22 ஏப்ரல் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
ராதா, அதிகபட்ச குழப்பத்திற்கிடையே என்னை சந்திக்க வந்திருந்தார். நிறைய மருத்துவர்களை சந்தித்து, எந்த தீர்வும் கிடைக்காததால், அவர், என்னிடம் வந்திருந்தார். ராதாவிற்கு பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. ஆனால் தினசரி கஷ்டப்படும் சூழ்நிலை. காரணம் 'சைனசைடிஸ். மழை வந்தாலோ அல்லது காற்றடித்தாலோ வானிலை மாறுவது போல ராதாவின் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருந்தது.மூக்கடைத்து கொள்வதால், சுவாசிக்கவே சிரமப்பட்டு கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், அவர் கர்ப்பம் தரித்திருந்தார். மற்ற மருத்துவர்களிடம் சென்று பார்த்தபோது தாய்மை அடைந்துள்ளதால், தற்போது எதுவும் செய்ய முடியாது என, கூறிவிட்டிருந்தனர். மேலும் காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.அதனால் செய்வதறியாது என்னிடம் வந்தார். நானும் சில பரிசோதனைகள் செய்தேன். பரிசோதனையின் முடிவில் ராதா மூக்கின் உட்புறம் முழுவதும், சதை வளர்ந்து, அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 'சைனஸ்' எதனால் வருகிறது? மூக்கில் 'சைனஸ்' பகுதி இணையும் இடத்தில் காற்று இல்லாமல், சளி சேர்ந்து தடை ஏற்பட்டு 'சைனசைடிஸ்' வருகிறது. அதுமட்டுமல்ல, மூக்கு துவாரத்தை பிரிக்கும் எலும்பு, வளைவாக இருப்பதாலும், 'சைனஸ்' பகுதிக்கு அருகிலுள்ள எலும்பு மற்றும் சதைகளின் முறையற்ற வளர்ச்சியாலும், 'சைனஸ்' வருகிறது,மூக்கில், ' சைனசைடிஸ்' மற்றும் ஒவ்வாமை இருப்போரின், 'சைனஸ்' அறைகளில் உள்ள சதை, மூக்கு துவாரத்தின் வெளியேயும், பின்புறத்திலும் வளர்ச்சியடையும். அது, 'பாலிப்' எனப்படும். இந்த நோயின் ஆரம்பகாலம் என்றால், மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். நோய் தீவிரம் அடைந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, இதன் அறிகுறி. தலை குனிந்தால் தாங்க முடியாத தலைவலி இருக்கும். ஒவ்வாமையுடன், 'சைனஸ்' இருந்தால், தொடர்ச்சியான தும்மல் இருக்கும்.ராதாவிற்கு, மருந்துகள் மூலம் மட்டுமே, பிரச்னையை சரி செய்ய தீர்மானித்து, பாதுகாப்பான 50 மைக்ரோ மில்லி கிராம் கொண்ட, 'ஸ்டீராய்டு' மருந்துகள் சில நாட்களுக்கு கொடுத்தும், மூக்கிற்கு சரியான 'ஸ்பிரே' கொடுத்தும், அவரது பிரச்னை, அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரி செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் 'சைனஸ்' பிரச்னை இல்லாமல் இருக்கிறார் ராதா.- சங்கர் நாராயணமூர்த்திகாது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர்ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை9444 468277