உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு: கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு

ஒன்னா சேர்ந்து கடத்துறாங்களே மண்ணு: கலெக்டரையே ஏமாத்துறாங்க கண்ணு

காலிங் பெல் ஒலிக்க, கதவை திறந்தாள் மித்ரா. ''அடடே வாங்க்கா. உட்காருங்க. என்ன திடீர் விஜயம்,'' வரவேற்றாள் மித்ரா.சோபாவில் அமர்ந்தவாறே, ''ஒன்னுமில்ல மித்து, வண்டிக்கு 'பொல்யூஷன்' சர்டிபிகேட் போட வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ் போயிட்டு வர்றேன். வழியில உன்னை பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன். பொதுவா, 'பொல்யூஷன் சர்டிபிகேட்' வாங்கறதுக்கு, 50 ரூபாய்க்குள்ல தான் கட்டணம் செலுத்தணும்,''''ஆனா, சர்டிபிகேட்' தர்ற சில சென்டர்கள்ல, ரொம்ப அதிக கட்டணம் வசூலிக்கிறாங்க. வடக்கு பகுதியை கவனிக்கிற பெரிய ஆபீசர், நீண்ட விடுப்புல இருக்காராம். கண்காணிப்பு இல்லாததால தான், இந்த மாதிரி கன்னாபின்னான்னு காசு வாங்கறாங்கன்னு பேசிக்கிறாங்க,''''இதாச்சும் பரவால்ல. திருப்பூர்ல இருந்து கம்பம் போற ஆம்னி பஸ்ல, டிக்கெட், 4 ஆயிரம்னு, 'ஆன் லைனில்' காண்பிக்குதாம்; இது ரொம்ப அதிகமாக இருக்குதேன்னு, சிலர் புகார் பண்ணப்போ, அந்த பஸ் கம்பெனிக்காரங்கள கூப்பிட்டு, ஆபீசர் விளக்கம் கேட்டிருக்காரு,''''அது ஒன்னுமில்லைங்க; அந்த ரூட்ல போற பஸ்ஸை, 'ரெனிவலுக்கு' அனுப்பிட்டோம். இப்போ, அந்த ரூட்ல பஸ் ஓடறது இல்ல. இருந்தாலும், மக்கள் மறந்துடாம இருக்கணும் தான் 'ஆன் லைனல்' இருந்து நீக்காம வைச்சிருக்கோம். 4,000 ரூபாய் கட்டணம் போட்டிருக்கிறதால யாரும் 'புக்' பண்ண மாட்டாங்க'ன்னு புதுசா உருட்ட, அந்த ஆபிசர் அப்படியே 'ஷாக்' ஆகிட்டாராம்,'' என்றாள் சித்ரா.இடத்துக்கேத்த 'அரசியல்!'''ஆட்சி, அதிகாரத்தை வச்சு, எல்லாமே செய்ய முடியும்ன்னு நினைக்கிறது தப்புதானே...'' என பேச்சை மாற்றிய மித்ரா தொடர்ந்தாள். ''திருப்பூர்ல இருக்க ஒரு ரேஷன் கடையில, முறைகேடு தொடர்பா ஒரு லேடி ஊழியரை 'சஸ்பெண்ட்' செஞ்சாங்கள்ல. இந்த நடவடிக்கைல இருந்து அவங்களை காப்பாத்த, நகர பொறுப்புல இருக்க ஒரு ஆளுங்கட்சி நிர்வாகி ரொம்ப 'ட்ரை' பண்ணியிருக்காரு. தொகுதி வி.ஐ.பி.,க்கிட்ட 'ரெக்கமண்ட்' பண்ண சொல்லி கேட்டிருக்காரு,'''' ஆனா, விவகாரம், என் கைய மீறி போயிடுச்சு; எதுவும் செய்ய முடியாது'ன்னு கை விரிச்சுட்டாராம்,' தொகுதி வி.ஐ.பி., 'அந்த லேடியை காப்பாத்தலைன்னா கட்சியில் மட்டுமில்லாம, சொந்தக்காரங்ககிட்ட கூட எனக்கு மதிப்பே இல்லாம போயிடும்ன்னு புலம்பிட்டு இருக்காராம் அந்த நிர்வாகி'' என்றாள் மித்ரா.''