உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ஆஸ்துமா!

வெளியில் சென்று விளையாடினால், எல்லா வகையான மாசுகளுக்கும் குழந்தைகளின் உடல் பழகும். அதை எதிர்த்து, இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இன்று நிலைமை மாறிவிட்டது. விளையாடு வதற்கு மைதானம் இல்லை. வெளிக்காரணிகளை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருக வாய்ப்பு இல்லாததால் ஒவ்வாமை ஏற்பட்டு, ஆஸ்துமா பாதிப்பு வருகிறது. ஆஸ்துமா நோயாளிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றனர். குழந்தைகள் மத்தியிலும் இப்பிரச்னை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் மேம்பட்ட 'இன்ஹேலர் தெரபி, இம்மியூனோ தெரபி' என்று பலவித நவீன முறைகள் வந்து விட்டன. ஆஸ்துமா என்பது கட்டுப்படுத்தக் கூடிய வியாதி. அதிலும் சரியான நேரத்தில் சிகிச்சை செய்தால், நீண்ட காலத்திற்கு மருந்துகள் தேவைப்படாத அளவிற்கு மூன்றில் ஒருவரை குணப்படுத்தவும் முடியும். காச நோய் ஆஸ்துமா தவிர, நம் நாட்டில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் டி.பி., வரும் வாய்ப்பு உள்ளது. கொரோனா பற்றிய தெளிவு இருந்ததை போன்று இதற்கும் இருக்க வேண்டும். இது வேகமாக பரவக்கூடிய நோய். காச நோய் பாதிப்பு இருப்பவர்கள் நம் பக்கத்தில் வந்து இருமினால், நமக்கும் கிருமி தொற்று ஏற்படும். என்ன தான் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், நம் முகத்தில் ஒருவர் இருமும் போது 10 பாக்டீரியாக்கள் வெளிப்பட்டால், அத்தனையையும் நோய் எதிர்ப்பு சக்தி தடுக்காது. வலிமையான சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று பதுங்கி விடும். ஒரு பாக்டீரியா சென்றாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த தொற்றை வியாதியாக மாற்றாமல் இருக்க, நம் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், நோய் வராமல் கட்டுப்படுத்தும். உள்ளுக்குள் சென்ற பாக்டீரியாவை உடல் வெளியில் அனுப்ப முடியாது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், பாக்டீரியாவுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்த பாக்டீரியா வலிமை பெற்று நோயாக மாறிவிடும். அதனால், வாழ்க்கை முழுதும் உடற்பயிற்சி, சத்தான உணவு என்று நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் சீனிவாஸ் ராஜகோபாலா, சுவாச மண்டல சிறப்பு மருத்துவ ஆலோசகர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 80564 74138, 044 - 6115 1111drsrinivas_ra@apollohospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !