வீடு கட்டுவதில் மேல்தள பணியில் கான்கிரீட் பயன்பாட்டில் கவனம் தேவை!
புதிதாக வீடு கட்டும் போது அதில் மேல்தள கான்கிரீட் பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அஸ்திவார துாண்கள் அமைத்தல், பீம்கள் அமைத்தல் பணிகளைவிட மேல்தளத்துக்கான அடிப்படை தயாரிப்பில் பல்வேறு விஷயங்களை திட்டமிட வேண்டும். குறிப்பாக லிண்டல் பீம் அமைத்து அதன் மேல், தளத்துக்கான இடம் வரை கட்டு வேலை மேற்கொண்ட பின், ஏழு நாட்கள் முறையாக நீராற்ற வேண்டும். இதன் பின், அடுத்த மூன்று நாட்கள் எதுவும் செய்யாமல் கட்டு வேலை பகுதியை அப்படியேவிட்டுவிட வேண்டும். ஆனால், பல இடங்களில் லிண்டல் பீம்கள் மீது சுவர் எழுப்பிய சில நாட்களில் சென்ட்ரிங் பணிகளை துவக்கி விடுகின்றனர். இவ்வாறு அவசரகதியில் சென்ட்ரிங் பணிகளை மேற்கொள்ளும் நிலையில் மேல் தளத்தின் சுமையை தாங்கும் அளவுக்கு அந்த சுவர் தயாராகி இருக்காது. இந்த இடத்தில், 10 நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு சென்ட்ரிங் பலகைகள் அமைக்கும் பணிகளை துவக்க வேண்டும். இதில் அவசரம் காட்டினால் என்ன என்று தோன்றலாம், முறையாக இறுக்கம் ஏற்படாத நிலையில், மேல் தளத்தின் சுமையை தாங்க முடியாமல் சுவர் உடையும் நிலையும் ஏற்படலாம். இந்த இடத்தில் அடுத்த பணிகளை துவக்கும் முன் சில விஷயங்களை மிக கவனமாக பார்க்க வேண்டும். முதலில், கட்டடத்தின் உயரம் என்ன என்பதையும், வரைபடத்தில் குறிப்பிட்டபடி இந்த உயரம் கிடைக்குமா என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக, சென்ட்ரிங் பலகைகள் அமைத்து அதன் மேல் கம்பி கூடுகளை அமைக்கும் போது, இறுதி கட்டமாக ஒயரிங் குழாய்களை முறையான திட்டமிடல் இன்றி பலரும் வைக்கின்றனர். ஆனால், இந்த இடத்தில் மேல் தளத்தில், பேன், போக்கஸ் லைட், ஊஞ்சல், ஒவ்வொரு அறையிலும் மெயின் சுவிட்ச் பாக்ஸ் எங்கு வரும் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் ஒயரிங் குழாய்களை அமைக்க வேண்டும். இத்துடன், மேல் தளம் அமைக்கும் போது அதில் மின்சார ஒயரிங் மட்டுமல்லாது, இன்டர்நெட் கேபிள்கள் வருவதற்கான வழித்தடம் குறித்த விஷயங்களையும் கவனிக்க இதே போன்று, வீட்டில் சி.சி.டி.வி., சிறப்பு விளக்கு அலங்காரம் மேற்கொள்ள வேண்டும், பால் சீலிங் அமைக்க வேண்டும் என்றாலும் அதற்கான இட வசதியையையும் இந்த நிலையில் மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக, வீட்டில் பிரதான மின்சார ஜங்க் ஷன் பாக்ஸ் எங்கு அமையும், அங்கிருந்து பிற அறைகளுக்கு மின்சார ஒயரிங் குழாய்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இடவசதி ஏற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் கவனக்குறைவாக இருந்தால் வீட்டின் உயரம் குறைவாக அமைந்துவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.