உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் இனிப்பு!

உணர்வு ரீதியில் ஏற்படும் உபாதைகளான கோபம், பயம், பேராசை, பொறாமை, துக்கம், மனச் சோர்வு, இவற்றிற்கு முறையாக மருத்துவ ஆலோசனை பெற்று, தீர்வு காணவில்லை என்றால், தேவையற்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.மன ரீதியாக பாதிப்படைந்தவர் வெளிப்படுத்தும் அறிகுறிகள், நபருக்கு நபர் மாறுபடும். மன உபாதைகள் உடலளவிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்; உடலின் மீது போதுமான கவனத்தை நம்மால் செலுத்த முடியாமல் போகும்.சித்த மருத்துவத்தில் உடலும், மனமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவை. இவை இரண்டையும் ஒரு சேர தீர்வை நோக்கி நகர்த்தினால் மட்டுமே, முழுமையான தீர்வு கிடைக்கும். இதில், மருந்துகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது.உணவும், உணர்வும்!நாம் சாப்பிடும் உணவில் உள்ள சுவை, சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகளை துாண்டி, அதற்கேற்ப மூளையில் சுரக்கும் ஹார்மோன்களை துாண்டுகிறது. உதாரணமாக, இனிப்பு சாப்பிடும் போது, நம்மையும் அறியாமல், உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.இதற்கு காரணம், இனிப்பு சுவை நரம்பு செல்களைத் துாண்டி, உற்சாக உணர்வைத் தரும், 'டோபமின்' என்ற ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்கிறது; இதனாலேயே, குழந்தைகள் இனிப்பு சுவையை விரும்பி சாப்பிடுகின்றனர்.இது போன்று ஒவ்வொரு சுவையும் நம் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதை அடிப்படையாகக் கொண்டே, நம் பாரம்பரிய உணவு முறை இருந்தது. காலப் போக்கில் நம் உணவு முறை மாறி விட்டதால், அதிக அளவில் உடல், மன கோளாறுகள் ஏற்படுகின்றன.மனச்சோர்வு, மன உளைச்சல் உள்ளவர்கள், சாப்பிடும் உணவில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. உணவில் வசம்பு அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். கால் டீ ஸ்பூன் அளவு வசம்பு, ஒரு டீ ஸ்பூன் தனியா, ஐந்து உலர் திராட்சையை, 100 மில்லி நீரில் கொதிக்க வைத்து, வாரம் இரண்டு முறை குடிக்கலாம்; இது மனச் சோர்வை நீக்கி, உற்சாகத்தை தரும்.மதிய உணவில் இஞ்சி, மஞ்சள், தனியா, கோவைக்காய், வெள்ளைப் பூசணி, முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை, வல்லாரை, சுண்டைக்காய் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மனச் சோர்விற்கு கோவைக்காய் மிகச் சிறந்த மருந்து.இரவு உணவில், எண்ணெய் உணவுகளை தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது, நல்ல துாக்கத்தை தரும்.தவிர்க்க வேண்டியவைகுளிர்ச்சியான உணவு களை சாப்பிடுவது கூடாது. இவை, 'சைனஸ்' உபாதையை கொடுக்கும். தொடர்ந்து சைனஸ் பிரச்னை இருந்தால், சில மனப் பிரச்னைகள் வரலாம். உடலுக்கு அதிக உஷ்ணத்தை தரக்கூடிய காய்ந்த மிளகாய், எண்ணெய், பாலாடை, பனீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற பூமிக்கு அடியில் விளைவதை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அசைவ உணவுகளில் முட்டை, இறால், வேக வைக்காத சாலட், அரைகுறையாக வெந்த காய்கறிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.மனச்சோர்வு, மனப் பதற்றம் உள்ளவர்கள், முடிந்த வரை விரதம் இருப்பதையும் தவிர்க்கலாம். நெய், தனியா, பட்டை, புதினா, ஓமம், பச்சை கற்பூரம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆலோசனைஅதிகாலையில் எழுவது, இரவு, 10:00 மணிக்கு உறங்கச் செல்வது, காற்றோட்டமான சூழலில் இருப்பது, தினமும், 10 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி, விளக்கெண்ணெய் போன்ற உடல் கழிவுகளை வெளியேற்றும் மருந்து களை, மருத்துவரின் ஆலோசனையுடன், மாதம் ஒரு முறை சாப்பிட வேண்டும்.மாதம் ஒரு முறை, சூரிய வெளிச்சம் வருவதற்கு முன், உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்ற அடிப்படையான சில விஷயங்களை பின்பற்றினாலே உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.டாக்டர் மது கார்த்தீஸ், சித்த மருத்துவர், சென்னை. 99944 93687


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்