எஸ்.பி.,கிட்ட போகுது சேவல் பஞ்சாயத்து ; கண்டுக்காத துணை; கடுப்பான மாவட்டம்
பொங்கல் விடுமுறை கொண்டாட, கொடிவேரி அணைக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் நீர்வீழ்ச்சியில் ஜாலியாக குளித்து விட்டு, கரையில் இருந்த தட்டுக்கடையில் சாப்பிட்டனர்.அங்கு காட்சிக்கு வைத்திருந்த மீனை, மித்ரா தேர்வு செய்து எடுத்துக் கொடுத்தாள். உடனே பொரித்து, சுடச்சுடக் கொடுத்தனர்.மீன் குழம்புடன் சாப்பிட ஆரம்பித்த சித்ரா, ''மித்து! இந்த அணையிலதான் 'வருஷம் 16' படத்துல வர்ற டான்ஸ் சீன் எடுத்தாங்க...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அப்படியா...'' என கேட்ட மித்ரா, ''நம்ம அக்ரி யுனிவர்சிட்டி வளாகத்துல சூர்யா, திரிஷா நடிக்கிற பட ஷூட்டிங் நடந்திருக்கு. அவுங்களை அரசியல் கட்சி வி.ஐ.பி., ஒருத்தரு சந்திச்சு, கல்யாண பத்திரிகை கொடுத்ததா கேள்விப்பட்டேன்...'' என்றாள். ஆளுக்கு ஒரு லட்சம்
பொரித்த மீனை ருசித்த மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருத்தருக்கும், பண்டிகை பணம்னு ஒரு லட்சம் ரூபா அள்ளிக் கொடுத்திருக்காங்களாமே...'' என கேட்டாள்.''ஆமாப்பா... உண்மைதான்! கவுன்சிலர்களுக்கு மட்டுமில்ல, வார்டு செயலாளருக்கு, 25 ஆயிரம் ரூபா, பகுதிக்கழக செயலாளர்களுக்கு ஒரு லட்சத்துல இருந்து ஒன்னரை லட்சம் ரூபா, மத்த நிர்வாகிங்களுக்கு அஞ்சாயிரம், மூவாயிரம்னு போஸ்ட்டிங்கிற்கு ஏத்த மாதிரி, வாரி எறச்சிருக்காங்க. அதனால, ஆளுங்கட்சி தரப்புல தடபுடலா பொங்கல் விழாவை கொண்டாடியிருக்காங்க...''''இதே மாதிரி... மாசா மாசம் பணம் கொடுக்க, ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்குதாமே...''''அதுவா... 2026 எலக்சன்ல ஜெயிச்சாகணும்; வார்டு வேலையில கவனம் செலுத்துங்கன்னு கவுன்சிலர்களுக்கு புத்திமதி சொல்லியிருக்காங்க. மாசந்தவறாம 'கவனிப்பு' கெடைக்கும்னு வாய்மொழியா சொல்லியிருக்காங்க. இதுவரைக்கும் பட்டுவாடா ஆரம்பிக்கலை. 25 ஆயிரம் ரூபா கொடுக்கலாம்னு ஆலோசிச்சாங்களாம்; மாசம் அம்பதாயிரம் குடுத்தா செலவுக்கு சரியா இருக்கும்னு உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,'' ராஜினாமா கடிதம்
சாப்பாட்டுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு, புறப்பட்ட மித்ரா, ''ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குள்ளே முட்டல் மோதல் வந்துருக்காமே... கட்சி பதவியே வேணாம்னு, ராஜினாமா கடிதம் கொடுத்தாங்களாமே...'' என, கேட்டாள்.''அதையேன் கேக்குறே... துணை மேயர் வெற்றிச்செல்வன் ஜெயிச்ச 92வது வார்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி குடியிருக்கிற ஏரியா; அந்த ஏரியாவுல அ.