உள்ளூர் செய்திகள்

டாக்டரின் டைரி குறிப்பு

ஜனவரி, 8, 2016: இளமாறனுக்கு நடுத்தர வயது தான். ஆனால், அடிக்கடி உடல் சுகமில்லாமல் போனது. அரசு அலுவலகத்தில் வேலை. சமீபத்தில் தான், தாயார் காலமாகிவிட்டார். எனவே, ஏகப்பட்ட மனஉளைச்சலில் இருந்தார். வேலைக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பது. சோர்வாக உணர்வது என, நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் மயங்கி விழுந்துவிட்டார் என, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனால், என்னைச் சந்திக்க வந்தனர். சில மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின், அவரது பிரச்னையை அறிந்தோம். இளமாறனுக்கு ஆளையே முடக்கும், மல்டிபிள் ஸ்க்லெரோசிஸ் எனும் பாதிப்பு இருந்தது.இது ஒரு தனிச்சையான, நோய் எதிர்ப்பு மண்டல நோயாகும். அதாவது, கிருமிகள் வந்தால் எதிர்ப்பு காட்ட வேண்டிய நோய் எதிர்ப்பு மண்டலம், தன் உறுப்புகளையே எதிரிகளாக பாவித்து அவற்றை அழிக்கும். அறிகுறிகள் இது தான் என, குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால், மனிதனுக்கு மனிதன் அறிகுறிகள் மாறுபடும். இந்த நோய் உண்டானால், பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும். இந்த நோயை கண்டறிவது கடினம் தான். அடிக்கடி தலைச்சுற்றல், மயங்கி கீழே விழுவது ஆகியவை, இதன் பொதுவான அறிகுறிகள். அதன் பின், தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இது நாள்பட்ட நோயாகும். மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. கண் பார்வை மங்குதல், இரண்டிரண்டாக தெரிதல், சிலருக்கு மன நிலை கூட பாதிக்கப்படும். இது, எல்லாருக்கும் ஒரே மாதிரியான பிரச்னைகளை தருவதில்லை. மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை உண்டு. ஆனால், முற்றிலும் குணமாகாது. நோயின் தீவிரத்தை குறைத்து, உறுப்புகளின் ஆற்றலை சிறிது அதிகரிக்க முடியும் என்பது மட்டுமே ஆறுதலான விஷயம். இந்த நோயில் பலவகை உண்டு. இதில் குறிப்பாக, ரிலாப்சிங் ரெமிட்டிங் என்ற வகை அதிக மக்களை தாக்கும் நோய் என, சொல்கின்றனர். தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் பாதித்தவருக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இந்த நோய்க்கும், வைட்டமின் - டி குறைப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. வைட்டமின் - டி அதிகம் எடுத்துக் கொண்டால், மல்டிபிள் ஸ்க்லெரோசிஸ் வகையான முடக்கும் நோய்கள் வராமல் தடுக்கலாம். இளமாறனுக்கும் அவரது உறுப்புகளின் ஆற்றலை அதிகரிக்க சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !