தரமான செங்கல் பயன்படுத்தினால் அஸ்திவாரத்தை அசைக்க முடியாது!
நாம் கட்டும் கட்டடங்களில், சிறிய நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், கட்டடத்தின் சுவர் மற்றும் தலைப்பாகங்களில் ஏற்படும் ஈரப்பதம் (ஓதம்) பிரச்னைகளில் இருந்து, விலை உயர்ந்த கட்டடங்களின் முழுமையான அழகையும், பொலிவையும் நீட்டித்து நிலைபெறச் செய்ய இயலும்.முதலில் நமது அஸ்திவார சுற்றுச்சுவரை, இயற்கையான தரைப்பகுதியில் இருந்து, சற்று தாழ்வான உயரத்திலிருந்து கட்ட வேண்டும். இதனால், சுற்றுப்புறத்தில் ஏதாவது நீரோட்டம் இருப்பின், அது அஸ்திவார மண்ணின் அடியில் இருந்து, நீர் புகாத வண்ணம் காக்க முடியும் என்கிறார், 'காட்சியா'உறுப்பினர் நல்லுசிவகுமார்.அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது... அஸ்திவாரத்திற்கு உபயோகிக்கும் செங்கல் தரமானதாகவும், நன்கு வேகாத கற்கள் கலந்து விடாமலும் பார்த்துக் கொள்வது அவசியம். அஸ்திவார மண் நிரப்பும் முன், சுற்றுப்புற சுவற்றில் வாட்டர் புரூப் பெயின்ட் அல்லது பிட்டுமென் பெயின்ட் அடிப்பதன் மூலம், அஸ்திவார மண்ணிலிருந்து வரும் நீரை, சுவர் உறிஞ்சுவதை தடுக்க முடியும்.களிமண்ணாக இருந்தால், அதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். பேஸ்மென்ட் முடிந்தவுடன் தரைப்பகுதியின் கீழ் பரப்பில், கற்களை சரிவர பரப்பி, பிறகு தரைக்கான கான்கிரீட் போடுவதன் மூலமும், ஈரப்பதம் மேலே வருவதை தடுக்கலாம்.பிறகு பேஸ்மென்ட் சுற்றிலும் உள்ள சுவற்றின் மேற்பரப்பில், தரைதளத்திற்கான சுவர் எழுப்பும் முன், வாட்டர் புரூப் கோர்ஸ் செய்ய வேண்டும். வாட்டர் புரூப்பிங் கோட்டிங் அல்லது பிட்டுமன் கோட்டிங் அல்லது பிட்டுமன் மெம்பரைன் அடிப்பதன் மூலம், இவற்றை செய்து கொள்ளலாம்.தரைதளங்களில் உள்ள கழிவறை, சமையலறை வடிகுழாய் இணைப்புகள், சரியான முறையில் நீர்க்கசியாமல் சரி பார்ப்பது மிகவும் அவசியம். சுவற்றினுள் பதிக்கப்படும் தண்ணீர் குழாய்களை, 'பிரஷர் டெஸ்ட்' செய்து மறைக்க வேண்டும்.கட்டடத்தை சுற்றிலும், பிளின்த் புரொடெக்க்ஷன் எனப்படும் கான்கிரீட் இரண்டடி அகலத்திற்கு அமைப்பதால், நீரேற்றத்தை தடுக்கலாம். இதுபோன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், விலைமதிப்பு மிக்க நமது கட்டடங்களின் ஆயுள் நீடித்து, நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.