உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கூடுதல் தளம் கட்டும் போது துாண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது!

கூடுதல் தளம் கட்டும் போது துாண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது!

புதிதாக வீடு கட்டும்போது, அதில் கட்டடத்தின் மொத்த சுமையும் எப்படி நிலத்துக்கு இறங்க வேண்டும் என்பதை முறையாக திட்டமிட வேண்டும். கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் இதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புதிய கட்டடத்தின் மொத்த சுமை என்ன, அதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பகுதியால் ஏற்படும் உத்தேச சுமை என்ன என்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு வகைகளில் ஏற்படும் சுமையின் அளவை மதிப்பீடு செய்து, துாண்களின் எண்ணிக்கை மற்றும் அளவை முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பெரும்பாலான பகுதிகளில், தரைதளம் மட்டும் கொண்டதாக வீடு கட்ட தான் மக்கள் முதலில் திட்டமிடுகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் வரைபடம் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அவர்கள் தொழில் முறை வல்லுனர்களை அணுகுகின்றனர். இதில் தொழில் முறை வல்லுனர்கள் என்ற நிலையில், கட்டட அமைப்பியல் பொறியாளர்கள், அங்கு, இரண்டு தளம் வரை கட்டினால் என்ன அளவுக்கு சுமை ஏற்படும் என்ற கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் துாண்கள், அஸ்திவாரத்துக்கான வரையயை அளிப்பர். இதனால், கூடுதல் செலவு ஏற்படும் என பொது மக்கள் இதை கடைபிடிக்க தயங்குகின்றனர். இதன்பின், கட்டுமான பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் தரைதளம் வரையிலான கட்டுமான பணிகளை முடித்துவிடுகின்றனர். இவ்வாறு கட்டிய வீட்டில் குடியேறிய பின் சில ஆண்டுகள் கழித்து, கூடுதல் தளம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழும். அப்போது, கீழ் தளத்தில் அமைக்கப்பட்ட துாண்களின் தொடர்ச்சியாக மட்டுமே மேல் தளத்தில் துாண்கள் அமைக்கப்பட வேண்டும். சில இடங்களில் கட்டடத்தை வலுவாக்குகிறேன் என்று கூடுதல் துாண்களை அமைக்க சிலர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, தரைதள பகுதியில் துாண் இல்லாத இடத்தில் மேல் தளத்தில் புதிதாக துாண் அமைக்கும் போது அதனால் ஏற்படும் சுமை பரவலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். மேல் தளத்தில் இப்படி புதிதாக நீங்கள் அமைக்கும் துாண் வழியே இறங்கும் கட்டடத்தின் சுமையானது அது நிற்கும் தளத்தின் உறுதியை குலைத்துவிடும். இதில் தரைதள வீடு கட்டும் போது மேற்கொள்ளப்பட்ட சுமை பரவல் வழிமுறையில் புதிய துாணால் குழப்பம் ஏற்படும்.இது பழைய தளத்தின் நிலைப்பு தன்மையை பாதிப்பதால், கட்டடத்தின் ஒட்டுமொத்த உறுதியும் பாழாகும் நிலை ஏற்படும் என்பதால், புதிய துாண்களை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை