"புண் இருக்கும்போது அறுவை சிகிச்சை செய்யலாமா
என் வயது 74. இரு முழங்கால் மூட்டிலும் தீராத வலி உள்ளது. அவற்றில் மூட்டு மாற்று சிகிச்சை செய்ய உள்ளேன். தற்போது பாதத்தில் புண் உள்ளது. இந்நிலையில் மூட்டுமாற்று சிகிச்சை செய்யலாமா?பொதுவாக எந்த சுத்தமான அறுவை சிகிச்சை செய்யும்போதும், அறுவை சிகிச்சை செய்யும் பகுதியின் அருகில், ஒரு புண் இருந்தால் அதற்கு முதலில் சிகிச்சை அளித்து குணமாக்க வேண்டும். கிருமிகள் தொற்றி இருந்தால் அதற்கான சிகிச்சை செய்து குணப்படுத்தவும், அந்தப் புண் ஆறியபின், மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பான மருத்துவமாகும்.என் வயது 62. முழங்கால் மூட்டுவலியை போக்க தினமும், 'இபுபுரோபன்' மருந்தை எடுத்து கொள்கிறேன். எப்போதும் எந்த மருந்தை உட்கொண்டாலும், சிறிது நேரம் வலி நிவாரணம் கிடைக்கும். இப்போது அதை உட்கொண்டால், வலி குறைவதில்லை. காரணம் என்ன?நீங்கள் எடுக்கும் இபுபுரோபென் மருந்து தினமும் எடுப்பது பாதுகாப்பானது அல்ல. இது சர்க்கரை அல்லது ரத்தஅழுத்த மாத்திரைகளைப் போல, தினமும் எடுத்துக் கொள்வதற்காக பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஏனெனில் இதில் பக்கவிளைவுகள் அதிகம். அந்த மருந்தை உட்கொண்டும் உங்களுக்கு வலி நிவாரணம் இல்லையெனில், உங்கள் மூட்டில், தேய்மானம் அதிகரித்து வருகிறது என்று பொருள். தற்போது உங்கள் பிரச்னைக்கு உள்ள சிகிச்சை முறை மூட்டு மாற்று சிகிச்சையே. மருந்துவரை உடனே கலந்து ஆலோசிக்கவும்.என் தாயின் வயது 66. இரு ஆண்டுகளாக, அவருடைய நடை மாறிவிட்டது. நேராக நடக்க முடியாமல், சாய்ந்து, சாய்ந்து நடக்கிறார். நேராக நடந்தால் இடுப்பில் வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன?வயது முதிர்ந்த பின், சாய்ந்து நடப்பது சகஜமாக காணப்படுவதுதான். ஒரு காலில் உள்ள வலியை குறைக்க, மறுகாலில் அதிகம் எடை போட்டு நடப்பதால், சாய்ந்து நடப்பதுபோல தெரிகிறது. இதற்கு மிகமுக்கிய காரணம், 'ஆஸ்டியோஆர்த்தரைட்டிஸ்' என்கிற நோயாகும். இது உங்கள் தாயாரின், இடுப்பு மூட்டிலோ, முழங்கால் மூட்டிலோ இருக்கும் வாய்ப்பு உள்ளது. தகுந்த பரிசோதனைகளை செய்தால், அதன் பாதிப்பை கண்டறிய முடியும்.-டாக்டர் கே.என்.சுப்பிரமணியன், மதுரை. 93442 46436.