மித்து, அந்தந்த இடத்துக்கு ஏத்த மாதிரி, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,கள் தங்களை மாத்திக்கிறாங்க மித்து'' என்ற சித்ரா தொடர்ந்தாள்.''முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில்ல, போன வாரம் ஒரு பக்தை, தன்னோட மொபைல் போனை ஒரு இடத்துல வச்சுட்டு, கோவிலை சுத்தி வந்து, பார்த்தப்போ, போன் இல்லையாம். பதறிப்போன கோவில் நிர்வாகிங்ககிட்ட புகார் சொல்லியிருக்காங்க; இருந்தாலும், மொபைல் போன் கிடைக்கலையாம்,''''மூனு நாள் கழிச்சு, சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தப்போ, கோவில்ல இருக்க பூசாரி ஒருத்தரு, அந்த மொபைல் போனை எடுத்து, 'சுவிட்ச் ஆப்' பண்ணி, ஆபீஸ் ரூம்ல வச்சது தெரிஞ்சிருச்சு. இது சம்மந்தம்மா அந்த பூசாரி மூச்சு விடலையாம். கேமராவுல சிக்கினத்துக்கு அப்புறம் தான் உண்மையை சொல்லியிருக்காரு. அறங்காவலர் குழு கூடி, அந்த பூசாரி செஞ்ச தப்புக்கு தண்டனையா, ஒரு வாரம் 'சஸ்பெண்ட்' செஞ்சிட்டாங்க...''''அந்த பூசாரி 'தோழர்' வி.ஐ.பி.,க்கிட்ட, 'சப்போர்ட்' கேட்டிருக்காரு. அவரு, தெற்கு வி.ஐ.பி.,க்கிட்ட விஷயத்தை சொல்ல, 'அந்த பூசாரிக்கு எந்த தொந்தவும் கொடுக்கக்கூடாது; அவரை பூஜை செய்ய அனுமதிக்கணும்'ன்னு அறங்காவலர் குழுகிட்ட 'பிரஷர்' கொடுத்திருக்காரு அந்த வி.ஐ.பி., 'இப்படி தப்பு பண்றவங்களுக்கெல்லாம் 'ரெக்கமண்ட்' பண்ணா நல்லாவா இருக்கு'ன்னு அறங்காவலர் குழுவுல இருக்கவங்க புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''என்னத்த சொல்ல... அறங்காவலர் குழுன்னு சொன்னதும் தான், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது,'' என்ற மித்ரா, ''நல்ல ஊர்'ல இருக்க கோவில் அறங்காவலர் குழுவுல அஞ்சு பேரு இருக்காங்களாம். ஆனா, அறங்காவலர் குழு தலைவரு, தனக்கு வேண்டப்பட்ட ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் கூட வச்சுக்கிட்டு, மத்த மூனு பேரையும் கண்டுக்கிறதே இல்லையாம்,'' என்றாள் மித்ரா.கடுப்பான கலெக்டர்!''கோவிலிலும் கோஷ்டி கானமா?'' என்ற சித்ரா, ''நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி தாராபுரத்துல இருந்து, கிராவல் மண் ஏத்திட்டு வந்த ஒரு லாரியில ரெண்டு பக்கமும் 'நம்பர் பிளேட்' இல்லாததை கவனிச்சு, அந்த லாரியை ஒரு ஆர்.ஐ., மடக்கி பிடிச்சாருல்ல...,'' எனக்கூறியவாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்தாள்.''ஆமாங்க்கா. அந்த லாரி உரிமையாளர் மேல 'ஆக்ஷன்' எடுக்க ஆர்.ஐ., 'ரெடி'யானப்போ, சேதி சொல்ற மினிஸ்டரோட பி.ஏ., இருந்த ஒருத்தரு, ஆர்.ஐ.,யை கூப்பிட்டு, 'லாரியை விட்டுரு'ங்கன்னு சொல்லி 'பிரஷர்' கொடுத்ததா கூட சொன்னாங்களே...'' மித்ரா சொன்னாள்.''ஆமான்டி மித்து. அதே மேட்டரு தான். இல்லீகல் வேலைக்கு துணை போனதா சொல்லி, மினிஸ்டர் பி.ஏ.,வா இருந்த அந்த ஆபீசரை அவிநாசிக்கு மாத்திட்டாங்க. போன வாரம், கலெக்டர் தலைமைல நடந்த குறைகேட்பு கூட்டத்துல பேசின விவசாய சங்கத்துக்காரங்க சிலரு, 'சம்மந்தப்பட்ட அந்த ஆபீசரு மேல, துறை ரீதியா நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலை'ன்னு சொல்ல, கடுப்பான கலெக்டரு, 'அதுதான் அவரை டிரான்ஸ்பர் பண்ணிட்டோமே'ன்னு சொல்லியிருக்காரு.''டிரான்ஸ்பர் பண்ணா மட்டும் போதுமா; அவிநாசிக்கு மாத்தப்பட்ட அவரு, அங்க வேலைக்கு போறதே இல்லையாம்,'' என விவசாய சங்கத்தினர் கூற, கலெக்டரு 'டென்ஷன்' ஆகிட்டாராம். ''அவரு மேல வந்த புகார் அடிப்படையில 'டிரான்ஸ்பர்' பண்ணியாச்சு. அவரு எங்க போறாரு, வர்றாரு. எப்போ டீ சாப்பிடறாருன்னு, இதெல்லாம் நீங்க ஏன் 'பாலோ' பண்றீங்க. இப்ப உங்க மேல தான் எனக்கு சந்தேகம் வருதுன்னு சொல்லிட்டராம்,'' என்றாள் சித்ரா.கிணறு வெட்ட கிளம்பிய பூதம்!''அவிநாசி கிட்ட இருக்கற தெக்கலுார் செங்காளிபாளையத்துல, கிணறு வெட்றதுக்கு ஊராட்சியில இருந்து அனுமதி வாங்கியிருக்கோம்ன்னு சொல்லி, சிலர் லோடு, லோடா மண் அள்ளிட்டாங்க. இத பார்த்த பக்கத்து தோட்டத்துக்காரங்க, மண் எடுத்துட்டு போன லாரியை சிறைபிடிச்சு, 'ரெவின்யூ' ஆபீசர்கிட்ட புகார் பண்ணியிருக்காங்க,''''ஆபீசரும், அந்த இடத்துல ஆய்வு செஞ்சப்போ, அது அரசு புறம்போக்கு நிலம்ங்கற விஷயம் தெரிய வந்திருக்கு. அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், ஒரு அமைப்பின் பெயரில், அந்த இடத்தை கையகப்படுத்த, 'சர்வே' எண்ணை மாத்தி, கலெக்டர்கிட்ட மண் அள்ள பெர்மிஷன் வாங்கிய விஷயம் தெரிய வந்திருக்கு'' என்றாள் மித்ரா.''ரெவின்யூ ஆபீசர்ஸ் தானே, என்.ஓ.சி., கொடுக்கணும்'' சந்தேகப்பட்டு கேட்டாள் சித்ரா.''கரெக்ட் தான்க்கா. ஆனா, ரெவின்யூ ஆபீசர்ஸ் வழியாக அனுமதிக்கு போனா, அரசு புறம்போக்கு நிலம்ன்னு கண்டுபிடிச்சிடுவாங்கன்னு தெரிஞ்சு, ஊராட்சி நிர்வாகத்தோட உதவியோட, அனுமதி வாங்கியிருக்காங்கன்னும் சொல்றாங்க. இந்த தில்லாலங்கடி வேலைக்கு ஆளுங்கட்சி வி.ஐ.பி.,களும் உடந்தையாம்...'' விளக்கினாள் மித்ரா.''நீ சொல்றத பார்த்தா, கலெக்டரையே ஏமாத்திட்டங்க போல... கலெக்டரு என்ன செய்யறார்ன்னு பார்க்கலாம்'' என்ற சித்ரா, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவில் வழியில போலீஸ்காரங்க ரோந்துல இருக்கிறப்போ, 'டாக்குமென்ட்' இல்லாம, கிராவல் மண் ஏத்திட்டு வந்த லாரியை பிடிச்சி, எப்.