கருப்பு உதடுகள் ரத்த சோகையின் அறிகுறி!
சிகரெட் பழக்கம் இல்லாத பலருக்கும், குறிப்பாக பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது மரபியல் காரணம். பெற்றோர், தாத்தா, பாட்டிக்கு உதடுகள் கருப்பாக இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் இப்பிரச்னை வரலாம்.உதடு இப்படி கருப்பாக இருக்கிறதே என்று தோன்றும். சிகரெட் பழக்கம் தவிர சில வகை விட்டமின் மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உதடுகள் கருப்பாகலாம். 'மெலனின்' என்கிற நிறமி அதிகரிப்பதால் ஏற்படும் 'பிக்மென்டேஷன்' என்கிற நிறமி அதிகரிப்பது, தரமற்ற லிப்ஸ்டிக், லிப் பாம்களில் உள்ள வாசனைப் பொருட்கள், நிறங்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமை, விளம்பரங்களில் பார்ப்பதை போன்று பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக, உபயோகிக்கும் கடினமான வேதிப்பொருட்கள் உள்ள பற்பசைகளை பயன்படுத்துவது, வெயிலில் அதிகமாக அலைவது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் தோல் வறட்சி, விட்டமின் சி, டி குறைபாடு போன்ற காரணங்களாலும் உதடுகள் கருப்பாகலாம்.அடிக்கடி உதடுகளை நாக்கால் ஈரப்படுத்துவதாலும் கருப்பாகலாம்.சரி செய்வது எப்படி?ஹார்மோன் சீரற்ற தன்மை இல்லாமல் இருப்பது தவிர, மற்ற காரணங்களால் உதடுகள் கருப்பானால் அதை சரி செய்வது சுலபம்.இதில் கவனிக்க வேண்டியது, வீட்டு வைத்தியம் என்ற பெயரில் எந்தவித எண்ணெயும் தடவக் கூடாது. பியூட்டி பார்லரில் சொல்லப்படும் 'டிப்ஸ்'களையும் பின்பற்றக் கூடாது.'மால்'களில் உள்ள கடைகளில், என் உதடுகளுக்கு இந்த லிப்ஸ்டிக் பொருத்தமாக இருக்கும் என்று, உதடுகளுக்கு ஒத்து வராததை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முகம் வறட்சியானால், தோலின் தன்மைக்கு ஏற்ற மாய்சரைசரை டாக்டரின் அறிவுரைப்படி பயன்படுத்துவதை போன்று உதடுகளுக்கும் உபயோகிக்க வேண்டும். பழச்சாறு, இளநீர் அதிகம் குடித்து, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ரசாயன பொருட்கள் கலந்த அடர்த்தியான நிறங்களில் உள்ள லிப்ஸ்டிக், ஒரு முறை தடவினால், பல மணி நேரம் அப்படியே இருக்கும் என்று விளம்பரப்படுத்தும் லிப்ஸ்டிக்குகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.காரணம், அடர் நிறத்தில் வாசனை அதிகம் உள்ள லிப்ஸ்டிக் எளிதாக உதடுகளில் பிரச்னையை ஏற்படுத்தும்.மென்மையான நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும், லிப்ஸ்டிக், லிப் பாம் தடவியதும் எரிச்சல், அரிப்பு, உதடுகளில் வெடிப்பு, உதடுகள் வெள்ளை நிறமாக மாறுவது தெரிந்தால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.உதடுகள் கருப்பாக இருப்பது ரத்த சோகையின் அறிகுறி. தவிர, உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டியது முக்கியம்.உதடுகளை தவிர, உடலின் மற்ற இடங்களில் தோலின் நிறம் அடர்த்தியாக இருப்பது, ஹார்மோன் சீரற்ற தன்மையால் இருக்கலாம். ஹார்மோன் பரிசோதனை செய்து, இதற்காக சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் கருப்பான உதடுகளுக்கு கெமிக்கல் பீல்ஸ், லேசர் சிகிச்சைகள் உள்ளன. ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை செய்தால் சுலபமாக சரி செய்யலாம். உதடுகள் நன்றாக இருந்தால் புன்னகை நன்றாக இருக்கும்; தன்னம்பிக்கை குறையாது.டாக்டர் பி.ஜெயலட்சுமி தேவி தோல் மருத்துவ ஆலோசகர் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணர்,அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மதுரை 94437 77353, 94877 81175dr.jayacosmoderm@gmail.com