இரு, மூன்று சக்கர மின் வாகனங்களுக்கு புதிய வகை பெரைட் மோட்டார் சோதனை
1. கிரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம், இதுவரை 4 லட்சம் மின் வாகனங்களை விற்பனை செய்து, கடந்த நிதியாண்டில் 51% வளர்ச்சி கண்டுள்ளதே, எப்படி? புதிய அறிமுகங்கள், விற்பனை மற்றும் பராமரிப்பு மையங்கள் விரிவாக்கம் ஆகியவை எங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சார இருசக்கர வாகன விற்பனை, கடந்த நிதியாண்டை விட 101 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார மூன்று சக்கர வாகன பிரிவில், 100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளோம். மொத்த மின்சார இருசக்கர வாகன விற்பனையில், எங்கள் சந்தை பங்கு 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இரட்டை இலக்க சந்தைப் பங்கை எட்டுவதே முக்கிய இலக்கு. தயாரிப்பு தரம், லாபகரமான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கைக்கு முன்னுரிமை வழங்குகிறோம். 2. உள்நாட்டு மயமாக்கலை அதிகரித்து, இறக்குமதியை குறைக்க என்ன திட்டங்கள் உள்ளன? பெரும்பாலான உதிரிபாகங்கள், உள்நாட்டு வினியோகர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. பேட்டரி செல்கள் மற்றும் அரிய வகை கனிமங்கள் தொடர்பான இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறோம். மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்காக, 'பெரைட்' என்ற பீங்கான் பொருளால் ஆன மோட்டார்களை சோதனை செய்து வருகிறோம். 3. புதிய வாகன அறிமுகங்கள், எதிர்கால திட்டங்கள் என்ன? நடப்பு நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும், குறைந்தபட்சம் ஒரு வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் அணிவகுப்பில், மின்சார ஸ்கூட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்சார பைக் உள்ளிட்ட புதிய பிரிவுகளிலும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். 4. கிரீவ்ஸ் நிறுவனத்திற்கு, தமிழகம் ஏன் முக்கியம்? ராணிப்பேட்டை தொழிற்சாலை, எங்களின் முக்கிய உற்பத்தி மையமாக செயல்படுகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆகும். தமிழகத்தில் உள்ள வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில், விற்பனை மற்றும் பராமரிப்பு மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தரமான தயாரிப்பு, குறைந்த பராமரிப்பு செலவு, விலை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் வாயிலாக தென்னிந்திய சந்தையில் எங்கள் இருப்பை வலுப்படுத்துவோம்.