உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் / அஸ்திவார பணியின் அடிப்படை விஷயங்கள்!

அஸ்திவார பணியின் அடிப்படை விஷயங்கள்!

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்கும் போது, நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒப்பந்ததாரரிடம் பணம் கொடுத்துவிட்டால் அனைத்தும் சரியாக முடிந்துவிடும் என்ற எண்ணம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது.கட்டுமான பணிகளை ஒப்பந்த முறையில் ஒப்படைப்பது நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை தவிர்ப்பதற்கான வழிமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், இதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்த ஒப்பந்ததாரர் அஸ்திவாரம் தொடர்பான பணிகளை முறையாக மேற்கொள்கிறாரா என்பதை மிக துல்லியமாக கவனிக்க வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள், சிறிய அளவிலான கட்டடங்கள் கட்டுவதில் கவன குறைவாக செயல்படுவதாக புகார் வருகிறது. இதில் கட்டடம் குறித்த தொழில்நுட்ப விஷயங்கள் உரிமையாளருக்கு தெரியாது என்பதால், பல இடங்களில் கேள்விகள் எழுவதில்லை. ஆனால், ஒப்பந்ததாரர்களில் சிலர் மட்டுமே இதில் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு உறுதியாக கட்டடங்கள் கட்டி கொடுக்கின்றனர். ஒரு கட்டடம் கட்ட ஒப்பந்தம் பெற்று இருக்கிறோம் என்றால், அதில் தொழில்நுட்ப ரீதியாக ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரை என்ன, வடிவமைப்பாளர் பரிந்துரை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இன்னின்ன வல்லுனர்கள் இத்தகைய பரிந்துரைகளை அளித்துள்ளனர், அதை இன்ன வழியில் செயல்படுத்துகிறோம் என்று பொறுமையாக உரிமையாளருக்கு விளக்க வேண்டும். இந்த விபரங்களை உரிய நேரத்தை செலவு செய்து, உரிமையாளர்களும் தெளிவாக கேட்க வேண்டும். நிலத்தின் அடிப்படை தன்மை என்ன என்பதை மண் பரிசோதனை வாயிலாக அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் அஸ்திவார துாண்களின் அளவை திட்டமிட வேண்டும். இதற்கு கட்டட அமைப்பியல் பொறியாளர் அளிக்கும் வரை படம், பரிந்துரைகள் மிக மிக முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள், வேறு ஊரில் வசிக்கும் கட்டட அமைப்பியல் பொறியாளருக்கு நிலத்தின் விபரங்களை அளித்து, மேலோட்டமாக ஒரு பரிந்துரையை பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் பரிந்துரையால் எவ்வித பயனும் இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டும் இடத்தில் நேரடி கள ஆய்வு செய்து வல்லுனர் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே உரிய பலன் கிடைக்கும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை