தமிழகம் முன்னணியில் உள்ளது!
மின்சார வாகன விற்பனையை தமிழகத்தில் 40 சதவீதம் அதிகரிக்க இலக்கு!
கைனடிக் கிரீன் மின்சார வாகனங்களுக்கு, தமிழகத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது?
நாட்டின் முக்கிய மின்சார வாகன சந்தைகளுள் ஒன்றான தமிழகம், எங்களின் மொத்த விற்பனையில் முன்னணியில் உள்ளது. நாடு முழுதும் 25,000 இ - லுனா மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், தமிழகத்தில் மட்டும் 10,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிற்குள், தமிழக விற்பனையை 40 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 52 விற்பனை மையங்களை இங்கு வைத்துள்ளோம். நடப்பு நிதியாண்டிற்குள், இதை 80தாக அதிகரிக்க இலக்கு உள்ளது. பெரு நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் விற்பனை மையங்களை ஏற்படுத்த உள்ளோம். மின் வாகன சந்தையில் 10 சதவீத சந்தை பங்கை அடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளதே, எப்படி?
 மின்சார இரு மற்றும் மூன்று சக்கர வாகன சந்தைகளை சேர்த்து, 2030க்குள் 10 சதவீத சந்தை பங்கை அடைய இலக்கு வைத்துள்ளோம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்கள், எங்கள் மொத்த விற்பனையில் அதிக பங்கு வகிக்கின்றன. மின்சார இருசக்கர வாகன வணிகத்தை துவங்கியது முதல் இதுவரை 80,000த்திற்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். உள்நாட்டு வணிகம் மட்டுமின்றி, ஏற்றுமதிக்கும் திட்டமிட்டு வருகிறோம். தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் இருசக்கர மின் வாகன தேவை அதிகரித்து வருகின்றன. அந்நாடுகளின் கொள்கைகளை பூர்த்தி செய்து, வலுவான போட்டித்தன்மையை வழங்க முயற்சித்து வருகிறோம். கடந்த ஆண்டை விட விற்பனை இரட்டித்து உள்ளதே, உற்பத்தியை அதிகரிக்க திட்டம் உள்ளதா? 
எங்கள் நிறுவனத்திற்கு, 2024 - 2025 நிதியாண்டு சிறப்பாக அமைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த விற்பனையை இரு மடங்குக்கு மேல் அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம். எங்களின் உற்பத்தி ஆலை, மஹாராஷ்டிராவின் புணே அருகில் உள்ள சுப்பாவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்யலாம். இதனால், உற்பத்தி திறனை தேவைக்கேற்ப அதிகரிக்க முடியும். அதேபோல், விற்பனை மையங்களை நடப்பாண்டிற்குள் 500 ஆக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், விநியோக சங்கிலியில் எந்த தடங்கலும் வராது.  
எதிர்காலத்தில் முதலீடுகளை ஈர்க்க திட்டம் உள்ளதா? 
நிதி திரட்டல் முதல் சுற்றில், 220 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளோம். எங்கள் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, சந்தை பங்கை அதிகரிக்க இது உதவுகிறது. இந்த வளர்ச்சியை மேலும் அதிகரித்து, அடித்தளத்தை வலுப்படுத்த, நிதி திரட்டல் இரண்டாம் சுற்றில், 265 முதல் 441 கோடி ரூபாய் வரை முதலீடு எதிர்பார்க்கிறோம்.  வருமானத்தை 2030க்குள், 10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளதே, இது எந்த அளவுக்கு சாத்தியம்? 
தொடர்ந்து அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் விற்பனை, வளரும் சார்ஜிங் கட்டமைப்புகள் ஆகியவை எங்கள் இலக்கை சாத்தியப்படுத்தும். மத்திய அரசின் ஆதரவு, அதிகரிக்கும் வாடிக்கையாளர் தேவை இதில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகனத் துறை நிலையான வளர்ச்சி பாதையில் செல்கிறது. அதனால், இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஜெயபிரதீப் வாசுதேவன் இருசக்கர வாகன வணிகத் தலைவர், கைனடிக் கிரீன்