அஸ்திவாரம் அருகே கூடாது ஆழ்துளை குழாய் கிணறு
அஸ்திவார சுவர் உள்ளிட்ட இதர சுவர்கள் அருகே, 'போர்வெல்' அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும். போர்வெல் அமைப்பது முதல், நீரை மேலே கொண்டுவரும் மின் மோட்டார் பொருத்துதல் வரை, அனைத்திலும் கவனம் வேண்டும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:'போர்வெல்' போடும் முன், தகுந்த நபர் கொண்டு நீரோட்டம் பார்த்து, இடத்தை குறித்துக்கொள்ள வேண்டும். பின், நீர் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப, நான்கு அல்லது ஆறு இஞ்ச் போர் போடுவதா என்று முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, தகுந்த இயந்திரம் வைத்து (ரிக் லாரி) துளையிட வேண்டும். முதலில் மேல் மண்ணான கெட்டித்தன்மையற்ற மண் வெளியேறி விடும். பாறைப்பகுதி வந்தவுடன் நீர்க்கசிவு ஏற்படும். தொடர்ந்து துளையிட, துளையிட நீர்வரத்து அதிகமாகும்.நமக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்து விட்டால், துளையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன்பின் கெட்டித்தன்மை அற்ற மேல் மண் சரிந்து விழுந்துவிடாதபடி, தரமான, கெட்டியான, தகுந்த அளவுள்ள கேசிப் பைப்பை, தேவையான ஆழத்திற்கு பொருத்த வேண்டும்.அடுத்த கட்டமாக, ஆழ்துளை சப்மெர்சிபிள் பம்ப் உடன், தண்ணீர் வெளியேற்றும் குழாயை இணைக்க வேண்டும். இப்போது, ஆழ்துளைக்குள் பொருத்தப்பட்டுள்ள, 'கேசிங் பைப்' வழியே மோட்டார் பம்பை, தேவையான அளவு இறக்கிவிட்டு, நீர் வெளியேற்றும் குழாயின் மேல் பகுதியை அடாப்டருடன், கிளாம்ப் பொருத்திட வேண்டும். இல்லையேல், பைப் துளைக்குள் போய்விடும். இப்போது, மின் இணைப்பு கொடுத்து மோட்டார் பம்பை இயக்கினால் நீர் வெளியேறும்.இவ்வாறான ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீரை எடுக்க, நீருக்குள் மூழ்கி இருக்கும் பம்ப், மேல்மட்டத்தில் பொருத்தும் ஜெட் பம்ப், 'கம்ப்ரஸ் பம்ப்' என மூன்று வகை பம்ப்கள் பயன்படுத்தப்படுகின்றன. மோட்டார் பம்பின் குதிரைத்திறன் பொறுத்தே, அதன் இயக்க திறன் அமையும். எனவே, நீரை எவ்வளவு உயரத்திற்கு ஏற்ற வேண்டும், எவ்வளவு ஆழத்தில் எடுக்க வேண்டும் என்ற தேவைகளுக்கு ஏற்ப, பம்ப் வாங்கி பொருத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.