உள்ளூர் செய்திகள்

அலர்ஜியை அடக்கும் சிறுசின்னி

தோலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல், எரிச்சலுாட்டும் விஷயங்களில் ஒன்றாகும். தோலில் அரிப்பு, நமைச்சல், சிவத்தல், தடித்தல், கட்டிகள், குருக்கள், படை, சொறி ஆகியவற்றை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்று ஒவ்வாமை. எதற்கெடுத்தாலும் அலர்ஜி என்று அலறியடித்து ஓடுபவர்கள் ஏராளம். மாமிச உணவு, அதிலும் மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள், சிறு தானியங்கள், கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, எள்ளு, கொள்ளு, கடலை போன்ற உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இழைகளால் ஆன உடைகள், உள்ளாடைகள், பெல்ட், செருப்பு, அழகு பொருட்கள், செல்லப் பிராணிகளின் முடி மற்றும் தோல் திசுக்கள், விவசாய நிலங்கள், புல்வெளியில் இருந்து வெளிப்படும் மகரந்தம், சுனைகள், பூச்சிக்கடி, பல்லி, பூரான், கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சங்கள், புகை, வாசனை திரவியங்கள், ஆண்டுக்கணக்கில் வீட்டில் சேர்த்து வைத்துள்ள பழைய பொருட்களில் படிந்த துாசி, அழுக்கு, ஒட்டடை, பழைய தலையணை, மெத்தை ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள். ஒவ்வாமை சிலருக்கு தோலை பாதித்து அரிப்பாகவும், தடிப்பாகவும் இருக்கும். சிலருக்கு சுவாச மண்டலத்தைப் பாதித்து தும்மல், மூக்கடைப்பு, மூக்கு நீர் ஒழுகலாகவும், சிலருக்கு இரண்டும் சேர்ந்திருக்கும். இப்படி தினசரி இம்சையாக இருக்கும் ஒவ்வாமையை கொஞ்சம் பொறுமையாக கவனித்து காரணத்தை அறிந்து கொண்டால், அதை விரைவில் கட்டுப்படுத்தி, உரிய மருந்துகளால் குணமாக்கலாம். காரணத்தை அறியாமல் ஆண்டுக்கணக்கில் மருந்துகளை உண்டு அவதிப்படுவோரும் உண்டு. சித்த மருத்துவத்தில் ஒவ்வாமையை ஒடுக்கும் மூலிகைகள் நிறையவே உண்டு. குறிப்பாக சிறுசின்னி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு ஒருவிதமான நறுமணம் உண்டு. இதன் இலைகளை நிழலில் காயவைத்து துாளாக்கிய சூரணத்தை, ஒரு ஸ்பூன் காலை, மாலை இரு வேளையும், 48 நாட்கள் தொடர்ந்து உண்டு வர, எல்லாவிதமான ஒவ்வாமையும் கட்டுப்படும். இதே முறையில் அருகம்புல், தும்பை, துளசி, வல்லாரை ஆகியவையும் ஒவ்வாமையை சிறப்பாக கட்டுப்படுத்தும். சித்த மருத்துவர் ஆலோசனைப்படி திரிபலா சூரணம், பரங்கிப்பட்டை சூரணம், பலகறை பற்பம், சங்கு பற்பம், அருகம்புல் தைலம் போன்ற மருந்துகளை பயன்படுத்தி வர, அலர்ஜி இம்சையில் இருந்து விடுபடலாம். ஒவ்வாமை இருப்போர், அதை உண்டாக்கும் காரணத்தை தவிர்ப்பதும், மாமிச உணவு, மது, புளிப்பான உணவுகளை தவிர்த்து, இயற்கையான வாழ்வியல் மாற்றங்களை மேற்கொண்டால் விரைவில் நலம் பெறலாம். டாக்டர் மூலிகைமணி அபிராமி, மூலிகைமணி சித்த மருத்துவ மையம், சென்னை. 96000 10696, 90030 31796,consultabirami@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !