உள்ளூர் செய்திகள்

ஆயூர்வேதமருத்துவம் : நாள்பட்ட தலைவலியும் தீரும்

நோயாளிக்கு ஒரே சந்தேகம், இவ்வளவு வேகத்தில், ஆயுர்வேத மருந்தால் தலைவலியைக் குறைக்க முடியுமா, இதனால், தனக்கு தலைவலியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்குமா என்று!. ஆயுர்வேதத்தில், நாள்பட்ட தலைவலிகளுக்கு, சிறந்த சிகிச்சை முறைகள் உண்டு. நவீன மருத்துவத்தைச் சார்ந்த வலி நிவாரணிகள், செயலிழந்த நிலைகளில் கூட, முழுமையான குணம் ஆயுர்வேதத்தை நாடினால் கிடைக்கும். முப்பத்தேழு வயதான ஒரு பெண்மணிக்கு, மிகத் தீவிரமான தலைவலி இருந்தது. அந்தத் தலைவலி, பகல் பொழுதில் எப்போது வேண்டுமானாலும், சில சமயங்களில் நடு இரவிலும் வரும். முதலில், அவர் வலி நிவாரணி ஊசி, மருந்துகளையே நாடினார். பின், காது, மூக்கு, தொண் டை நிபுணர்களை ஆலோசித்தார். அவர்களால், தீர்மானமாக எதுவும் கண்டறியப்படவில்லை.

பின், ஒரு பிரபல மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரை நாடினார். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், ஒரு நீர்க்கட்டி தெரிந்தது. பரிந்துரைத்த மருந்துகள் பலன் எதுவும் தராத நிலையில், மாதத்திற்கு இருமுறை, தண்டுவடத்திலிருந்து நீரை எடுக்கும் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. இல்லையேல், நீரை வடியச் செய்வதற்கு, மூளையிலிருந்து சிறுநீர்ப்பைக்கு, ஒரு குtஞுணt பொருத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், அம்மருத்துவ நிபுணர், இம்முறையால், பலருக்குத் தொற்று நோய் வருவதற்கு, சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், ஆயுட்காலம் முழுவதும் நோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள நேரும் என்றும் எச்சரித்தார். அவருடைய தந்தையுடன் உடன் பிறந்தார் ஒருவருக்கும், இம்மாதிரி தலைவலி இருந்தது. மூளையிலிருந்து கட்டி அகற்றும் அறுவை சிகிச்சையும், அவருக்கு நடந்தது. இப்பெண்மணியின் நிலைமை பரிதாபகரமாகவே இருந்தது. தன் தலைவலிக்கு, அறுவை சிகிச்சை மட்டும் செய்வதில்லை என்று, தீர்மானமாக முடிவெடுத்தார்.

ஆயுர்வேத சிகிச்சை: முதல் ஆலோசனைக்கு வந்தபோது, முக்கியமாக அப்பெண்ணின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றும் படி அறிவுறுத்தினோம். தினசரி, தயிர் பருகும் பழக்கத்தை விட்டு விடுமாறு கோரினோம். இரண்டு வாரத்திற்குப் பின், வாந்தி சிகிச்சை (உடம்பில் தங்கியிருக்கும் கபத்தை வெளியேற்றுவது) அளிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு மருந்துகளும், மூக்குத் துவாரத்தில் இடும் சொட்டு மருந்தான அணு தைலமும், தலைக்குத் தைலமும் அளிக்கப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு, மருந்துகள் நிறுத்தப்பட்டு, அடிப்படை மருந்துகளான அணு தைலம் மற்றும் தான்வந்தரம் தைலங்கள் பரிந்துரைக்கப்பட்டு, இரண்டே மாதங்களில் நிவாரணம் பெற்றார்.

நாற்பத்தொரு வயது நிரம்பிய ஒரு பெண், சஞ்சீவனிக்கு வந்தார். வரும்போதே, தலைவலி. 'எனக்கு டாக்டர்கள், 'மைகிரேன் தலைவலி, சைனஸ் தலைவலி' என்றெல்லாம் கூறுகின்றனர். இதுவரை. அனேக டாக்டர்களை பார்த்தாகி விட்டது. சி.டி.ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளைச் செய்தும், இதுவரை என் தலைவலிக்கு ஒரு முடிவு இல்லை' என்று கூறினார்.வலி வரும்போது, குமட்டல் வாந்தி ஏற்படுவதாகச் சொன்னார். சில நேரங்களில், தலை கனக்கும். தலை குளித்தால் தலைவலி, மாதவிடாய்க்கு முன் தலைவலி, காரணமின்றித் தும்மல், கண்களைச் சுற்றிலும் வலி, கன்னங்களில் வலி என, தன் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போனார்.

தலைவலியுடன் வந்த நோயாளிக்கு, வந்த உடனே நிவாரணம் அளிக்க, ஒரு சூரணத்தை நுகர்வதற்குக் கொடுக்கப்பட்டது. சூரணத்தை நுகர்ந்த சில நிமிடங்களில், மூக்குத் துவாரத்திலிருந்து, தொண்டையில் சளி இறங்கியது. தலைவலியும் இறங்கியது. நோயாளிக்கு ஒரே சந்தேகம், இவ்வளவு வேகத்தில், ஆயுர்வேத மருந்தால் தலைவலியைக் குறைக்க முடியுமா, இதனால், தனக்கு தலைவலியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்குமா என்று! ஆயுர்வேத சிகிச்சையின் முதல் படியாக, நோயிற்குக் காரணமான பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, நோயாளிக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்தப் பெண், தினமும் பகலில் உறங்குவார். தயிர், பழரசங்கள், குளிர்பானங்கள் போன்றவை, அவருக்குப் பிடித்த உணவுகள்; இவை அனைத்தும், உடலில் கபத்தை வளர்க்கக் கூடியவை. உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி, ஆயுர்வேத மருந்துகளைத் துவங்கிய உடனே, அவரது பிரச்னைகள் பாதிக்கு மேல் குறைந்து விட்டன. ஆயினும், சீற்றமடைந்த தோஷத்தை வெளியே தள்ளும் சிகிச்சை மேற்கொண்டால் தான், வியாதிக்கு முழு நிவாரணம் கிடைக்கும். இந்த நோயாளிக்கு உகந்த சிகிச்சை, வமனம் என்னும் வாந்தியை வரவழைக்கும் சிகிச்சையாகும். எனவே, முதலாவதாக வமன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வமனத்திற்குப் பிறகு, நோய்க்கு உகந்த ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட்டன. தலைவலியைப் போக்க, தலைக்குத் தைலம், மூக்கிற்குச் சொட்டு மருந்து, உட்கொள்வதற்கு மருந்துகளும் கொடுக்கப்பட்டன.பல வருடங்களாகத் தீர்க்க முடியாத இந்த நோயாளியின் தலைவலி, சில வாரங்களில் முழுமையாக நீங்கியது!

- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா, சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம். sanjeevanifoundation@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !