உள்ளூர் செய்திகள்

11 ஜூன் 2014 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

சதீஷின் குடும்பம், அழகான கூட்டுக் குடும்பம். அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள், 10ம் வகுப்பும், இளைய மகள் 8ம் வகுப்பும் படிக்கிறாள். மனைவி கமலா மிகவும் அன்பானவர். எப்போதும் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிலவும். இந்த நிலையில், அவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் துவங்கியது. திடீரென்று ஒருநாள் சதீஷுக்கு மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு, பொது மருத்துவரை சந்தித்தனர். அவரும் சில பொதுவான பரிசோதனைகளை செய்துள்ளார். அதில் மிக உயர் ரத்த அழுத்தம், 220/120௦ஆக இருந்துள்ளது. அதற்கான காரணத்தை கண்டறிவதற்காக, சிறுநீரகம் சீராக வேலை செய்கிறதா என, பரிசோதனை நடந்தது. ரத்தத்தில், 'கிரியாட்டின்' அளவை சோதனை செய்தபோது, 7.2 மி.கி., அளவு இருந்தது. இது, சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறி. இந்த நிலையில் தான், சதீஷ் என்னை வந்து சந்தித்தார். பின், சிறுநீரகம் ஏன் செயலிழந்தது என்பதை அறிந்து கொள்ள, 'அல்ட்ராசவுண்டு ஸ்கேன்' பரிசோதனை செய்தபோது, அதில் இரண்டு சிறுநீரகங்களும், கல் அடைப்பால் வீங்கி இருந்ததை கண்டுபிடித்தோம். ஆச்சரியம் என்னவென்றால், கல் அடைப்பு இருந்தும் அவருக்கு வலியோ, அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலோ இல்லை. சிறுநீரக கற்கள் உருவாக காரணம் மோசமான உணவு பழக்க வழக்கம். தண்ணீர் குறைவாக பருகுவது; மாமிசம் மற்றும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது; முந்திரி பருப்பு, பிஸ்தா, பாதாம் பருப்பு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது. சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஆகியவை. சிறுநீரகக் கற்கள், சிறுநீரகப் பாதையில் மிகவும் கீழே இறங்கியிருந்தால், கடுமையான எரிச்சல் மற்றும் சிறுநீர் வெளியேற்ற வேண்டிய உணர்வு அடிக்கடி ஏற்படும். சில நேரங்களில் இந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். சதீஷுக்கு , 'யூரிட்ராஸ்கோப்பி' எனும் அறுவை சிகிச்சையால் சிறுநீரக பாதையில் இருந்த இரண்டு கற்களை அகற்றினோம். பின், சிறுநீரக வீக்கம் குறைந்து, ஓரிரு நாட்களில் சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய துவங்கியது.அதேநேரம், 8 மி.மீ., அளவுக்கும் குறைவாக, சிறுநீரக கற்கள் இருந்தால் அவற்றை மாத்திரைகள் மூலம் வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளன. சதீஷ், சில நாட்களில் உடல் நலம் தேறி, சந்தோஷமாக வீடு சென்றார். அவரை வரவேற்க ஒட்டுமொத்த குடும்பமும் காத்திருந்தது.கோ.விவேகானந்தன்,சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், சேலம்,98404 12426


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !