நீங்கள் வீடு வாங்கும் இடத்தில் வழி பாதை விபரங்களை அறிவது எப்படி?
எதிர்காலத்தில் வீடு கட்டி குடியேறலாம் அல்லது நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் காலி மனை வாங்குவதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர். இது போன்று காலி மனை வாங்கும் போது, அது தொடர்பான பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்வது போதாது.நீங்கள் வாங்கும் மனை முறையாக அங்கீகரிக்கப்பட்ட லே அவுட்டில் அமைந்துள்ளதா என்பதில் துவங்கி பல்வேறு விஷயங்களை துல்லியமாக பார்க்க வேண்டும். முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு என்றால், அதில் சாலைகள் பூங்கா ஆகியவற்றுக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த நிலம் இதற்கு முன் என்ன பயன்பாட்டில், என்ன வகைபாட்டில் இருந்தது என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம். இன்றைய சூழலில், பெரும்பாலான நிலங்கள் இதற்கு முன் விவசாய பயன்பாட்டில் இருந்து இருக்கும் என்பதால், அதில் பாதை, கால்வாய் ஆகியவை குறுக்கிடும். ஆனால், இந்த விபரங்கள், நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரத்துக்கு பின் தயாரிக்கப்படும் புதிய வரைபடத்தில் இருக்காது. இதனால், நீங்கள் வாங்கும் மனை அமைந்துள்ள பகுதியில் பாரம்பரியமாக இருந்த பாதைகள், கால்வாய்கள், ஓடைகள் போன்ற விபரங்கள் தெரியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.அக்கம் பக்கத்தில் அனைத்து நிலங்களும் குடியிருப்பாக மாறிய நிலையில், இந்த மனையில் இதற்கு முன் கால்வாய், ஓடை சென்றிருந்தால் என்ன என்று மக்கள் நினைக்கின்றனர். தற்போது அங்கு நீர் வழித்தடம், பாதை ஆகியவை இல்லை என்றாலும், அதிக மழை பெய்யும் காலத்தில் இது போன்ற பாரம்பரிய வழிகளில் நீர் செல்வதை தடுக்க முடியாது. குறிப்பாக, இது போன்ற பகுதிகளில் துாண்கள் அமைத்து நீங்கள் கட்டடம் கட்டினாலும், நீரின் அழுத்தத்தால் தரையின் கீழ் அடுக்கு மண் கரைய வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் வாங்கும் மனை அமைந்துள்ள பகுதியில் நீர் வழித்தடங்கள் ஏதாவது இதற்கு முன் இருந்ததா என்பதை அறிவது அவசியம். இதே போன்று பாரம்பரியமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகள் ஏதாவது குறுக்கிடுகிறதா என்பதை நில அளவை வரைபடம், கிராம வரைபடம், அ பதிவேடு ஆகியவற்றின் வாயிலாக அறியலாம். இத்தகைய ஆவணங்களை கேட்டு வாங்கி சரி பார்த்து, அதன் அடிப்படையில் கிரையம் முடிப்பது குறித்த நடவடிக்கையை எடுக்கலாம். விற்பனைக்கு வரும் மனை அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண் ஆகிய விபரங்களை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக இந்த விபரங்களைஅறியலாம். இதில் இத்தகவல்கள் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விபரங்களை பெறலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.