசூல் வேட்டை

கேஸ் போடாம போலீஸ் வசூல் வேட்டை

சிறுவாணி அடிவாரம் வரை செல்ல வேண்டியிருந்ததால், சித்ராவும், மித்ராவும் காரில் புறப்பட்டனர்.சீட் பெல்ட் அணிந்து கொண்டு, காரை ஓட்ட ஆரம்பித்தாள் சித்ரா.பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மித்ரா, ''என்னக்கா, அசெம்ப்ளி எலக்சன் பிரசாரத்தை நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'டுல இருந்து ஏ.டி.எம்.கே., ஆரம்பிக்கப் போகுதாமே... சென்டிமென்ட் ஒத்து வருமா...''''ஆமாப்பா... கொங்கு மண்டலம் ஏ.டி.எம்.கே., கோட்டையா இருக்கறதுனால, அடுத்த வாரம் மேட்டுப்பாளையத்துல இருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கிறாங்க. முதல் ரவுண்ட்டுல மேட்டுப்பாளையத்திலும், கவுண்டம்பாளையத்திலும் இ.பி.எஸ்., பிரசாரம் செய்யப் போறாராம். மேட்டுப்பாளையத்துல வனபத்ர காளியம்மனை வணங்கி, பிரசாரத்தை துவங்கப் போறாங்களாம். எதிரிகளை வீழ்த்துறதுக்கு காளி துணையிருப்பாள்னு நம்புறாங்க. ஆளுங்கட்சியை மிரட்டுற அளவுக்கு கூட்டத்தை திரட்டுறதுக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு 'மாஜி' உத்தரவு போட்டிருக்காராம்...''''இருந்தாலும் பூத் கமிட்டி அமைக்கற வேலை, இன்னும் முழுசா முடியலையாமே...''''ஆமாப்பா... அதுவும் உண்மைதான்! சில தொகுதிகள்ல பூத் கமிட்டி அமைக்கிற வேலை சுணக்கமா இருக்குதாம். யாரு செலவு செய்றதுங்கிற பிரச்னையும் ஓடிட்டு இருக்கு. தொகுதி யாருக்கு; வேட்பாளரு இன்னாருன்னு வாய்மொழியில சொல்லி, வேலையை ஆரம்பிக்கச் சொன்னா, ஜெட் வேகத்துல செய்வாங்க.யாருன்னு தெரியாததால, கரன்சியை வெளியே எடுக்க கட்சி நிர்வாகிங்க தயங்குறாங்க. தொகுதியை பக்காவா ரெடி பண்ணிட்டு, கூட்டணிக்கோ அல்லது வேற யாருக்கோ ஒதுக்கிட்டா, செலவழிச்ச தொகை வீணாப் போயிடும்னு நெனைக்கிறாங்க. எதிர்க்கட்சி 'மாஜி'யும் பெட்டியை திறக்க மாட்டேன்கிறாருன்னு, ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க... இருந்தாலும், தேர்தல் பிரசாரத்தை நம்ம மாவட்டத்துல இருந்து ஆரம்பிக்கிறதுனால, ரத்தத்தின் ரத்தங்களுக்கு புது உற்சாகம் கெளம்பியிருக்கு,''

ஏமாற்றி கட்சி பதவி

''அதெல்லாம் சரி... ஆளுங்கட்சி மாஜியை ஏமாத்தி, கட்சி பதவி வாங்கிட்டாங்களாம். சில பதவிக்கு 'ல'கரத்துல கரன்சி கைமாறி இருக்குதுன்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்களே...'' என்றபடி, பேரூரை கடந்ததும், பேக்கரி முன், காரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா.''உண்மைதான்க்கா... செக் மோசடி வழக்குல சிக்கி, மூனு வருஷத்துக்கு முன்னாடி ஜெயிலுக்குப் போன, நான்கெழுத்து உடன்பிறப்புக்கு இப்போ பகுதி கழக செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க. அவரு, சிட்டி லிமிட்டுக்குள்ளேயே வச்சிக்கலையாம்; வேடபட்டி ஏரியாவுல குடியிருக்காராம். அவருக்கு சிட்டிக்குள்ள பொறுப்பு கொடுத்திருக்காங்க,''''இதே மாதிரி, 39வது வார்டு, 40வது வட்ட செயலாளர்களுக்கே தெரியாம, புதுசா நியமிச்சிருக்கற பொறுப்பாளர் ஒருத்தரு, தன்னிச்சையா கூட்டம் ஏற்பாடு செஞ்சதா, ஆளுங்கட்சிக்குள்ள புகைச்சல் ஓடிட்டு இருக்கு; தலைமைக்கும் 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு.சில பகுதி கழகத்துக்கு சம்பந்தமே இல்லாம, பக்கத்து வார்டை சேர்ந்த நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க. கரன்சி வாங்கிட்டு கட்சிப் பதவிகளை தாரைவார்த்திருக்கிறதா உடன்பிறப்புகள் கொந்தளிக்கிறாங்க. மாவட்ட பொறுப்புல இருக்கற நான்கெழுத்து நிர்வாகி ஒருத்தரு, 'அடேங்கப்பா'ன்னு சொல்ற அளவுக்கு, கலெக்சன் வேட்டையாடி இருக்கறதா புகார் போயிருக்கு,''

ஆளுங்கட்சி அடாவடி

தேங்காய் பன், காபி ஆர்டர் கொடுத்த சித்ரா, ''டாஸ்மாக் 'பார்' நடத்துற குத்தகைதாரர்களை ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு குரூப் மிரட்டுதாமே...'' என, கேட்டாள்.''மதுக்கடை விஷயத்துல, ஆளுங்கட்சிக்காரங்க அடாவடி தாங்க முடியலையாம். இருகூர் ஏரியாவுல டெண்டர் எடுத்த ஆளுங்கட்சி பிரதிநிதி, தென்மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு, 20 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு கொடுத்திருக்காரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 20க்கும் மேற்பட்டவங்க, பார்-க்குள்ள அதிரடியா நுழைஞ்சு கலாட்டா பண்ணியிருக்காங்க. கடையை பூட்டி, சாவியை எடுத்துட்டுப் போயிட்டாங்களாம். பார் குத்தகைக்கு வாங்குனவரு பணத்தை திருப்பிக் கேட்டதுக்கு, அதெல்லாம் தர முடியாது. கடையை வேற பார்ட்டிக்கு கை மாத்தியாச்சுன்னு திமிரா சொல்லியிருக்காங்க,''''இதே மாதிரி, வடவள்ளி, தொண்டாமுத்துார் ஏரியாவிலும் பார் நடத்திட்டு இருந்தவங்க, யார்கிட்ட போயி, பணத்தை திரும்ப வாங்குறதுன்னு தெரியாம புலம்பிட்டு இருக்காங்க. இருகூர் ஏரியாவுல பார்ல தகராறு நடந்தப்போ, போலீஸ் பேட்ரோல் வாகனத்துக்கு தகவல் போயிருக்கு. கொஞ்ச நேரத்துல, அவுங்களும் 'ஸ்பாட்' டுக்கு வந்துட்டாங்க. என்கொயரியில, ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம்னு தெரிஞ்சதும், உங்களுக்குள்ள சமூகமா பேசிட்டு போங்கப்பான்னு சொல்லிட்டு கெளம்பிட்டாங்களாம்,''

கல்லா கட்டும் போலீஸ்

''அக்கா... இதாவது பரவாயில்லை... மதுக்கரையில நடந்த விவகாரத்தை கேட்டீங்கன்னா, வாயடைச்சு போயிடுவீங்க...,''''அப்படி என்ன நடந்துச்சு... கொஞ்சம் விளக்கமா சொல்லேன்...''''சொல்றேன்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மதுக்கரை ஏரியாவுல புதுசா கட்டுன வீட்டில பூஜை வச்சிருந்தாங்க. கட்டட மேஸ்திரி ஒருத்தரு உள்ளிட்ட ஏழு பேருக்கு புது டிரஸ் எடுத்துக் கொடுத்து கவுரவிச்சிருக்காங்க. டிரஸ் வாங்கிட்டு திரும்பி போனப்போ, அந்த ஏரியாவுல இருக்கற பார்ல சரக்கு அடிக்க போயிருக்காங்க.அங்க, ஒரு குரூப் அவுங்களை மிரட்டி, தகராறு செஞ்சிருக்கு. மேஸ்திரியையும், உடனிருந்தவங்களையும் தாக்கி புது டிரஸ், ரெண்டு மொபைல் போன், 4,500 ரூபாய் பணத்தை பறிச்சிட்டு போயிட்டாங்க. இதெல்லாம், 'சிசி டிவி' கேமராவுல பதிவாகியிருக்காம்,''''பாதிக்கப்பட்டவங்க, இது சம்பந்தமா, மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லியிருக்காங்க. நடந்ததை முழுசா கேட்டுட்டு, திருப்பி அனுப்பிட்டாங்க. கேஸ் ஏதும் போடல. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் போயி கேட்டதுக்கு, மொபைல் மிஸ்ஸிங்னு புகார் எழுதி கொடுங்க, ரசீது தர்றோம். அதை எடுத்துட்டு சைபர் கிரைம் பிரிவுல சொல்லுங்க. மொபைல் போன்களை மீட்டுத் தருவாங்கன்னு அசால்ட்டா சொல்லியிருக்காங்க,''''வழிப்பறி நடந்துருக்கு; பக்காவா 'சிசி டிவி' காட்சி ஆதாரமும் இருக்கு. கேஸ் பைல் பண்ணாம, தட்டிக் கழிக்கிற வேலைய, மதுக்கரை போலீஸ்காரங்க செஞ்சிட்டு இருக்காங்க. இதே பொழப்பு தான் இங்க நடக்குது. வழிப்பறி ஆசாமிகளோட சேர்ந்து மாமூல் வாங்கிட்டு போலீஸ்காரங்க செயல்படுறதா சந்தேகம் வந்திருக்கு. உளவுத்துறை போலீஸ்காரங்க 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க...''

நட்புக்காகத் தானாம்!

''வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி இறப்புக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், தி.மு.க., நிர்வாகிகளும் அவரது வீட்டுக்குப் போயி, துக்கம் விசாரிச்சாங்களே... என்னவாம்...''''அமைச்சரா இருந்தப்போ, ரெண்டு பேருக்கும் நல்ல நட்பு இருந்துச்சாம். சக எம்.எல்.ஏ.,ங்கிற மரியாதை நிமித்தமா வந்துட்டு போனதா சொல்றாங்க. கட்சி தலைமையில அனுமதி வாங்கிட்டு, மாவட்ட பொறுப்பாளருங்கிற முறையில, செந்தில்பாலாஜி போயிட்டு வந்ததாவும் சொல்றாங்க.

கவர்மென்ட் ஆக்சன் இல்லை

''மித்து... உளவுத்துறை அனுப்புற ரிப்போர்ட்டுகளை, கவர்மென்ட் தரப்புல மதிக்கிறதே இல்லையாம். சி.எம்., கவனத்துக்கு கொண்டு போறதே இல்லைன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே, 'பில்டர்' பண்ணி, அவருக்கு தெரியாம மறைச்சிடுறதா, போலீஸ் தரப்புல சொல்றாங்க...''''உதாரணத்துக்குச் சொல்றதா இருந்தா, கார்ப்பரேஷன் ஆபீசர்களை பத்தி, ஏகத்துக்கும் 'கம்ப்ளைன்ட்' வருது. அதை 'என்கொயரி' செஞ்சு, உண்மையான தகவல்களை கவர்மென்ட்டுக்கு அனுப்புறாங்க. இதுவரைக்கும் ஒரு ஆபீசர் மேலயும் ஆக்சன் எடுக்கலை. இனியும் நடவடிக்கை எடுக்கலைன்னா, 2026 எலக்சன்ல ஓட்டு வாங்குறது கஷ்டம்னு, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் புலம்பிட்டு இருக்காங்க...''

'ஹாயாக' வலம்

தேங்காய் பன் சாப்பிட ஆரம்பித்த மித்ரா, ''ஆயுதப்படையில இருக்கற சில போலீஸ்காரங்க எந்த வேலையும் செய்யாம, ஊதாரித்தனமா சுத்திட்டு இருக்காங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.''அதையேன் கேக்குறே... ஆபீசர் ஆதரவு இருக்கறதுனால, 'யூனிபார்ம்' கூட போடாம, காலத்தை ஓட்டிட்டு இருக்காங்களாம். ஆனா, சிலருக்கு 'ரெஸ்ட்' கொடுக்காம வேலை வாங்குறாங்க; சிலருக்கு வேலையே கொடுக்காம ஜாலியா சுத்த விடுறாங்கன்னு, ஆயுதப்படை போலீஸ்காரங்க புலம்புறாங்க,''''ஆபீசர்ஸ் ஆபீஸ்கள்ல டியூட்டி பார்க்குற சிலர், ஆபீசரின் அனுசரணையால, பல வருஷமா ஒரே இடத்துல வேலை பார்க்குறாங்க. மற்றவங்களுக்கு 'டிரான்ஸ்பர்' கொடுக்குற மாதிரி, இவுங்களுக்கு ஏன் கொடுக்கறதில்லைன்னு காக்கிகளுக்குள் கசமுசா ஓடிட்டு இருக்கு,''

காப்பீடு இருந்தால்தான் சிகிச்சை

பேக்கரியில் பணம் கொடுத்து விட்டு, காரை ஸ்டார்ட் செய்த மித்ரா, ''கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு வர்றவங்க ரொம்பவும் அவஸ்தைப்படுறதா சொன்னாங்களே...'' என கேட்டாள்.''ஆமாப்பா... உண்மைதான்! முதல்வர் காப்பீடு அட்டை இல்லாதவங்களுக்கு அறுவை சிகிச்சை செய்றதுக்கு, ரொம்ப தயக்கம் காட்டுறாங்க. மருத்துவ காப்பீடு லிமிட்டுக்குள்ள வராதவங்களை, பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போகச் சொல்றாங்களாம். அதுக்காக, அறுவை சிகிச்சையை தேவையில்லாம லேட் பண்றதா, கம்ப்ளைன்ட் கெளம்பியிருக்கு,''மித்ராவின் மொபைல் போன் சிணுங்கியது. அழைப்பை ஏற்று, பேச ஆரம்பித்தாள்.மெல்லிய ஒலியில், இளையராஜா பாடலை ஒலிக்க விட்டு, காரை ஓட்டினாள் சித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை