அலோபதி - உடலை காக்க விழிப்புணர்வு தேவை!
ரத்த சோகை, ஆரம்ப அறிகுறிகளான சிறு வேலை செய்வதற்கே மூச்சுவிட சிரமம், களைப்பு, மயக்கம், தோல் வெளுத்தல் இருப்பின், தகுந்த சிகிச்சை (உரிய காலத்திற்கு) பெறவேண்டும்.நம் உடலின் பிரதான உறுப்புகளில், இதயம் ஒரு மிக முக்கியமான உறுப்பு என்பது நாம் அறிந்ததே. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கான, பிராணவாயு மற்றும் பல்வேறு சத்துப் பொருட்களை கொண்டுள்ள, ரத்தத்தை இறைக்கும் இயந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். நம் இதயம் பாதிக்காமல் இருக்க, நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதயத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில், பொதுவாக, நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய முக்கியமானவற்றை பார்ப்போம்.ருமாட்டிக் காய்ச்சல் 'ஸ்ட்ரெப்டோகாகய் பாக்டீரியா' தொற்றால், சிறுவர்களை பாதிக்கும் நோய் இது. தொண்டைப் புண், சொத்தைப் பல் போன்ற காரணங்களால், இத்தொற்று ரத்தத்தில் கலந்து, காய்ச்சல், மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஏற்படுத்தும். ஒரு மூட்டிலிருந்து, மற்றொரு மூட்டிற்கு, பாதிப்பு பரவும். இக்காய்ச்சல், மூட்டுகளில் சிறிது பாதிப்பு ஏற்படுத்தினாலும், கடுமையாக பாதிக்கப்படுவது, இதய தசையும், வால்வுகளுமே. இந்நோயிலிருந்து சிறுவர்களை காப்பதில் தான், அவர்களின் வாழ்க்கையே அடங்கியுள்ளது.இந்நோய் பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் இதயத்தை எப்படி காப்பது:அ) ருமாட்டிக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் கண்டவுடன், காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவரிடம் காண்பித்து, உறுதிசெய்த பின், சில ஆண்டுகளுக்கு தொடர் சிகிச்சை (பெனிசிலின்) பெறவேண்டும். இதன் மூலம் அறுவை சிகிச்சை தவிர்க்க வாய்ப்புள்ளது.ஆ) தொண்டைப் புண், தொண்டையில் வறட்சி குழந்தைகளுக்கு ஏற்படும்பொழுது, அலட்சியம் செய்யாமல், அதற்கான பூரண சிகிச்சை பெறவேண்டும். அதன் மூலம் அ வகை பீட்டா-ஹீமோலைடிக் ஸ்ட்ரெப்டோகாகய் தாக்குதலிலிருந்து, இதயத்தை பாதுகாக்கலாம்.ரத்த சோகைஅனீமியா என்று சொல்லப்படும் ரத்த சோகை, இரும்புச் சத்து, போலிக் அமிலம், பி-12 போன்ற, முக்கிய சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படுவது. ரத்த சிவப்பணுக்களில், அசாதாரண மாற்றமும், ஹீமோகுளோபின் குறைபாடும் ஏற்படுவதால், பிரதான உடல் உறுப்புகளுக்கு, ஆக்சிஜன் மற்றும் சத்துப் பொருட்கள், ரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதயம் சீராக இயங்குவதற்கான, ஆக்சிஜன் மற்றும் நுண்சத்துப் பற்றாக்குறையினால், நாளடைவில் இதயம் செயலிழக்கிறது. இறுதியில் சிறுநீரகம் செயலிழக்கத் துவங்கும்.இதயத்தை காப்பது எப்படி?ரத்த சோகை, ஆரம்ப அறிகுறிகளான சிறு வேலை செய்வதற்கே மூச்சுவிட சிரமம், களைப்பு, மயக்கம், தோல் வெளுத்தல் இருப்பின், தகுந்த சிகிச்சை (உரிய காலத்திற்கு) பெறவேண்டும். பெண்களுக்கு, வெகுவாக இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதால், ஆரம்ப அறிகுறி கண்டவுடன், சிகிச்சை பெற வேண்டும். சிறுவர்கள், ஆண்டுக்கு இருமுறை, குடற்புழுநீக்கு சிகிச்சை பெறவேண்டும்.மாரடைப்புஇதய ரத்தக் குழாய்களின், Coronary Arteries உட்சுவரில் கெட்ட கொழுப்பு படிவதால் ஏற்படும் சிறு அடைப்பில் விரிசல் ஏற்பட்டு, ரத்தம் கெட்டியாவதால், முழு அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு ஆக்சிஜன் செல்லாமல், இதய தசை அழிவு ஏற்படுவதுதான் மாரடைப்பு ஆகும்.மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?அ) சர்க்கரை வியாதிக்கு உரிய சிகிச்சை வாழ்நாள் முழுவதும், எடுத்து வர வேண்டும். ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு தொடர்ந்து அதிகரித்திருப்பின், கொழுப்பு பொருட்கள் உட்கொள்ளாமலேயே, உடலில் தானாகவே கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். எனவே, குளூக்கோஸ் அளவு, தொடர்ந்து சாதா நிலையில் இருக்க வேண்டும். கெட்ட கொழுப்பு அதிகரிப்பு, இதய ரத்தக் குழாயில் அடைப்புக்கு வழி வகுக்கும்.ஆ) ரத்தக் கொதிப்பிற்கு தொடர் சிகிச்சை பெற வேண்டும். அதேநேரத்தில் ரத்த அழுத்தம் மிகக் குறைவாக ஆகாமல் கவனித்து சிகிச்சை பெற வேண்டும்.இ) கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளான, மாமிசம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற பொருட்கள் தவிர்க்க வேண்டும். நல்ல கொழுப்புள்ள பொருட்களான, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், மீன் போன்றவைகளை உணவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.ஈ) காய்கறிகள், கீரைகள், பழங்கள் (மருத்துவ ஆலோசனைப்படி) தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.உ) மருத்துவ ஆலோசனைப்படி உடற்பயிற்சி, நடை பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.ஊ) புகைப் பழக்கம் தவிர்க்க வேண்டும். புகையிலையில் உள்ள நிக்கோடின் நச்சு, இதய ரத்தக் குழாய் உட்சுவரை பாதிப்படையச் செய்வதால், கெட்ட கொழுப்பு, ரத்தக் குழாயில் எளிதாக படிகிறது. மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. மது நீரை தவிர்த்து, குடிநீரை பருகவேண்டும்.- டாக்டர். ரா.நாராயணசாமி, சமூக விழிப்புணர்வு சங்கம், சென்னை.