ஆங்கிலேயரின் பயிற்சிகளமாக இருந்த அழகர்மலை
மதுரையில் கள்வர்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காலம். அவர்களது இருப்பிடம், ஒளிந்து கொள்ளும் இடங்களை கண்டுபிடித்து, ஒடுக்குவது சவாலாக இருந்தது. கடைசியில் துப்பறிந்து சொன்ன ஒற்றர்கள் கண்டறிந்த இடம் அழகர்மலை.அடர்ந்த காடுகள் உள்ள மலைகள் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது. அதைதடுக்க கி.பி. 15ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தனது பெரும்படையை அனுப்பி அதிரடி தாக்குதல் நடத்தி கள்வர்களை முழுவதுமாக ஒடுக்கினார். மேலும் மன அமைதிக்காக, தென்றல் தவழும் இடத்தில் அழகர்மலையில் தங்க விரும்பி கோட்டை ஒன்றை கட்டினார். அதைச் சுற்றி பாதுகாப்பு அரண்களும் உறுதியாக அமைக்கப்பட்டன.அவரை தொடர்ந்து ஆட்சி செய்த நாயக்கர் மன்னர்கள், அதை பராமரித்து பயன்படுத்தினர். ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட்ட பின், இந்த கோட்டையை வசப்படுத்திக் கொண்டனர். படைவீரர்களை தங்க வைத்ததோடு, அதை ஆயுத கிடங்காகவும் பயன்படுத்தினர். அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை வீரர்கள் ஆயுத பயிற்சிக் களமாக பயன்படுத்தினர். பாதுகாப்பில்லாத வெடிகள், பல சமயம் கோட்டைக்குள் வெடித்ததால், கோட்டை வலுவிழந்து 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டது.அழகர்கோவில் முன் உள்ள நந்தவனத்திற்கு அருகில் இருந்த கோட்டை இருக்கும் இடம் தெரியவில்லை. தற்போது கோட்டை மதில் சுவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.- கே.ராஜா, யுனிபை டிரஸ்ட், மதுரை.