குதிரை சாணத்துக்கும்... கழிவுநீர் தொட்டிக்கும் என்ன சம்பந்தம்: விளக்கம் தருகிறார் காட்சியா இணை பொருளாளர்
நான் புதிதாக வீடு கட்டி ஓராண்டு ஆகிறது. முதல் தளம் கட்டுவதற்கென கம்பிகளை நீட்டி விட்டுள்ளேன். அது துருப்பிடிக்க தொடங்கி விட்டதால், மெட்டல் ஆக்சைடு அடிக்கலாம் என பெயின்டர் கூறுகிறார். மெட்டல் ஆக்சைடு அடித்தால் கம்பியில் கான்கிரீட் ஒட்டுமா?-வேலுமணி, பூச்சியூர்.கட்டாயம் மெட்டல் ஆக்சைட் அடிக்க கூடாது. ஜன்னல் கம்பிகளுக்கும், இரும்பு கதவுகளுக்கு மட்டும் தான் மெட்டல் ஆக்சைடு அடித்து பெயின்ட் அடிப்பார்கள். கான்கிரீட் கம்பிகளுக்கு 'ஆன்டி கொரோசிங் பெயின்ட்'தான் அடிப்பார்கள்.கடற்கரைக்கு அருகில் வீடு கட்டும் போது, கம்பிகளில் இளம் பச்சை நிறத்தில் பெயின்ட் அடித்து இருப்பார்கள். அதுதான் 'ஆன்டி கொரோசிங் பெயின்ட்'. இவ்வாறு அடிக்கும் போது பிடிமான வலிமை குறையாது.கம்பியின் மேற்பரப்பில் இதை அடிக்கும்போது துருவை தடுக்க நல்லதொரு வேதியல் பூச்சாக இருக்கும். கான்கிரீட் போடும் முன் இதை நன்றாக தேய்த்து எடுத்து விட்டு கான்கிரீட் போட்டால் வலிமை நன்றாக இருக்கும். வேறு எந்த பெயின்டும் அடிக்க கூடாது.வழக்கமான முறையில் 'செப்டிக் டேங்க்' அமைத்துள்ளோம். முன்பெல்லாம் குதிரை சாணத்தை செப்டிக் டேங்கில் கரைத்து விட்டு கசடுகள் சேராமல் தடுக்கும் வகையில் இருந்தது. தற்போதைய நவீன காலகட்டத்தில் குதிரை சாணம் கிடைப்பது அரிது. பழைய டேங்க்கை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதற்கு மாற்று வழி ஏதேனும் உள்ளதா?-சந்தியா,இருகூர்.நீங்கள் சொல்வது போல் தற்போதைய நவீன காலகட்டத்தில் குதிரை சாணம் கிடைப்பது அரிது. இதற்கு மாற்றாக தற்போது பவுடர் வடிவில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பாக்டீரியா பாக்கெட்களில் கிடைக்கிறது. இதனை 'கிளோஸட்' வழியாக பவுடரை கொட்டி தண்ணீரில் ஊற்றினால் போதும். இதில் உள்ள பாக்டீரியா டேங்க்கில் உள்ள கசடுகளை நீராக மாற்றிவிடும். இந்த நீரை நீங்கள் நேரடியாக செடிகளுக்கு பயன்படுத்தலாம்.எந்த மாதிரியான கட்டடங்களுக்கு அவசரகால வழி மற்றும் படிக்கட்டுகள் வைத்து கட்டவேண்டும்.-குமார், இடிகரை.வணிக வளாகம், தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தியேட்டர், மால்களில் அவசர கால வழி மற்றும் படிக்கட்டுகள் வைக்கவேண்டும்.நான் புதிதாக வீடு கட்ட உள்ளேன். அதற்கு அக்ரீமென்ட் போட்டு அதன் பின்பு வேலை ஆரம்பிக்க வேண்டும் என நண்பர்கள் கூறுகிறார்கள். இது அவசியமா?-சத்தியமூர்த்தி,கணபதி.ஒரு வீடு கட்டும்போது அதற்கு கட்டுமான ஒப்பந்தம் போடுவது மிகவும் அவசியம். அந்த ஒப்பந்தத்தில் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் முகவரி, கட்டுமானம் நடைபெறும் மனையின் விபரங்கள் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.கட்டுமானம் சம்பந்தமான அனைத்து வரைபடங்களும் அதில் இணைக்கப்பட்டு, கட்டுமானம் துவங்கும் நாள், முடிக்கும் நாள் போன்றவற்றை தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதில், கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடிய கம்பி, சிமென்ட், டைல்ஸ் போன்றவற்றின் விலை விபரங்களையும், ஜன்னல் கதவுகளின் விபரங்களையும், தெளிவாக குறிப்பிட்டு இருக்குமாறு ஒப்பந்தம் வேண்டும்.நான் புதிதாக கட்டும் வீட்டில் 'செப்டிக் டேங்க்' அமைக்கலாம் என்று உள்ளேன். அதற்கு பொறியாளர் 'பயோ செப்டிக் டேங்க்' அல்லது 'பயோ காஸ் பிளான்ட்' அமைக்கலாம் என கூறுகிறார். இதில் எது சிறந்தது?-பெருமாள்,மாதம்பட்டி.'பயோ செப்டிக் டேங்க்' முறையை அமைப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருக்கும். கழிவுகளை நுண்ணுயிர்கள் உணவாக எடுத்துக்கொண்டு அவற்றை நீராக மாற்றி வெளியேற்றுகிறது. வெளியேறும் நீரை மரங்கள், செடிகள் மற்றும் தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். இம்முறையை பயன்படுத்தும்போது 'கிளாஸ் செட்'டை 'ஆசிட்' கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. மேலும், டிஷ்யூ பேப்பர், நாப்கின் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு அவற்றை பயன்படுத்தினால் அது 'பயோ செப்டிக் டேங்க்'கில் உள்ள நுண்ணுயிர்களை அழித்துவிடும்.நம் வீடுகளில் வீணாகும் உணவுப் பொருட்கள் மற்றும் வீணாக இருக்கக்கூடிய காய்கறி கழிவுகளையும், எளிதில் மக்கக்கூடிய பொருட்களையும் பயன்படுத்தி அதிலிருந்து வரும் வாயுவை காஸ் சிலிண்டருக்கு பதிலாக பயன்படுத்துவது, 'பயோ காஸ்' முறையாகும்.இது வீடுகளுக்கு மட்டும் அல்லாமல் கல்லுாரி விடுதிகள், தொழிற்சாலை விடுதிகளில் இம்முறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.-பொறியாளர் ரவி,இணை பொருளாளர்,கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).