தி.மு.க.,வை தோற்கடிச்சதுனால, துணை மேயர் 'போஸ்டிங்' கொடுத்தாங்க. இப்போ, கட்சிக்காரங்களை துணை மேயர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரு; 'எதுவுமே' செஞ்சு தர மாட்டேங்கிறாருன்னு, 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு.மாவட்ட செயலாளர் ரவியை, வார்டு நிர்வாகிங்க சந்திச்சு, ராஜினாமா கடிதத்தை நீட்டியிருக்காங்க. இரு தரப்பையும் சமரசம் செஞ்சு, டெபுடி தரப்புக்கு 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. பொறுப்பு அமைச்சர் கவனத்துக்கும், இந்த விவகாரத்தை கொண்டு போயிருக்காங்க...'' வார்டு இடைத்தேர்தல்
''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் 56வது வார்டுக்கு, இடைத்தேர்தல் நடத்துவாங்களா, மாட்டாங்களா...''''மித்து, இன்னும் ரெண்டு வருஷம் பதவியிருக்கு. அதனால, கண்டிப்பா நடத்தியாகணும். காங்கிரஸ் கவுன்சிலர் இறந்திருக்காரு; மறுபடியும் காங்கிரசுக்கே ஒதுக்குவாங்களா அல்லது ஈரோடு மாதிரி, தி.மு.க., போட்டி போட்டு, கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள செல்வாக்கு எப்படியிருக்குன்னு, 'டெஸ்ட்' பண்ணிப் பார்ப்பாங்களான்னு தெரியலை.ஆளுங்கட்சி மேல, ஜனங்க அதிருப்தியில இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கலாம்; என்னென்ன பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கறதுனால, வார்டு இடைத்தேர்தல்ல தி.மு.க.,வே போட்டி போடணும்னு, உடன்பிறப்புகள் விரும்புறாங்க...''''அதேமாதிரி, 'ஆக்டிவ்'வா இல்லாம இருக்கற, ஆளுங்கட்சி கவுன்சிலர்களை பதவியிழப்பு செய்யணும்னு, 'பப்ளிக்' விரும்புறாங்களாமே...''''ஆமா... 97வது வார்டு கவுன்சிலர் நிவேதா, வார்டு பக்கமே எட்டிப் பார்க்கறதில்லை. கவுன்சில் கூட்டத்துக்கு வந்தாலும், ரிஜிஸ்தரில் கையெழுத்து போட்டுட்டு கெளம்பிடுவாங்க. வார்டு பிரச்னைக்காக, மன்றத்துல பேசுனதே இல்லை.மூனு தடவை கூட்டத்துக்கு வரலேன்னா... கவுன்சிலர் பதவி தானா பறிபோயிடும். ஆபீசர்ஸ் தரப்புல 'இன்பார்ம்' பண்ணி, மீட்டிங்கிற்கு வரவழைச்சு, கையெழுத்து வாங்கிடுறாங்க. இதுமாதிரி கவுன்சிலர்களை பதவியிழப்பு செஞ்சு, புதுசா தேர்ந்தெடுக்கணும்னு, தெனம் தெனம் பிரச்னைகளை சந்திக்கிற ஏரியா 'பப்ளிக்' நினைக்கிறாங்க...'' 'போஸ்டிங்'கிற்கு போட்டி
இருவரும் பேசிக்கொண்டே, அணைப்பகுதியில் இருந்து வெளியேறினர். லக்கேஜ்களை காரில் ஏற்றி, இருக்கையில் அமர்ந்த மித்ரா, மறக்காமல் சீட் பெல்ட் அணிந்து கொண்டாள்.தி.மு.க., கொடி கட்டிய கார் கடந்து செல்வதை பார்த்ததும், ''அசெம்ப்ளி எலக்சனுக்கு முன்னாடி, ஆளுங்கட்சி 'செட்டப்'பை மாத்தி அமைக்கப் போறாங்களாமே... புதுப்புது பதவி வரப்போகுதுன்னு, சொல்றாங்களே... உண்மை தானா...?'' என, கேட்டாள்.''ஆமா... நானும் கேள்விப்பட்டேன். ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்குறதுக்கு 'பிளான்' வச்சிருக்காங்கன்னு, ஏற்கனவே பேசியிருந்தோமே. அதே மாதிரி, ஒன்றிய பொறுப்புகளையும், நகர பொறுப்புகளையும் கூடுதலாக்க யோசிச்சிருக்காங்களாம்.காரமடை ஏரியாவுல கிழக்கு, மேற்கு ஒன்றியம் இருக்கு; மத்திய ஒன்றியம்னு புதுசா உருவாக்கப் போறாங்களாம். மேட்டுப்பாளையம் நகரத்துலயும் மத்திய நகரப்பகுதின்னு, புது போஸ்ட்டிங் உருவாக்குறாங்களாம்... இந்த பதவிகளை கைப்பத்துறதுக்கு, உடன்பிறப்புங்க மத்தியில போட்டி ஜாஸ்தியாகிடுச்சாம்'' எதிர்ப்புக்கு பின்னணி
''கார்ப்பரேஷன் எல்லையை விரிவாக்கம் செய்றது சம்பந்தமா, கவர்மென்ட் ஆர்டர் போட்டுச்சே; சில உள்ளாட்சி அமைப்புகள்ல, எதிர்ப்பு தெரிவிச்சுட்டு வர்றாங்களே... ஏனாம்...''''அதுவா... கார்ப்பரேஷனோட இணைஞ்சிட்டா... கவுன்சிலராக முடியாது; சேர்மன் போஸ்ட்டிங் கெடைக்காதுன்னு சில உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவங்க நெனைக்கிறாங்க. அதனால, 'பப்ளிக்'கை துாண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவிக்க வைக்கிறாங்க.இருந்தாலும், கட்சிக்காரங்களும், பொதுமக்களில் இன்னொரு தரப்பை சேர்ந்தவங்களும், ஆதரவு கொடுக்கறதுனால, எல்லை விரிவாக்கத்துல எந்த பிரச்னையும் வராதுன்னு சொல்றாங்க...'' என்றபடி, கோவையை நோக்கி, காரை செலுத்தினாள் சித்ரா. வசூல் ராஜா
ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த மித்ரா, ''ஆலாந்துறை ஏரியாவுல போலீஸ்காரங்களும், ஆளுங்கட்சிக்காரங்களும் உரசிக்கிட்டாங்களாமே...'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.''அதுவா... ஆலாந்துறை ஸ்டேஷன் லிமிட்டுல பொங்கல் பண்டிகை சமயத்துல, சேவல் சண்டை நடத்தியிருக்காங்க; அவுங்க மேல போலீஸ்காரங்க, 'கேஸ்' போட்டிருக்காங்க. இந்த வழக்குல இருந்து வண்டிகளை விடுவிக்கிறதுக்கு, ஒரு வண்டிக்கு அஞ்சாயிரம் ரூபா போலீஸ் தரப்புல லஞ்சம் கேட்டாங்களாம்.தொகை அதிகமா இருந்ததால, ஆளுங்கட்சி நிர்வாகியை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. ஸ்டேஷன்ல ஆளுங்கட்சிக்காரருக்கும், போலீஸ் அதிகாரிக்கும் இடையில வாக்குவாதம் நடந்திருக்கு. எஸ்.பி.,யை பார்த்து 'கம்ப்ளைன்ட்' பண்றதுக்கு, ஆளுங்கட்சிக்காரங்க முடிவு செஞ்சிருக்காங்க...'' என்ற மித்ரா, இளையராஜாவின் 'என் இனிய பொன் நிலாவே...' பாடலை ஒலிக்க விட்டாள்.அதை ரசித்து கேட்டபடி, கார் கண்ணாடி வழியாக, இயற்கையின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள் சித்ரா.