ஐ.ஆர்., போட நடவடிக்கை எடுத்தாங்க. கிராவல் மண் வியாபாரத்துல கொடிக்கட்டி பறக்கிற புதுக்கோட்டை கும்பல், ஆக்ஷன் எடுக்காம இருக்க 'பிரஷர்' கொடுத்தும் கூட, எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அடடே... பரவாயில்லையே...'' என்றாள் மித்ரா.''அடப்போடி, நீ ஒருத்தி விவரம் புரியாம... சட்ட விரோதமா மண் அள்றவங்க புதுக்கோட்டை கும்பல்கிட்ட அனுமதி வாங்கிட்டு, 'கமிஷன்' கொடுத்துட்டு தான் மண் எடுக்கணுமாம். அப்படி, அனுமதி வாங்கலைன்னா, அந்த வண்டியை பிடிச்சு, எப்.ஐ.ஆர்., போடுங்கன்னு போலீஸ்காரங்ககிட்ட அந்த குடும்பல் 'ஸ்டிரிக்ட்டா' சொல்லியிருக்காங்களாம். துரதிருஷ்டவசமா, போலீஸ்கிட்ட மாட்டினதே, புதுக்கோட்டை கும்பலோட லாரிதானாம்'' என்றாள் சித்ரா.''ரெண்டு நாளைக்கு முன்னாடி, எஜூகேஷன் மினிஸ்டர், திருப்பூருக்கு வந்து போனாருல்ல. சில ஸ்கூல்களுக்கு 'விசிட்' போன அவரு, சில ஐடியாக்கள் சொல்லியிருக்காரு. 'மினிஸ்டர் விசிட் சம்மந்தமா கல்வித்துறை ஆபீசர்ங்ககிட்ட கேட்டப்போ, 'நாங்க மீட்டிங்கல இருக்கோம்ன்னு, ஒரே மாதிரி சொல்லி, எஸ்கேப் ஆகிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

'அறம்' மறந்த காவலர்

''மித்து, அவங்களோட டிபார்ட்மென்ட் மினிஸ்டர் வர விஷயம் தெரியாமலா இருக்கும்; எல்லாம் ஒரு பிளானிங் தான்,'' என சிரித்த சித்ரா, ''காசியில் வாசியான ஊருக்கு 'பொறுப்பா' வந்திருக்கிற 'சீனி'யான ஆபீசர், அங்கிருக்கிற கிளார்க்கிட்ட, எந்த பில் போட்டாலும், சேத்து போடுங்கன்னு சொல்லி, எல்லா பில்லிலும், 2 ஆயிரம், 3 ஆயிரம் சேத்து வவுச்சர் போட்டு, பணத்தை எடுத்துக்கிறாராம்,''''இது பல மாசமா நடக்குதாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வசதிகளை செய்ய வேண்டி இருந்தாலும் அத கண்டுக்காம, பணத்தை சுருட்டறதில மட்டும் குறியா இருக்காறாராம்,'' என பக்கத்து ஊர் விஷயத்தை சொன்னாள்.''அக்கா, 'சிவன் சொத்து குல நாசம்'னு அவருக்கு தெரியாதா என்ன. அங்க அப்படின்னா, இங்க ஈஸ்வரன் கோவிலில், குஜராத் பெண்கள் ஒன்னா சேர்ந்து சிவஸ்துதி பாடிட்டு இருந்தாங்களாம். அப்போது வந்த 'சிவம்' பேர் கொண்ட டிரஸ்டி, ''ஏன் இப்படி எல்லாரும் கத்திட்டு இருக்கீங்க. வெளியே போய் கத்துங்கன்னு, சத்தம் போட்டிருக்கார்,''''உடனே, அந்த பெண்களும் வெளியேறிட்டாங்களாம். கோவில்களில், அறத்தை காக்கும் காவலர்களாக இல்லாம, 'அறத்தை' மறந்து தான் சிலர் செயல்படறாங்க போல...'' என்ற மித்ரா, ஆவி பறக்க பில்டர் காபியை கொடுக்க, சித்ரா ருசிக்க ஆரம்பித்தாள்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை