உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / அடித்தளம் நிறுத்தப்படும் இடத்தின் ஆழம் பார்க்காமல் வீடு வாங்காதீர்!

அடித்தளம் நிறுத்தப்படும் இடத்தின் ஆழம் பார்க்காமல் வீடு வாங்காதீர்!

பொதுவாக கட்டடம் கட்டும்போது அதற்கு வலுவான நிலையில் அஸ்திவாரம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் பொறியாளர்களின் முழுமையான கண்காணிப்பில் கட்டப்படும் கட்டடங்களில் அஸ்திவாரம் அமைப்பதில் உரிய கவனம் செலுத்தப்படும். ஆனால், பெரும்பாலான இடங்களில் பொறியாளர்கள் பங்கேற்பு இருந்தாலும், உரிமையாளர்கள் இதில் சில தவறுகளை செய்கின்றனர். குறிப்பாக, ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடும் நபர் அதற்கான அடிப்படை வழிகாட்டுதல்களை கட்டட அமைப்பியல் பொறியாளர்களிடம் இருந்து பெற வேண்டும். இதன்படி, அந்த குறிப்பிட்ட இடத்தில் தற்போது கட்டப்படும் கட்டடத்தின் அளவை மட்டும் கணக்கிடாமல் அதில் எதிர்காலத்தில் ஏற்படும் தேவையை கருத்தில் வைத்து, வரைபடம் தயாரிக்க வேண்டும். இப்போது உங்களிடம் தரைதளம் மட்டும் கட்டுவதற்கு தான் நிதி இருக்கிறது என்றாலும், அதில் எதிர்காலத்தில் ஒரு தளமாவது கூடுதலாக கட்டும் நிலை வரலாம். எனவே, இதை கருத்தில் வைத்து கட்டடத்தின் அஸ்திவாரத்துக்கான வடிவமைப்பு, அளவு விஷயங்களை முடிவு செய்யுங்கள். நீங்கள் வீடு கட்ட தேர்வு செய்த பகுதி எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதில் துவங்கி பல்வேறு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, புதிய கட்டடத்துக்கான அஸ்திவாரத்தின் அடித்தளம் எங்கு, எப்படி நிலை நிறுத்தப்படுகிறது என்பதை துல்லியமாகக் கவனிக்க வேண்டும். நிலத்தில் மேல்மட்டத்தில் காணப்படும் மண் அடுக்குகளை தவிர்த்து, உறுதியான அடுக்கு வரும் வரை பள்ளம் தோண்ட வேண்டும். நீங்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவதானாலும் சரி, வேறு நிறுவனம் செயல்படுத்தும் திட்டத்தில் வீடு வாங்கினாலும் சரி, அதில் அஸ்திவாரத்தின் அடித்தளம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள். அந்த நிலத்தில் மண் அடுக்குகள் நிலவரம் என்ன, அது தொடர்பான பரிசோதனை அறிக்கை என்ன என்பது உள்ளிட்ட விஷயங்களை விசாரியுங்கள். இதில் அடுக்குமாடி கட்டடங்கள் என்றால், அந்த இடத்தில் பாறை அடுக்கு வரை பள்ளம் தோண்டி, அஸ்திவார அடித்தளம் நிறுத்தப்படும். ஆனால், தரைதளத்துடன் ஓரிரு தளங்கள் வரையிலான கட்டடங்கள் கட்டும்போது, இந்த அணுகுமுறையை கடைப்பிடிக்க இயலாது. அதேநேரம், களிமண் மற்றும் உறுதியற்ற மண் அடுக்குகளில் அஸ்திவாரத்தின் அடித்தளத்தை நிறுத்தக் கூடாது என்பதை கவனத்தில் வைத்து செயல்படுங்கள். கட்டுமான பொறியாளர் இன்றி தரைதளம் மட்டும் கட்டப்படும் இடங்களில் உறுதியான இடம் பார்க்காமல் மேலோட்டமாக அஸ்திவார அடித்தளம் நிறுத்தப்படுகிறது. இது பிற்காலத்தில் கட்டடத்தின் சுமை அதிகரிக்கும்போது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை